Published:Updated:

`தமிழகத்தின் நீர் சேமிப்பு தோல்வி புதுச்சேரியையும் பாதிக்கும்' - கிரண் பேடி வேதனை

ஜெ.முருகன்
தனம் ஏ கே

”தமிழகத்தின் நீர் சேமிப்பு தோல்வி புதுச்சேரியையும் பாதிக்கும்” என்று துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கருத்து தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ( அ.குரூஸ்தனம் )

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சென்னையில் நிலவும் தண்ணீர் பிரச்னை தொடர்பாக தமிழக அரசையும், மக்களையும் கடுமையாக விமர்சித்துப் பேசியது தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழர்களை பற்றி கூறிய கருத்தை திரும்பப் பெறுவதோடு அதற்கு மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று கூறி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
விகடன்

இதுகுறித்து ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி மாநிலத்தின் வரைபடத்துடன் சமூக வலைத்தளத்தில் தனது கருத்தைப் பகிர்ந்தார். புதுச்சேரி மாநிலமும், தமிழகமும் பிரிக்கமுடியாத அளவுக்கு ஒன்றிணைந்த நிலப்பகுதிகள். புதுச்சேரியுடன் தமிழகத்தின் வாய்க்கால்களையும் வேறுபாடு காட்டாமல் நாங்கள் தூய்மைப்படுத்தியிருக்கிறோம்.

புதுச்சேரியும், தமிழகமும் இணைந்துதான் நிலத்தடி நீரை பகிர்ந்து கொள்கிறது. அதனால் தமிழகத்தின் நீர் சேமிப்பு தோல்வி புதுச்சேரியையும் பாதிக்கும் என்பதுதான் எங்கள் கவலை.சரியான நேரத்தில் புதுச்சேரியின் நீர்வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதால்தான் கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட நிலை இங்கு ஏற்படவில்லை. அதனால்தான் நாம் ஒன்றிணைந்து செயலாற்றுவது அவசியம் என்று நான் கூறுகிறேன்.

புதுச்சேரி ஆளுநர்
புதுச்சேரி ஆளுநர்
அ.குரூஸ்தனம்

இரண்டு மாநிலத்திற்கும் செல்லும் பொதுவான கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால்தான் தமிழகத்தின் குளங்களும், கிணறுகளும் பயனடைந்தன. அனைத்து அரசு அதிகாரிகளும், நீர்நிலைகளை பாதுகாக்க மக்கள், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக அரசின் உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகத்தின் தண்ணீர் பிரச்னை தொடர்பான விவகாரத்தில் புதுச்சேரி பாடம் கற்று கொள்வதுடன் நீர் பாதுகாப்பில் நீண்டகால திட்டங்களை செயல்படுத்துவதும் அவசியம்” என்று கூறியிருக்கிறார்.