Published:Updated:

ஆதவன் தீட்சண்யாவுக்கு மிரட்டல்: ``கருத்தை, கருத்தால் எதிர்கொள்ள வேண்டும்!” - தமுஎகச கண்டனம்

தனியார் செய்தித் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவுக்கு பா.ம.க-வினர் என்ற பெயரில் பலரும் அழைத்து மிரட்டல் விடுப்பதாக புகார் தெரிவித்திருந்தார். இதற்குக் கண்டனம் தெரிவித்து தமுஎகச அறிக்கை வெளியிட்டுள்ளது.

சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இதில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், பிற மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் பாராட்டு தெரிவித்திருந்தார்கள். விமர்சனரீதியாகவும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நடிகர் பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ்

போலீஸ் அதிகாரியான பிரகாஷ்ராஜ் திருட்டு நகைகளை வாங்கியவரை விசாரிக்கும்போது இந்தியில் பேசும் கதாபாத்திரத்தின் கன்னத்தில் அறைந்து தமிழில் பேசச் சொல்வதாக அமைக்கப்பட்ட காட்சி குறித்து, ``ஒரு வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி, உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர், கேள்வி கேட்காமல் இருக்க இந்தியில் பேசுவதாகத் தெரிந்தால், வேறு எப்படி நடந்துகொள்வார்? அது ஆவணப்படுத்தப்பட வேண்டும். இந்தப் படம் 1990-களைப் பின்னணியாகக்கொண்டது. அந்த கேரக்டருக்கு இந்தி திணிக்கப்பட்டிருந்தால் இப்படித்தான் ரியாக்ட் செய்திருப்பார்” என பிரகாஷ்ராஜ் விளக்கம் அளித்திருந்தார்.

``உங்களின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும்போது..." `ஜெய் பீம்' படத்துக்கு அன்புமணி கண்டனம்!

படத்தின் முக்கியக் கதாபாத்திரமான காவல்துறை அதிகாரியின் வீட்டில் அக்னி சட்டி அச்சடிக்கப்பட்ட காலண்டர் மாட்டியிருப்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அந்த காலண்டர் வன்னியர் சமூகத்தைக் குறிப்பதாகவும், உண்மைக் கதையில் அந்தக் காவல்துறை அதிகாரி வேறொரு சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால், வன்னியர் சமூகத்தின் மீது இருக்கும் வன்மத்தால் நடிகர் சூர்யா இப்படிக் காட்சிப்படுத்தியிருக்கிறார் என விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து இயக்குநர் ஞானவேல் உடனடியாக அந்தக் காட்சியில் இருந்த காலண்டரை மாற்றியதோடு `அந்தக் காட்சியில் இருக்கும் காலண்டர் புகைப்படம் திட்டமிட்டு வைக்கப்படவில்லை’ எனவும் விளக்கமளித்தார். இந்தக் குறிப்பிட்ட காட்சியை வைத்து பா.ம.க இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் ஒன்பது கேள்விகளை முன்வைத்து நடிகர் சூர்யாவுக்குக் கடிதம் எழுதினார். `` `ஜெய் பீம்’ படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட `பெயர் அரசியலுக்குள்’ சுருக்க வேண்டாம் என நடிகர் சூர்யா அன்புமணிக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சர்ச்சைக்குள்ளான ஜெய் பீம் காட்சி
சர்ச்சைக்குள்ளான ஜெய் பீம் காட்சி

நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி எழுதிய கடிதமும், அதற்கு சூர்யா-வின் பதில் கடிதம் குறித்தும் தனியார் செய்தித் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா தெரிவித்த கருத்துகளுக்காக அவர் மிரட்டப்படுவதாக புகார் தெரிவித்திருந்தார். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவுக்கு ஆதரவாக பா.ம.க-வுக்குக் கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`` `ஜெய் பீம்: அன்புமணி Vs சூர்யா’ என்ற தலைப்பிலான விவாதம் தனியார் தொலைக்காட்சியில் 12.11.2021 அன்று மாலை 8-9 மணிக்கு நடந்தது. இதில் த.மு.எ.க.ச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்ட பிற கருத்தாளர்கள் தமது நிலைப்பாடுகளை வெளிப்படையாக முன்வைத்தனர். அந்த விவாத நிகழ்ச்சி முடிந்த நிமிடம் முதல் தற்போதுவரை தோழர் ஆதவன் தீட்சண்யாவின் தொலைபேசி எண்ணுக்கு அறிமுகம் இல்லாத பலரும் தங்களை பா.ம.க-வினர் என கூறிக்கொண்டு அவரைத் தரக்குறைவாகப் பேசிவருகிறார்கள். ஆதவன் தீட்சண்யாவின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களிலும் அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கி, கீழ்த்தரமான பதிவுகளை எழுதிவருகிறார்கள். கருத்துரிமைக்கு எதிரான இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டனம் செய்கிறோம்.

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா

கருத்தை, கருத்தால் எதிர்கொள்ள முடியாத சக்திகள் இப்படி தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடுவதை ஜனநாயகத்திலும் கருத்துரிமையிலும் நம்பிக்கைகொண்ட அனைவரும் கண்டனம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இது தொடருமேயானால் சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கும் சங்கம் செல்லும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என அந்த அறிக்கையில் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு