பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி காந்திநகரின் புறநகர்ப் பகுதியிலுள்ள ராய்சன் என்ற இடத்தில் தனது இளைய மகன் பங்கஜ் மோடியுடன் வசித்துவருகிறார். மோடியின் தாயாருக்கு இன்று 100-வது பிறந்தநாள். இதையடுத்து நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத்துக்கு வந்தார். அவர் குஜராத்தில் 21 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைத் தொடங்கிவைக்கிறார். முன்னதாக 100-வது பிறந்தநாளில் தனது தாயாரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். மேலும் அவருக்கு பாதபூஜை செய்து வழிபட்டார்.
100-வது பிறந்தநாளுக்கு முன்பாக பிரதமர் மோடியின் தாயார் இருக்கும் பகுதியில் உள்ள சாலை ஒன்றுக்கு ஹீராபென் பெயரைச் சூட்ட காந்தி நகர் மாநகராட்சி, நிர்வாகம் இரண்டு நாள்களுக்கு முன்பு முடிவு செய்திருந்தது. இதை மேயர் ஹிதேஷ் அறிவித்திருந்தார். ஆனால் திடீரென தனது முடிவை மாநகராட்சி நிர்வாகம் ஒத்திவைத்திருக்கிறது.
இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், சாலைகளுக்குப் பெயர் சூட்டுவது தொடர்பான கொள்கை இன்னும் வகுக்கப்படாத காரணத்தால், பிரதமரின் தாயார் பெயரை சாலைக்கு சூட்டுவது தொடர்பான திட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்றும், சாலைகளுக்குப் பெயர் வைக்கும் கொள்கை உருவாக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடியின் தாயார் பெயர் சூட்டுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும், தற்போதைக்கு இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹீராபென் மோடிக்கு 100-வது வயது தொடங்கிய பிறகு சாலைக்கு அவரது பெயர் வைக்கப்படலாம் என்று தெரிகிறது. இதற்காகத்தான் முன்கூட்டியே பெயர் சூட்டும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. ஹீராபென் மோடி தனது 100-வது பிறந்தநாளை தன் மகன் வீட்டில் கொண்டாடுகிறார். அவருக்குக் காலையிலிருந்தே அவருடைய உறவினர்களும், நண்பர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
