Published:Updated:

`பொருளாதார நலனுக்காக இந்தப் பதிவு’ - பா.ஜ.க அமைச்சர்களைக் கலாய்த்த பிரியங்கா காந்தி

இந்தியாவின் பொருளாதார மந்தநிலை பற்றிய மத்திய அமைச்சர்களின் கருத்துகளை விமர்சித்துள்ளார் காங்கிரஸின் பிரியங்கா காந்தி

Priyanka Gandhi
Priyanka Gandhi

அதிக மதிப்புகொண்ட பொருளாதார நாடுகளில் உலக அளவில் ஐந்தாவது இடத்திலிருந்த இந்தியா தற்போது ஏழாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. முப்பது ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்தித்துக்கொண்டிருக்கிறது. உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் விற்பனை சரிவு, பல லட்சம் பேரின் வேலை இழப்பு, லாபம் சரிவு என்பதுதான் இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை.

Nirmala sitharaman -Piyush goyal
Nirmala sitharaman -Piyush goyal

இந்தியப் பொருளாதார வீழ்ச்சியைப் பல நிபுணர்களும் அரசியல் தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பொருளாதார மந்த நிலையை மறைக்கவே பல புதிய மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவருவதாகவும் பலர் கொதிக்கின்றனர். இது இப்படியிருக்க மற்றொரு புறம் பொருளாதார மந்தநிலைக்குச் சரியான காரணம் கூற முடியாமல் பல அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.

`எதிர்பார்த்ததைவிடவும் மிகவும் பலவீனம்!'- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஐ.எம்.எஃப்

ஆட்டோ மொபைல் துறையின் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களின் சேவையே காரணம் என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இவர் பேசிய சர்ச்சை அடங்கும் முன்பே, பொருளாதாரத்தை உயர்த்துவதை கணிதப் பார்வையில் பார்க்கக் கூடாது, புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்த ஐன்ஸ்டீனுக்கு கணக்கு தேவைப்படவில்லை எனப் பேசி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் சர்ச்சையில் மாட்டிக்கொண்டார்.

இந்நிலையில் இவை அனைத்தையும் சேர்த்து, பொருளாதார மந்தநிலை பற்றி மத்திய அரசை விமர்சித்துள்ளார் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி. இது தொடர்பாக கிரிக்கெட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரியங்கா. அதில் ஓர் அணியின் பேட்ஸ்மேன் பந்தை அடிக்கிறார், அதை எதிர் அணியில் உள்ள வீரர் சிரமப்பட்டுச் சரியாகப் பிடித்து விடுகிறார்.

இதை குறிப்பிட்டு அதனுடன், ``சிறந்த கேட்ச் பிடிக்கக் கடைசி வரை பந்தின் மீது கண் வைத்திருக்க வேண்டும். இதுதான் உண்மையான விளையாட்டு உணர்வு. இல்லாவிட்டால் புவியீர்ப்பு விசை, கணிதம், ஓலா, ஊபர் போன்றவை மீதுதான் குற்றம்சாட்ட வேண்டியிருக்கும். இந்தியப் பொருளாதார நலனுக்காக இதை வெளியிட்டுள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு சமூகவலைதளத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.