Published:Updated:

சுங்கச்சாவடி... கஞ்சா, அண்ணா பல்கலை, அர்ச்சகர் - அரசியல் தலைவர்களின் இன்றைய அறிக்கைகள் ஹைலைட்ஸ்!

அரசியல் தலைவர்களின் இன்றைய அறிக்கைகள் ஹைலைட்ஸ்

தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் இன்றைய தினம் வெளியிட்டிருக்கும் முக்கியமான அறிக்கைகளை சுருக்கமாகக் காண்போம்!

சுங்கச்சாவடி... கஞ்சா, அண்ணா பல்கலை, அர்ச்சகர் - அரசியல் தலைவர்களின் இன்றைய அறிக்கைகள் ஹைலைட்ஸ்!

தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் இன்றைய தினம் வெளியிட்டிருக்கும் முக்கியமான அறிக்கைகளை சுருக்கமாகக் காண்போம்!

Published:Updated:
அரசியல் தலைவர்களின் இன்றைய அறிக்கைகள் ஹைலைட்ஸ்

தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் இன்றைய தினம் வெளியிட்டிருக்கும் முக்கியமான அறிக்கைகளை சுருக்கமாகக் காண்போம்!

`சுங்கச்சாவடி கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தக்கூடாது' - த.வா.க தலைவர், தி.வேல்முருகன் எம்.எல்.ஏ.

``இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 29,666 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் 566 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் 5,400 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன. இந்தச் சுங்கச்சாவடிகள் மூலம் தினமும் ரூ.100 கோடிக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வேல்முருகன்
வேல்முருகன்

சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அதன்படி, ஏப்ரல் 1, செப்டம்பர் 1 என இரண்டு கட்டங்களாக சுங்கக் கட்டணம் ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிக்க தொடங்கியிருக்கும் நிலையில், தற்போது சுங்க கட்டணம் உயர்த்தப்பட இருப்பது பொதுமக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தற்போதைய சுங்கக் கட்டண உயர்வால் ஏற்கெனவே நிதி நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும், கூடுதல் செலவு ஏற்பட்டிருக்கிறது. சுங்கக் கட்டண உயர்வால் மறைமுகமாகச் சரக்கு வாகனங்களின் வாடகைக் கட்டணம் அதிகரித்து அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும். எனவே, இந்த சுங்கக் கட்டணம் உயர்த்தும் முடிவை ஒன்றிய அரசும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் திரும்பப் பெறவேண்டும்!"

 டோல்கேட்
டோல்கேட்

`கஞ்சா கடத்தல் வலைப்பின்னலை வேருடன் அழிக்கவேண்டும்' - பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், எம்.பி

``தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில், ஆந்திராவிலிருந்து சரக்குந்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள 750 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஆனால், கஞ்சா ஒழிப்புக்கு இது போதுமானது அல்ல. காவல்துறையினரால் பிடிபடும் கஞ்சாவைவிட 100 மடங்கு கஞ்சா புழக்கத்தில் விடப்படுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறேன். காவல்துறையினரின் நடவடிக்கை காரணமாக இது 90 மடங்காகவோ, 95 மடங்காகவோ குறைந்திருக்கலாம். ஆனால், தடைபடவில்லை.

அன்புமணி
அன்புமணி

போதைப்பொருள்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிந்த பிறகும், இலங்கைக்கு கடத்துவதற்காக 750 கிலோ கொண்டுவரப்படுகிறது என்பதிலிருந்தே கஞ்சா வலைப்பின்னல் எவ்வளவு வலிமையாக செயல்பட்டு வருகிறது என்பதை அறியலாம். புழக்கத்தில் விடப்படும் கஞ்சாவைப் பிடிப்பது பத்திரிகை செய்திகளுக்கு மட்டும்தான் பயன்படும். கஞ்சா வலைப்பின்னலை கண்டறிந்து அதை அடியோடு ஒழிப்பதுதான் கஞ்சா போதை சீரழிவை முற்றிலுமாக கட்டுப்படுத்த உதவும். அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்."

`அண்ணா பல்கலை ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்!' - நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

``10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் பல்கலைக்கழகத் தற்காலிக பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து, அதன் மூலம் வாக்குகளைப் பெற்று தி.மு.க ஆட்சியதிகாரத்தில் அமர்ந்தது. ஆனால், தற்போது அதனை நிறைவேற்ற மறுப்பது பல்கலைக்கழக ஊழியர்களுக்குச் செய்யும் பச்சை துரோகமாகும். கடந்த 2001-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாகச் சீரமைப்புச் செய்யப்பட்ட பின்னர், அதன்கீழ் இயங்கிவரும் நான்கு கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்திருக்கும் நிலையில், ஊழியர்களுக்கான பணியிடங்கள் மட்டும் இன்றுவரை உயர்த்தப்படாமல், 1996-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பணியிடங்கள் அளவிலேயே இருக்கிறது.

சீமான்
சீமான்

இதனால், கடந்து 20 ஆண்டுகளாகத் தொகுப்பூதியம் அடிப்படையில் 400-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகின்றனர். தற்காலிக ஊழியர்கள் என்பதால் அவர்களுக்குப் பணிப் பயன், பணப் பயன் உள்ளிட்ட எவ்வித அடிப்படை உரிமைகளும் வழங்கப்படுவதில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. ஆகவே, தமிழ்நாடு அரசு அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் அனைத்து வகை தற்காலிக பணியாளர்களையும் உடனடியாகப் பணிநிரந்தரம் செய்து அவர்களின் நீண்டநாள் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித்தர வேண்டும்."

`அனைத்து சாதியினரும் அர்ச்சகராக, தமிழ்நாடு அரசு தனிச்சட்டமியற்ற வேண்டும்!' - நா.த.க சீமான்

``அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கெதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசின் விதிகள் செல்லுமெனக் கூறியிருக்கும் உயர் நீதிமன்றம், ஆகம விதிகளை அடிப்படையாகக் கொண்டே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டுமென்றும், ஆகம விதிகள் பின்பற்றப்படும் கோயில்களை கண்டறிய ஐவர் குழு அமைக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டிருப்பது தேவையற்ற குழப்பத்தை விளைவித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பினை மேம்போக்காக நோக்கி அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கு ஆதரவாகக் கிடைத்திருக்கிற தீர்ப்பெனப் பலர் அறியாமல் வரவேற்கின்றனர்.

அர்ச்சகர்
அர்ச்சகர்

ஆகம விதியைக்கொண்டு தமிழ்நாட்டுக் கோயில்களைப் பிரித்தறிய முற்படுவது என்பது அர்ச்சகராவதற்கு குறிப்பிட்ட சாதி மட்டுமே தகுதியானது என்ற மனுதர்மத்தையே நிலைநிறுத்தும். இப்போது நியமிக்கப்பட்டிருக்கும் ஐவர் குழு தமிழ்நாட்டுக் கோயில்கள் யாவற்றையும் ஆகமத்தைக்கொண்டதெனக் கூறினால், அது அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் எனும் நெடுநாளைய போராட்டத்தை முற்றாகச் சிதைத்துவிடும். தமிழ்நாடு அரசு நியமித்தது போகத் தமிழ்நாட்டின் பல கோயில்களில் பல சமூகத்தினர் அர்ச்சகர்களாக, கோயில் திருப்பணிகளை மேற்கொள்பவர்களாக காலங்காலமாக இருந்துவருகின்றனர். இந்தத் தீர்ப்பு அவர்களின் பண்பாட்டு உரிமையையும் சேர்த்து பறித்துவிடும். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டிய நீதிமன்றம், ஆகமமெனும் பெயரில் பிறப்பின் வழியிலான பாகுபாட்டையும், ஒரு பிரிவினரின் ஆதிக்கத்தையும் அனுமதிப்பது சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானது.

சீமான்
சீமான்

ஆகவே, இவ்விவகாரத்தில், ஆகமவிதிகளின்படி கோயில்களை வகைப்படுத்தக்கோரி ஐவர் குழு அமைக்க உத்தரவிட்டிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆகமத்தின் பெயரால் வாய்ப்புகள் மறுக்கப்படாதிருக்கும் வகையில், தகுதியும், பயிற்சியும் கொண்ட அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் சிறப்புச்சட்டமொன்றை இயற்ற வேண்டும்."