Published:Updated:

ஓ.பி.சி இட ஒதுக்கீடு திருத்த மசோதாவால் மாநில அரசுகளுக்கு கிடைக்கும் நன்மை என்ன? - ஒரு பார்வை

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் அனைத்துக் கட்சிகளும் ஒரு மனதாக, எந்த எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றிய மசோதா ஓ.பி.சி-களுக்கான இட ஒதுக்கீட்டுத் திருத்த மசோதா. அதற்கான காரணம் என்ன, அந்த மசோதாவால் மாநில அரசுகள், மக்கள் அடையும் நன்மைகள் என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் பெகாசஸ் மற்றும் வேளாண் திருத்தச் சட்டங்களை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால், நாடாளுமன்றம் நடந்த அனைத்து நாட்களும் அவை கூடுவதும் ஒத்தி வைப்பதுமாகவே இருந்தது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் 671 சாதியினர் பயனடைவார்கள் எனக் கூறப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை மாநில, யூனியன் பிரதேச அரசுகளே கண்டறியும் வகையில் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக 127-வது அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மசோதா ஆகஸ்ட் 9-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சமூக நீதி-அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமாா் இதைத் தாக்கல் செய்த இந்த மசோதா ஆகஸ்ட் 10-ஆம் தேதி விவாதம் நடைபெற்று ஆகஸ்ட் 11-இல் நிறைவேற்றப்பட்டது. மேலும், இட ஒதுக்கீட்டு உச்சவரம்பை அந்தந்த மாநில சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அடுத்தகட்டமாக எழுந்துள்ளது.

நாடாளுமன்றம் - எதிர்க்கட்சிகள் போராட்டம்
நாடாளுமன்றம் - எதிர்க்கட்சிகள் போராட்டம்

இரு அவைகளிலும் நிறைவேறியதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட்ட பின்னர், இந்த மசோதா சட்டமாக அமலாகும்.

மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு! - மத்திய அரசு முடிவு

இதர பிற்படுத்தப்பட்டோர் சட்டத் திருத்த மசோதாவுக்குக் கிட்டத்தட்ட அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளித்து வாக்களித்துள்ளன. பா.ஜ.க-வின் அனைத்து திட்டங்களையும் கொள்கை அளவில் எதிர்க்கும் கட்சிகள்கூட இதற்கு ஆதரவளித்துள்ளன. எதிர்ப்பே இல்லாமல் ஆதரிக்கும் அளவுக்கு ஓ.பி.சி இட ஒதுக்கீடு திருத்த மசோதாவால் மாநில அரசுகளுக்கு என்ன நன்மை இருக்கிறது என தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தியிடம் பேசினோம் “ஓ.பி.சி இட ஒதுக்கீடு தொடர்பாக நீண்ட நாளாக அனைத்து மாநிலங்களும் கோரிக்கை வைத்துவந்தன. மாநிலங்களுக்கு இருந்த உரிமை மறுக்கப்பட்டிருந்ததால் ஒவ்வொரு முறையும் பட்டியலில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரைச் சேர்க்க வேண்டும் என்றால் ஒன்றிய அரசை அணுக வேண்டிய நெருக்கடியைச் சந்தித்து வந்தன. மேலும், இதர பிற்படுத்தப்பட்ட மக்களைக் கண்டறிந்து கணக்கிடும் பணிகளை மாநில அரசுகளால் துரிதப்படுத்த முடியாமல் இருந்தது.

இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி
AKSHITHATEKKI

தமிழ்நாட்டில் பல சமூக மக்கள் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமெனத் தொடர் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். ஆனால், நாம் மத்திய அரசின் பதிலுக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. மக்கள் தொகையைப் பராமரிப்பது, இட ஒதுக்கீடு மற்றும் இதர சலுகைகளை அளிப்பதிலும் மாநிலங்களுக்கு பல்வேறு சிக்கல்கள் இருந்தன.” என்றவர்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

”ஒன்றிய அரசுக்கு மாநிலத்தில் இருக்கும் சமூகங்களின் சமூகப் பொருளாதார நிலைமை, அதன் மக்கள் தொகைப் பெருக்கம் தொடர்பாக முழுப் புரிதல் இருக்க வாய்ப்பில்லை. இட ஒதுக்கீட்டிலும் ஒன்றிய அரசுக்கு நம்பிக்கை இல்லை. தற்போது மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தால் இனி மேலே சொன்ன எதற்காகவும் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. பா.ஜ.க., ஜனசங்கம் போன்ற கட்சிகள் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டைத் தொடர்ந்து எதிர்த்து வந்தார்கள். தற்போது அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பதன் மூலம் அவர்களுக்குச் சமூகநீதி குறித்த புரிதலோ மக்களின் தேவையோ தெரிந்துவிட்டது என்று பொருளில்லை. அடுத்த ஆண்டு சில மாநிலங்களின் தேர்தலையொட்டித்தான் இந்தச் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறார். எது எப்படியோ மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தி.மு.க உள்ளிட்ட சில முக்கிய எதிர்க்கட்சிகள் இதை ஆதரித்திருக்கிறார்கள்.

பொருளாதார இட ஒதுக்கீடு
பொருளாதார இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு குறித்து மாநிலங்களுக்குக் கிடைத்திருப்பது கூட்டாட்சித் தத்துவத்தின் மிக முக்கியமான நகர்வு. 80 சதவிகிதம் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நன்மை அளிப்பது என்பது மட்டுமல்ல சமூக நீதி, மாநில சுயாட்சி குறித்துத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் மாநிலங்களுக்கான வெற்றி. மாநிலங்களுக்கு வெற்றி என்றாலே அது மக்களுக்கும் நன்மை தருவதாகத்தான் இருக்கும்” என விளக்கம் அளித்தார்.

மத்திய அரசின் நிலைப்பாடு குறித்தும், இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதை பா.ஜ.க சொந்தம் கொண்டாடத் தகுதியில்லை என எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்கள் குறித்தும் பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டோம் “வரலாறு தெரியாமல் எதையாவது பேசுவது என்பதே சிலருக்கு வேலையாகப் போய்விட்டது. மண்டல் ஆணையத்தை உருவாக்கியதே வாஜ்பாயும், அத்வானியும் அமைச்சர்களாக மொரார்ஜி தேசாயின் அமைச்சரவைதான். 1989-இல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துவோம் எனத் தேர்தல் அறிக்கை வெளியிட்டது பா.ஜ.க-தான். சமூகநீதி என்று சொன்னால் அதற்காகவே இருக்கும் கட்சி என்று சொன்னால் அது பா.ஜ.க மட்டும்தான். 1984 முதல் 89 வரை மண்டல் ஆணையத்தைக் கிடப்பில் போட்டது காங்கிரஸ் அரசு. அதற்குத் துணை நின்றது தி.மு.க. மேலும் இந்த மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துகிறோம் என்று சொன்னதும் ‘அது இந்த நாட்டை சாதிய ரீதியில் பிளவுபடுத்தும் செயல்’ என்று சொன்னது ராஜீவ் காந்தி. 1984-இலிருந்து பாரதி ஜனதா கட்சி அகில இந்திய ஓ.பி.சி இட ஒதுக்கீட்டிற்குக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

2006-இல் மத்திய கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு குறித்து பேச்சு எழுந்த போதுகூட அகில இந்திய ஒதுக்கீடு குறித்து யாரும் பேசவில்லை. 2015-இல் சலோனி குமாரி வழக்கில் பா.ஜ.க-தான் அகில இந்திய ஒதுக்கீட்டைத் தரத் தயார் என உத்தரவாதம் அளித்தோம். சமுகநீதியின் வழியில் மக்களின் நன்மை நோக்கித்தான் பா.ஜ.க எப்போதும் இயங்கும். இந்த உண்மைகளை மறைத்து அவதூறு பரப்புவதே பலருக்கும் வேலையாக இருக்கிறது” என விமர்சனங்களுக்குப் பதிலளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு