இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தொடங்கப்பட்ட கல்லூரியில் ஆசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவித்தது, இல்லம் தேடிக் கல்வித் திட்டம் எல்லாமே விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன. புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் ஆசிரியர்களுக்கு ஏழு நாள்கள் கலாசார பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக ஆசிரியர் குறித்த விவரங்களை அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கையை தி.மு.க அரசு கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகம் செய்கிறது என்றும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
இதையொட்டி ``ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பது ஏற்கெனவே பலமுறை தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. மேலும், மாநில அளவிலான கல்விக் கொள்கையை வகுத்திட, கல்வியாளர் அடங்கிய குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும். மாணவர்களின் கல்விநலனைக் கருத்தில்கொண்டு, தன்னார்வலர்கள் அரசுப் பள்ளிகளின் நல்லெண்ணத் தூதுவர்களாக, ஆசிரியர்களுக்கும், பள்ளிகளுக்கும், சமூகத்துக்கும் இணைப்புப் பாலமாக செயல்படுவர். எனவே, இந்தத் திட்டத்தின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு, அனைத்துத் தரப்பு மக்களும், இந்தத் திட்டத்தை ஆதரித்து, நம் மாணவச் செல்வங்களின் எதிர்காலத்துக்கு உதவிடும் வகையில், அரசுப் பள்ளிகளை வலுப்படுத்த, கைகோக்க வேண்டும்” எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறது தி.மு.க அரசு. இன்னும் எத்தனை நாள்களுக்கு இதே உறுதியோடு அரசு இருக்கும், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பவை குறித்து ஓர் அலசல்...
பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்... ``தேசிய கல்விக் கொள்கை தேவையில்லை என்பது தி.மு.க-வின் நிலைப்பாடு. இந்தி திணிப்பு இல்லை, மும்மொழிக் கொள்கையில் மத்திய அரசின் தலையீடு இல்லை எனத் தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக இவர்கள் வைத்த அனைத்து வினாக்களுக்கும் முறையாக விடையளித்திருக்கிறோம். தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருக்கும் பரிந்துரைகளைச் செயல்படுத்தினால் தமிழ்நாடு மாணவர்களுக்குத்தான் நன்மை. தரமான கல்வி போதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். கல்வித்துறையில் புரையோடியிருக்கக்கூடிய ஊழல்கள் புதிய கல்விக் கொள்கையால் அகற்றப்பட்டுவிடும் என்ற அச்சத்தால்தான் இதைச் செயல்படுத்தவே கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இது ஒரு சட்டமில்லை. இந்தியாவில் கல்வி எப்படியிருக்க வேண்டும் என்பது பற்றிய கொள்கைதான்.

மாநிலப் பாடத்திட்டத்தில் அமல்படுத்தாமல்விட்டால் புரிந்துகொண்டு செயல்படுத்தவேண்டியது மிக அவசியம். மாநில அரசுகளின் விருப்பப்படியே கல்வியை வரையறுத்துக்கொள்ளலாம். எதிர்காலத்தில் கற்றலில் மாணவர்களுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வைப் போக்க வேண்டுமானால் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை அரசு உணர வேண்டும்” என்றார்.
புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தாமல் இருப்பது சாத்தியமா என தி.மு.க-வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழ் கா.அமுதரசனிடம் கேட்டோம்... ``புதிய கல்விக் கொள்கை என்பது பெயரளவில் மட்டும்தான். ஆனால், உள்ளபடியே அது குருகுலக் கல்வி என்கிற இந்துத்துவ வேதக்கல்வி என்னும் விஷ உருண்டைக்கு பூசப்பட்ட சர்க்கரைப் பூச்சு, அவ்வளவே. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை சம்ஸ்கிருதம், இந்தியைத் திணிப்பது மட்டுமல்ல... மாநில உரிமையை முற்றிலும் பறிக்கும் செயல். ஏற்கெனவே கல்வியை ஒத்திசைவுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டுமென்று போராடிக்கொண்டிருக்கும் சூழலில் முற்றிலுமாக மாநிலங்களின் கைகளிலிருந்து வலுக்கட்டாயமாகப் பறிக்கும் செயல்தான் இந்தப் புதிய கல்விக் கொள்கை. இது மொழிச்சுமை, தேர்வுச்சுமை உள்ளிட்ட சுமைகளைத்தான் குழந்தைகளுக்குக் கொடுக்கிறது. `குழந்தைகளுக்கு இரண்டு வயதிலிருந்து எட்டு வயதுவரை கற்கும் ஆற்றல் அதிகமாக இருக்கிறது’ என ஓர் ஆய்வு சொல்கிறது. எனவே, மூன்று மொழிகளைக் கற்றுத் தரப்போகிறோம் என்கிறது ஒன்றிய அரசு. ஆனால், அது என்ன ஆய்வு... யார் நடத்தினார்கள் என்பது பற்றிய விளக்கமோ, குறிப்போ இல்லை. இந்தியாவிலுள்ள பிற மாநில மொழிகளும் அழிந்துபோகும் சூழலை நோக்கி இந்தக் கல்விக்கொள்கை இழுத்துச் செல்கிறது.

தாய்மொழிக் கல்வியில் கற்பிக்க அல்லது கற்க ஊக்கப்படுத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டே, இந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் திணிக்கிறது ஒன்றிய அரசு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அட்டவணை 7 மாநில மற்றும் ஒன்றிய அரசின் பங்களிப்பை பற்றிச் சொல்லும்போது `பல்கலைக்கழகத்தை உருவாக்குதல், ஒழுங்குபடுத்துதல் ஆகிய உரிமைகள் மாநில அரசுக்கு மட்டுமே உரியவை. ஒன்றிய அரசுக்கு அந்த உரிமையும் இல்லை’ எனச் சொல்லப்பட்டிருக்கிறது” என்றவர்…
``புதியக் கல்விக் கொள்கை, மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ள உதவுகிறது. பேராசிரியர்கள் நியமனத்திலிருந்து துணைவேந்தர் நியமனம் வரை, ஒன்றிய அரசுதான் தீர்மானிக்கும். மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வைப்போல உயர்நிலைப் பள்ளியை முடித்தவுடன், பொதுவான தேர்வு நேஷனல் டெஸ்ட்டிங் ஏஜென்சி மூலம் நடத்தப்படும். இந்த மதிப்பெண்ணைக்கொண்டே கல்லூரிகளில் சேரலாம் என்கிறது புதிய கல்விக் கொள்கை. மாநில அரசின் கல்வி முறை, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை ஒன்றிய அரசு நேரடியாகக் கபளீகரம் செய்கிறது. தெளிவான விளக்கம் எதுவும் இல்லாமல், முழுக்க முழுக்க மொழித் திணிப்பு, மாநில உரிமை பறிப்பு, கல்வியைப் புதிய வடிவில் தருகிறோம் என்று சொல்லி குழந்தைகளிடமிருந்து மாணவர்களிடமிருந்தும் கல்வியை அந்நியப்படுத்துகிறது.

எனவேதான், `குலக்கல்வி திட்டத்தின் மறுபதிப்பாகச் சமூகநீதியை அறவே ஒழிக்கும் வகையில் அது பற்றிய முக்கியத்துவத்தையே தராமலும், ஆர்எஸ்எஸ் கொள்கைப்படி உருவாக்கப்பட்ட ஒன்றிய அரசின் கல்வித் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்காது’ என்று திமுக அரசு கொள்கை முடிவாகவே அறிவித்திருப்பதோடு `தமிழ்நாட்டுக்கு என்று தனியாகக் கல்விக் கொள்கை வகுக்கப்படும். அதற்குக் கல்வியாளர்கள் அடங்கிய குழுவும் அமைக்கப்படும்’ என்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்’’ என மேலும் விளக்கமளித்தார்.