`இந்த நாள் எனக்கு மறக்கமுடியாத நாள்!'- திருமண விழாவில் சூசகமாகப் பேசிய உதயநிதி

திருமண விழாவில் கட்சிப் பதவி குறித்து சூசமாகப் பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்...
சென்னையில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி மற்றும் பொருளாளர் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இதில் மணமக்களை வாழ்த்திப் பேசிய ஸ்டாலின் மணமேடையிலேயே துரைமுருகனை கலாய்த்துப் பேசினார். அதில், ``அண்ணன் துரைமுருகன் எப்போதும் சட்டசபைக்கு லேட்டாகத்தான் வருவார். லேட்டா வந்தாலும் சில லேட்டஸ்ட் சப்ஜெக்ட்ட பேசிவிடுவார். அதற்கான ஆற்றல் அவரிடம் உண்டு. இது அவரின் இயல்பு" என்று கலாய்த்தார்.
ஸ்டாலினுக்கு முன் பேசிய அவரது மகன் உதயநிதி, ``மணமக்களுக்கு இந்த நாள் எப்படி மறக்கமுடியாத நாளோ அதேபோல் எனக்கும் இன்று முக்கியமான மறக்கமுடியாத நாளாகும். இப்படி ஏன் சொல்லுகிறேன் என்றால், என்னை அண்ணன் கலாநிதியின் குடும்பத்தில் ஒருவராக ஏற்று இந்தத் திருமணத்தில் பேச வைத்துள்ளார்கள். இதற்காக அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என உதயநிதி கூற அரங்கத்தில் இருந்த கட்சியினர் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

தி.மு.கவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றாகக் கருதக்கூடிய இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதைத்தான் உதயநிதி இப்படி சூசகமாகப் பேசியுள்ளார் என அரசியல் பிரமுகர்கள் கூறியுள்ளனர்.