கட்டுரைகள்
Published:Updated:

அவர்களே... இவர்களே!

துரைமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
துரைமுருகன்

வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்த பேச்சாளர்களிடம் ‘உங்களால் மறக்க முடியாத மேடை எது?' என்று கேட்டேன். அவர்களிடமிருந்து சூடாக வந்த பதில்கள்...

துரைமுருகன் (தி.மு.க)

‘`1967 - சட்டமன்றத் தேர்தலின்போது, பிரசாரத்துக்காக அணைக்கட்டுத் தொகுதிக்கு வரும் அறிஞர் அண்ணாவை வரவேற்று அழைத்துவர நாட்டறம்பள்ளிக்குச் சென்றேன். ‘நான் அணைக்கட்டு வருவதற்கு நேரமாகும். வாணியம்பாடி, ஜோலார்பேட்டை பகுதிகளிலெல்லாம் பேசிவிட்டுத்தான் ஆம்பூருக்கே வருகிறேன். எனவே நான் ஆம்பூர் வருகிறவரை நீ அங்கே போய்ப் பேசிக்கொண்டிரு’ என்று அண்ணா என்னிடம் சொல்லிவிட்டார்.

துரைமுருகன்
துரைமுருகன்

உடனே நானும் ஆம்பூர் வந்து கூட்டத்தில் பேச ஆரம்பித்தேன். ஒரு மணி நேரம் ஆனது... அண்ணா வரவில்லை. இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது, அப்போதும் அண்ணா வந்து சேரவில்லை. ஆனாலும் பேச்சை நிறுத்தாமல் பேசிக்கொண்டேயிருக்கிறேன். மூன்று மணி நேரம் ஆகிவிட்டது. பேசிப்பேசி... எனக்குக் குடலெல்லாம் மேலே வந்துவிட்டது. என் வாழ்க்கையில் தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கும் மேலாகப் பேசியது அந்த நிகழ்வுதான். அதன்பிறகுதான் அண்ணா மேடைக்கு வந்து சேர்ந்தார்.

‘துரைமுருகன் எவ்வளவு நேரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்...’ என்று மேடையிலிருந்தவர்களிடம் கேட்டிருக்கிறார். ‘அது ஆச்சு மூன்று மணி நேரத்துக்கும் மேலே...’ என்று சொல்லியிருக்கிறார்கள். உடனே அண்ணா, ‘மூன்று மணி நேரம் என்ன, மூன்று நாளானாலும் தூங்காம, சாப்பிடாம ராப்பகலா சைக்கிள் ஓட்டுறவர் மாதிரி துரைமுருகனால பேசிக்கிட்டிருக்க முடியும்’னு சொல்ல, எல்லோருமே சிரித்துவிட்டார்கள்.’’

கி.வீரமணி (திராவிடர் கழகம்)

‘`1982-ல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரத்தில், மருத்துவர் பாலன் என்ற தோழரது மருத்துவமனைத் திறப்புவிழா. ராஜபாளையத்திலிருந்து புதுப்பட்டி வழியாக நாங்கள் காரில் சென்றுகொண்டிருந்தோம். திடீரென சாலையின் நடுவே தி.மு.க கொடியேந்தி நின்ற சிலர், கையில் ரோஜாப்பூ மாலையுடன் காரை வழிமறித்தனர். கார் மெதுவாக அவர்கள் அருகே வந்து நிற்கவும், தொண்டர்களின் மரியாதையை ஏற்பதற்காக நான் காரிலிருந்து இறங்கினேன். அவ்வளவுதான்... ‘கொல்லுங்கடா அவனை’ என்று கூச்சலிட்டவாறு அந்தக் கும்பல் எங்களைத் தாக்கத் தொடங்கினர். என் மூக்குத் தண்டில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சுதாரித்துக்கொண்ட நாங்கள் காரில் ஏறித் தப்பித்தோம்.

என்னுடன் காரில் பயணித்தவர்களுக்கும் பலத்த காயம். வழியும் ரத்தத்துடனேயே அனைவரும் மருத்துவமனைத் திறப்புவிழாவுக்கு வந்து சேர்ந்தோம். எங்களை வரவேற்க மாலை மரியாதையோடு காத்து நின்றவர்கள், ரத்தம் வழியும் நிலையில் நாங்கள் காரிலிருந்து இறங்குவதைப் பார்த்ததும் பதறிப்போனார்கள். உடனடியாக அதே மருத்துவமனையில் எங்கள் காயங்களுக்கு சிகிச்சையளித்துக் காப்பாற்றினார்கள். மூக்கில் அடிபட்டிருந்ததால், ‘நீங்கள் பேசவேண்டாம்’ என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனாலும் சிறிய ஓய்வுக்குப்பிறகு திறப்பு விழாவை நடத்திமுடித்து, விழா மேடையிலும் உரை நிகழ்த்திவிட்டே அங்கிருந்து கிளம்பினோம்.

கி.வீரமணி
கி.வீரமணி

சமூக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி அதன் உச்சாணிக்கொம்பில் அமர்ந்திருப்பவர்கள், நேரடியாக எங்கள் கருத்துகளை எதிர்கொள்ள முடியாமல், தி.மு.க தொண்டர்கள் வேடத்தில் அடியாட்களை அனுப்பித் தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. சமூக அநீதிகளுக்கு எதிரான எங்கள் போராட்டத்தில், இதுபோன்ற எதிர்ப்புகளை அடிக்கடி எதிர்கொள்ள நேரிடும். ஆனால், மருத்துவமனையைத் திறந்துவைக்கச் சென்ற நாங்களே, முதல் நோயாளிகளாக சிகிச்சை பெற்றுத் திரும்பியதால், இந்நிகழ்வு மறக்கமுடியாததாகிவிட்டது!’’

வைகைச் செல்வன் (அ.தி.மு.க)

‘`அனிதா ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க-வில் இருந்தபோது, அவரது இல்லத் திருமண நிகழ்வில் நான்தான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். திருமண விழாவுக்கு வந்திருந்த அம்மாவும் (ஜெயலலிதா), வைகோவும் என் பேச்சைக் கேட்டு ரசித்தனர். ‘மிகச் சிறந்த பேச்சு’ என்று என்னைப் பாராட்டி அம்மாவிடம் வைகோ கூறியது வாழ்வில் மறக்கமுடியாதது.

வைகைச் செல்வன்
வைகைச் செல்வன்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது, ‘மனிதனுடைய வெற்றிக்கு மூன்று காரணங்கள் உண்டு. அவை உடல், அறிவு, மனம். இதில், உடலைச் சுருக்க வேண்டும்; அறிவைப் பெருக்கவேண்டும். ஆனால், என்னைப்போல் மாற்றிச் செய்துவிடக் கூடாது. ஏனெனில், தொந்தி மரணத்தின் தந்தி’ என்றேன். அம்மா வாய்விட்டுச் சிரித்தார். என்றென்றும் நான் நினைத்துப் பார்த்து மகிழ்வது இந்த நிகழ்வு!’’

கல்யாண சுந்தரம் (நாம் தமிழர் கட்சி)

‘`பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் தூக்குத்தண்டனை அறிவிக்கப்பட்டிருந்த காலகட்டம் அது. சிறையில் பேரறிவாளன் அண்ணாவைப் பார்த்துப் பேசிவிட்டு, திரும்பி நடந்து வந்துகொண்டிருந்தோம். மனம் முழுக்க... துக்கம் பிசைந்தது. கொஞ்ச தூரம் நடந்துவந்த நான் ஏதோ ஓர் உள்ளுணர்வில் திரும்பிப் பார்க்க... அண்ணனும் சிறைக்குள் செல்லாமல் எங்களையே பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தார். மனதை அழுத்துகிற அந்த உணர்ச்சியை இப்போதும் என்னால் மறக்க இயலாது.

கல்யாண சுந்தரம்
கல்யாண சுந்தரம்

இந்த மனபாரத்துடன் சென்னையில் நடைபெறவிருந்த கூட்டத்துக்கு வந்துசேர்ந்தோம். சீமான் அண்ணன், விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில், நான் மொத்தமாக 15 நிமிடம்தான் பேசியிருப்பேன். பேரறிவாளன் அண்ணா எங்களையே பார்த்துக்கொண்டு நின்ற அந்தக்காட்சி ஏற்படுத்தியிருந்த பாதிப்பிலிருந்து மீண்டுவர முடியாதவனாக இருந்த நான், அன்றைக்குப் பேசிய உணர்ச்சிமயமான பேச்சை இப்போது கேட்டாலும் சட்டென்று உணர்ச்சிவசப்பட்டுவிடுவேன்... அந்த அளவு மறக்கமுடியாத மேடை அது!

என் பேச்சைக் கேட்டுக்கொண் டிருந்த விடுதலை ராஜேந்திரன் ஐயா, ‘இவன் என்னப்பா உன்னை மாதிரியே பேசுறானே...’ என்று சீமான் அண்ணனிடம் சொல்லியிருக்கிறார். அண்ணனும் ஐயாவின் அந்தப் பாராட்டைப் பலரிடமும் பெருமையாகச் சொல்லியிருக்கிறார்.’’

சி.ஆர்.சரஸ்வதி (அ.ம.மு.க )

‘`2016-ல், பொதுமக்கள் முன்னிலையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினேன். எதிர் அணியைச் சேர்ந்தவர், ‘அ.தி.மு.க அரசுக்கு, மது விலக்கைக் கொண்டுவருகிற தைரியம் இருக்கிறதா...’ என்று எனக்கு சவால்விட்டுப் பேசினார். பதில் பேச வந்த நான், ‘நாங்கள் மதுவிலக்கைக் கொண்டுவருகிறோம். அதற்கு முன்பாக, மதுவை உற்பத்தி செய்யும் ஆலைகளை வைத்திருக்கும் உங்கள் கட்சியினர், அந்த ஆலைகளை மூடுவதற்குத் தயாரா...’ என்று கேள்வியெழுப்பினேன். அரங்கில் பலத்த கைத்தட்டல்.

சி.ஆர்.சரஸ்வதி
சி.ஆர்.சரஸ்வதி

இந்நிகழ்ச்சி நடந்துமுடிந்த மறுநாள் தலைமைச் செயலகத்தில், அம்மாவைச் (ஜெயலலிதா) சந்திப்பதற்காகக் காத்திருந்தோம். எங்களைக் கடந்துசென்ற அம்மாவின் கார், திடீரென நின்றது. காரின் கண்ணாடியை இறக்கி என்னை அழைத்த அம்மா, ‘நேற்று விவாத நிகழ்ச்சி பார்த்தேன்... ரொம்ப நல்லா பேசினீங்க... நிகழ்ச்சிகளுக்குப் போகும் முன்னர், ஏதேனும் தகவல்கள் வேண்டுமென்றால் தயங்காமல் என்னைத் தொடர்புகொள்ளுங்கள். பாயின்ட்ஸ் தருகிறேன்’ என்றார். வசிஷ்டர் வாயால் கிடைத்த பாராட்டு அது!’’