Published:Updated:

``அன்புக்கு முன் தோற்றுப்போன அரசியல்” - கடைசி நேரத்தில் ரஜினி எடுத்த கடினமான முடிவு!

ரஜினியின் உடல்நிலை குறித்து இரண்டு மகள்களுமே மிகவும் கவலையடைந்திருக்கிறார்கள். 28-ம் தேதி காலை தமிழருவி மணியனை தொடர்புகொண்டு கட்சி தொடங்கும் பணிகள் குறித்துக் கேட்டிருக்கிறார்.

`நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள்’ என அறிக்கை வெளியிட்டு, 25 ஆண்டுக்காலமாக 'ரஜினியின் அரசியல் வருகை எப்போது?' என்கிற வினாவுக்கு முடிவுரை எழுதியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

ரஜினி அறிக்கை
ரஜினி அறிக்கை

`இப்போ இல்லைனா எப்பவுமே இல்ல’ என்கிற ஹேஷ்டேக்கோடு தனது அரசியல் என்ட்ரி குறித்த அறிவிப்பை டிசம்பர் 3-ம் தேதி ட்விட்டரில் வெளியிட்டார் ரஜினி. டிசம்பர் 31-ம் தேதியன்று தனது அரசியல் கட்சி தொடக்கம் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடுவன் என்று ரஜினி அறிவித்தது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, ஐம்பது ஆண்டுக்காலம் தமிழக அரசியல் களம் தி.மு.க., அ.தி.மு.க என்கிற இரண்டு கட்சிகளைச் சுற்றியே வந்துகொண்டிருக்கிறது. இதற்கு மாற்றாக ரஜினியின் அரசியல் என்ட்ரி அமையும், பல கட்சிகள் ரஜினியுடன் கூட்டணி வைக்கும் என்றெல்லாம் தொடர்ந்து தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்தன. இந்தநிலையில், தான் நடித்துவந்த 'அண்ணாத்த' படத்தின் ஷூட்டிங்கை முடித்துக்கொடுக்க, தனி விமானத்தில் ஹைதராபாத் சென்றார் ரஜினி. பத்து நாள்களைக் கடந்து ஷூட்டிங் சென்றுகொண்டிருந்த நிலையில், அங்கிருந்த சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ரஜினிக்கு கொரோனா தொற்று இல்லாவிட்டாலும், அவரது ரத்த அழுத்ததில் சில மாறுபாடுகள் ஏற்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது.

பத்து நாள்கள் ஓய்வு கட்டாயம்!

இதைத் தொடர்ந்து மூன்று நாள்கள் மருத்துவர்கள் கண்காணிப்புக்கு பிறகு கடந்த 27-ம் தேதி மாலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார் ரஜினி.

ரஜினி - ஐஸ்வர்யா தனுஷ்
ரஜினி - ஐஸ்வர்யா தனுஷ்

மருத்துவர்கள் தொடர்ந்து பத்து நாள்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும், மன அழுத்தம் ஏற்படும்படி எந்தச் செயலையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். தேவையேற்பட்டால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையைத் தொடர்ந்துகொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆனால், வீட்டிலேயே தான் ஒய்வு எடுத்துக்கொள்வதாக ரஜினி சொல்லியிருக்கிறார். அதற்கு காரணம் 31-ம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டிய நெருக்கடி ரஜினிக்கு இருந்தது.

இந்தச் சமயத்தில், ரஜினி தனது குடும்பத்தினரிடம் மனம்விட்டுப் பேசியிருக்கிறார். குறிப்பாக, அவருடைய இரண்டு மகள்களுமே ரஜினி உடல்நிலை குறித்து மிகவும் கவலையடைந்திருக்கிறார்கள். 28-ம் தேதி காலை தமிழருவி மணியனைத் தொடர்புகொண்டு கட்சி தொடங்கும் பணிகள் எந்த நிலையில் இருக்கிறது என்று வழக்கம்போலவே கேட்டிருக்கிறார். பூத் கமிட்டி அமைப்பது, மாநாடு உள்ளிட்ட விவரங்களையெல்லாம் பேசியிருக்கிறார்.

`கட்சி தொடங்கவில்லை - ரஜினி முடிவு!’ - என்ன சொல்கிறார்கள் தலைவர்கள்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`90 நாள்களில் சாத்தியமா?’

அதன் பிறகு தமிழகத்தின் பிரதான கட்சிக்கு ஏற்கெனவே தேர்தல் வேலைகள் செய்த ஒரு நிறுவனத்தை ரஜினி தொடர்பு கொண்டிருக்கிறார். 90 நாள்களில் கட்சி தொடங்கி தேர்தலைச் சந்திப்பதற்கான வழிமுறைகள் உங்களிடம் இருக்கின்றனவா, சமூக வலைதளங்களின் மூலம் பிரசாரம் செய்வது எந்த அளவுக்கு சாத்தியம் என்றெல்லாம் பேசியிருக்கிறார். அந்த நிறுவனத்தின் தரப்பிலும் சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. அதோடு, முழு பிரசாரத்தையும் சமூக வலைதளங்களில் மூலம் மட்டுமே நடத்தினால் அதனால், அனைத்துத் தரப்பு மக்களிடமும் உங்கள் கருத்துகளைக் கொண்டு சேர்க்க முடியாது என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

ரஜினி
ரஜினி

அன்புக்கு முன் தோற்றுப்போன அரசியல்!

ஆனால், ரஜினியுடன் ஹைதராபாத் சென்ற அவருடைய மகள் ஐஸ்வர்யா ``அப்பாவின் உடல்நிலைக்குக் கூட்டத்தை கூட்டினாலே சிக்கல் வந்துவிடும். உடல்நலன்தான் இப்போது மிக முக்கியம்” என்று லதா ரஜினியிடமும், சௌந்தர்யாவிடமும் திடமாகச் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு இளைய மகள் சௌந்தர்யாவும் ``இனி எந்த யோசனையும் வேண்டாம். அரசியலுக்கு நோ சொல்லிவிடுங்கள். நீங்கள் நீண்டகாலம் இருந்தாலே எங்களுக்குப் போதும்” என்று சொல்லியிருக்கிறார். ஒட்டுமொத்த குடும்பத்தினரும் இதை அழுத்தமாகக் கூறவேதான், அரசியல் வேண்டாம் என்கிற கடினமான முடிவை எடுக்கும் மனநிலைக்கு ரஜினி வந்திருக்கிறார். இந்த முடிவை அவர் எடுத்த பிறகு தனக்கு நெருக்கமான சோர்ஸ்கள் மூலம் நட்புரீதியாக பிரதமர் மற்றும் அமித் ஷா ஆகியோரின் காதுகளுக்கு விஷயத்தைக் கொண்டு சென்றுவிட்டார். நேற்று இரவே டெல்லி பி.ஜே.பி தரப்புக்கு ரஜினியின் இந்த முடிவு தெரிந்துவிட்டது. அதன் பிறகே அரசியல் கட்சி இல்லை என்கிற மூன்று பக்க அறிக்கை தயாராகியிருக்கிறது. அந்த அறிக்கை தயாரான விஷயம் 29-ம் தேதி காலை வரை தமிழருவி மணியனுக்கும், அர்ஜுனமூர்த்திக்கும் தெரியவில்லை. வெளியிடுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாகத்தான் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார் ரஜினி.

ரஜினியின் முடிவு: யாருக்கு நிம்மதி?

`அரசியல் என்ட்ரி இல்லை’ என்ற அறிவிப்பு அ.தி.மு.க-வுக்கு ஓருபுறம் நிம்மதியை கொடுத்திருக்கிறது. தி.மு.க-வுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. காரணம், தி.மு.க-வுக்காக தேர்தல் யுக்திகளை செய்துவரும் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் கொடுத்த ரிப்போர்ட் ஒன்றில் `ரஜினி கட்சி தொடங்கினால், ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வாக்குகளை நாம் இழக்க நேரலாம்’ என்று சொல்லியிருந்தார். இப்போது ரஜினி அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டதால், தங்கள் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தி.மு.க நினைக்கிறது. மற்றொருபுறம் அ.தி.மு.க தரப்பு பா.ஜ.க-வுடன் கூட்டணி என்று அறிவித்த பிறகும் பா.ஜ.க-வினர் எடப்பாடி முதல்வர் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தனர். அதற்குக் காரணம், ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால், அ.தி.மு.க-விலிருந்து பலரையும் ரஜினியுடன் இணையவைத்து ரஜினி கட்சியுடன் இணைந்து மெகா கூட்டணி அமைக்க பா.ஜ.க திட்டமிட்டிருந்தது. இதனால் தனது முதல்வர் கனவுக்கு பங்கம் வந்துவிடும் என எடப்பாடி அச்சப்பட்டுவந்தார். அதற்கு இப்போது வாய்ப்பில்லாமல் போனதால், அ.தி.மு.க தரப்பு நிம்மதியுடன் இருக்கிறது. ஆனால், ரஜினியின் அறிவிப்பால் நேரடியாக பாதிக்கப்பட்ட கட்சி என்றால் அது பா.ஜ.க மட்டுமே.

ரஜினி - மோடி
ரஜினி - மோடி

ஆம்! தமிழகத்தில் வலுவாக பா.ஜ.க காலூன்ற ரஜினி தங்களுக்கு அச்சாரமாக இருப்பார் என்று கணக்கு போட்டுவந்தார்கள். குறிப்பாக, ரஜினி தேர்தலில் வெற்றி பெற்றால் துணை முதல்வர் பதவியைக்கூட பா.ஜ.க- வுக்கு வாங்கும் எண்ணம் இருந்தது. இப்போது ரஜினியின் அரசியல் கதவு அடைக்கப்பட்டுவிட்டதால், அ.தி.மு.க அணியிலேயே அவர்கள் தொடர வேண்டிய நெருக்கடி இருக்கிறது. மேலும், அ.தி.மு.க கொடுக்கும் தொகுதிகளை மட்டுமே பா.ஜ.க வாங்கிக்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் கடும் அப்செட்டில் பா.ஜ.க இருக்கிறது.

ஆனால், ரஜினி ஒரு விதத்தில் நல்லது செய்திருக்கிறார். அவர் அரசியல் என்ட்ரி அறிவிப்பை வெளியிட்ட பிறகு பல கட்சிகளிலிருந்தும் மூத்த நிர்வாகிகள் ரஜினியுடன் இணைய விருப்பம் தெரிவித்துவந்தனர். அவர்களுக்கெல்லாம் 31-ம் தேதி வரை காத்திருக்கச் சொல்லி ரஜினி தரப்பிலிருந்து பதில் சென்றது. ஒருவேளை பலரும் ரஜினியுடன் கைகோத்திருந்தால், ரஜினியின் இந்த அறிவிப்பால் அவர்களது அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கும். அந்த வகையில் இந்த அறிவிப்பை மகிழ்வுடனே பலரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ரஜினியின் அறிவிப்பு வெளியான பிறகு அவருக்கு தி.மு.க தரப்பிலிருந்து ஒரு போன் கால் சென்றிருக்கிறது. “உங்கள் முடிவுக்கு வாழ்த்துகள். உடல்நிலையை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். வருங்காலத்தில் எங்கள் ஆட்சி அமைந்தாலும், உங்கள் ஆலோசனையையும் நாங்கள் கேட்டுச் செயல்பட தயங்க மாட்டோம்” என்று சொல்லியிருக்கிறார்கள்.


கொரோனாவின் ஆதிக்கம் கால் நுாற்றாண்டுகால ரஜினியின் அரசியல் காத்திருப்புக்கு முடிவரை எழுதியிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு