நெல்லை மாநகரப் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பேருந்து நிலையங்கள் கட்டுதல், வணிக வளாகங்கள் கட்டுதல், சாலைகள் மேம்பாடு, பூங்காக்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டங்களில் முறைகேடுகள் நடந்ததாக ஏற்கெனவே புகார்கள் எழுந்தன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் நடந்த பணிகளும் தரமற்ற வகையில் செய்யப்படுவதாகவும், கான்ட்ராக்டர்களிடம் கட்டாய வசூல் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், அதைத் திட்டவட்டமாக மறுத்த அதிகாரிகள், சரியான வகையில் பணிகள் நடப்பதாகத் தெரிவித்துவந்தனர்.
இந்த நிலையில், நெல்லை மாநகரப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் பெய்த கனமழையைக்கூடச் சமாளிக்க முடியாமல், பாளையங்கோட்டையில் கட்டப்பட்டிருந்த வ.உ.சி மைதானத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். காரணம், மாலை நேரங்களில் அந்த மைதானத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவது வழக்கம்.

ஆட்கள் இல்லாத நேரத்தில் மைதானத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அத்துடன், சாலையோரத்தில் இருந்த மேற்கூரை சரிந்து ஓரமாக விழுந்ததால், சாலையில் வாகனங்களில் சென்றவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருந்தாலும் அந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட மைதானத்தின் மேற்கூரைகள் அனைத்தும் இதே போன்று உறுதியற்று இருந்தால் என்னாவது என்கிற கவலை அங்கு செல்லக்கூடிய மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்த விபத்து குறித்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி, “அதிக காற்றுடன் மழை பெய்ததால் இந்த விபத்து நடந்திருக்கிறது. கூரைகளைத் தாங்கியிருந்த கம்பிகளின் போல்டுகள் உடைந்ததால், இந்த விபத்து நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மைதானத்திலுள்ள மற்ற மேற்கூரைகளின் தரத்தையும் ஆய்வு செய்யவிருக்கிறோம்” என்றார்.