Published:Updated:

பளபளக்கும் லாட்ஜ்கள்; ஏமாறும் சுற்றுலாப் பயணிகள்... மாமல்லபுரம் கெடுபிடிகள்!

மாமல்லபுரம்
மாமல்லபுரம் ( பா.ஜெயவேல் )

"நாங்க மாமல்லபுரம் வருவது இதுதான் முதல்முறை. வீட்ல எல்லோரும் ஆர்வமாகக் கிளம்பினோம். மோடி 12-ம் தேதிதான் வருவார்னு சொன்னதால 8-ம் தேதி வந்தோம். ஆனா எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீர்னு பார்வையிட அனுமதியில்லைன்னு அறிவிப்பு ஒட்டியிருக்கிறார்கள்.''

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகச் செய்து வருகின்றன. சாலைகளைப் பெருக்குவதும் மண்ணைக் கொட்டுவதும் மீண்டும் சாலைகளைப் பெருக்குவதுமாக வேலைகள் நடந்து வருகின்றன. ஒட்டு மொத்த அரசு எந்திரமும் மாமல்லபுரத்தில் குவிக்கப்பட்டு அங்குலம் அங்குலமாகக் கண்காணிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

மோடி - ஜின்பிங் சந்திப்பு: கெடுபிடிகளால் கதிகலங்கும் மாமல்லபுரம்!

சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் மாமல்லபுரம் முழுக்கவே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கூலித் தொழிலாளிகளுக்குப் புதிதாக அடையாள அட்டை கொடுத்து பணியாற்ற உத்தரவிட்டிருக்கிறார்கள். இன்றிலிருந்து மாமல்லபுரம் மத்திய பாதுகாப்புப் படையினர் வசம் வந்தால் கெடுபிடிகள் இன்னும் அதிகரிக்கக் கூடும்.

வாட்ஸ் அப் வதந்தி!

மோடி-ஜின்பிங்
மோடி-ஜின்பிங்

‘மோடி-ஜின்பிங் வருகையால் 11 மற்றும் 12-ம் தேதிகளில் கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் மூட காவல்துறையினர் உத்தரவிட்டிருக்கிறார்கள்’ என வாட்ஸ் அப்பில் வரும் தகவல்களை காவல்துறையினர் முற்றிலும் மறுக்கிறார்கள். அரசின் அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

பளபளக்கும் லாட்ஜுகள்…

லாட்ஜ், மாமல்லபுரம்
லாட்ஜ், மாமல்லபுரம்
பா.ஜெயவேல்

மோடி - ஜின்பிங் செல்லும் பாதைகளில் உள்ள வீடுகள், லாட்ஜ், கடைகள் என எல்லா கட்டடங்களுக்கும் அரசு செலவிலேயே வண்ணம் தீட்டப்பட்டு வருகின்றது. உடைந்த சுற்றுச்சுவரைச் சரிசெய்து கொடுக்கிறார்கள். சில இடங்களில் அவர்களே சுற்றுச் சுவர் கட்டிக் கொடுக்கிறார்கள். இந்த வரிசையில் வருமானம் கொழிக்கும் லாட்ஜ்களுக்கு அடித்தது யோகம். அரசாங்க வரிப்பணத்தில் லாட்ஜ்களுக்கு பெயின்ட் அடித்துக் கொடுப்பது தமிழக வரலாற்றில் இதுவே முதல்முறையாக இருக்கும்.

சாப்பிட சோறு… தங்க ஏ.சி ரூம்!

கடந்த ஒரு வாரமாகவே இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில நாள்களுக்கு முன் மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டல் மற்றும் விடுதி உரிமையாளர்களைக் காவல் அதிகாரிகள் அழைத்துப் பேசினார்கள். அப்போது ‘ஹோட்டல்களில் தங்குபவர்களின் முழுவிவரங்களை வாங்க வேண்டும். வெளி மாவட்ட, மாநில நபர்கள் தங்கினால் அவர்களைப் பற்றிய விவரங்களை காவல்துறையினருக்குக் கொடுக்க வேண்டும். பிரதமர் வரும் தினங்களில் யாரையும் ஹோட்டல்களில் தங்க வைக்கக் கூடாது’ எனக் கெடுபிடியான உத்தரவுகளைப் பிறப்பித்தார்கள்.

மாமல்லபுரம்
மாமல்லபுரம்
பா.ஜெயவேல்

பிறகு ‘ஒரு சின்ன ஆப்ளிகேஷன். காவல் துறையினர் வந்தால் தங்குவதற்கு அறை கொடுங்கள்’ என்றார் ஓர் அதிகாரி. உடனே அங்கிருந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் எழுந்து ‘சார் பேமென்ட் எப்படி கொடுப்பீங்க?’ என வெள்ளந்தியாகக் கேட்டுள்ளார். உடனே அந்த அதிகாரி ‘அதான் ஆப்ளிகேஷன் எனச் சொன்னேனே…’ என்றிருக்கிறார் அந்த அதிகாரி. இதைக் கேட்ட மற்ற ஹோட்டல் உரிமையாளர்கள் கப்சிப் ஆகிவிட்டார்கள். மீட்டிங் முடிந்து கிளம்பும் நேரத்தில் ‘ரூம் கொடுத்திருக்கீங்க அதுபோல சாப்பாடும் கொடுத்துவிடுங்க…’ என அந்த அதிகாரிகள் மீண்டும் அன்பாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். பிரதமர் போன பிறகு பிரச்னை இல்லாமல் தொழில் நடக்க வேண்டுமே என முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினார்களாம் அந்த ஹோட்டல் உரிமையாளர்கள்.

கெடுபிடிகளால் பறிபோன வாழ்வாதாரம்!

மாங்காய் விற்கும் பாட்டி
மாங்காய் விற்கும் பாட்டி
மாமல்லபுரம்

தெருக்களில் தள்ளுவண்டிக் கடைகள் ஒன்று விடாமல் அகற்றி விட்டார்கள். இதில் தினமும் கிடைக்கும் வருமானத்தில் பிழைக்கும் பலரும் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். ‘பிரதமர் வருவதற்கு 15 நாள் முன்பே தெரு வியாபாரிகளை துரத்தி விட்டாங்க. ரெண்டு நாள் கூத்துக்கு எங்க வாழ்வாதாரத்தை இழந்துவிட்டோம். எத்தனையோ பிரதமர் இங்கு வந்து போயிருக்காங்க. அப்போதெல்லாம் இப்படி கெடுபிடிகள் இல்லை. இந்திராகாந்தி கூட நடந்தேதான் இந்த ஊரில் பயணித்தார்’ எனத் தெரு வியாபாரிகள் புலம்புகிறார்கள்.

ஏமாறும் சுற்றுலாப் பயணிகள்!

நேற்று திடீரென பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பார்வையாளர்கள் அனுமதி கிடையாது என நோட்டிஸ் ஒட்டப்பட்டது. நேற்றிலிருந்து வி.வி.ஐ.பி வந்து செல்லும் வரை அனுமதி கிடையாது என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தொல்லியல் சின்னங்களைப் பார்வையிட முடியாமல் வெளியூரிலிருந்து வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். தென் மாவட்டங்கள் மற்றும் வெளி மாநில, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

மாமல்லபுரம்
மாமல்லபுரம்
பா.ஜெயவேல்

மதுரையிலிருந்து வந்த சுற்றுலாப் பயணி ஒருவர், “நாங்க மாமல்லபுரம் வருவது இதுதான் முதல்முறை. வீட்ல எல்லோரும் ஆர்வமாகக் கிளம்பினோம். மோடி 12ம் தேதிதான் வருவார்னு சொன்னதால 8ம் தேதி வந்தோம். ஆனா எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரெனப் பார்வையிட அனுமதியில்லைன்னு அறிவிப்பு ஒட்டியிருக்கிறார்கள். முறையாக அறிவிப்பு செய்திருந்தால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைய மாட்டார்கள்" என்கிறார் ஆதங்கமாக.

கடை திறந்திருக்கணும்… வியாபாரம் செய்யக் கூடாது!

மாமல்லபுரம்
மாமல்லபுரம்
பா.ஜெயவேல்

மோடி - ஜின்பிங் வரும் தினங்களில் சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வரும் இரண்டு நாள்களிலும் மாமல்லபுரம் மத்திய பாதுகாப்புப் படையினர் வசம் இருக்கும். இந்த நிலையில் அப்போது கடைகளை அடைத்து வைக்கக் கூடாது, திறந்திருக்க வேண்டும் எனக் காவல்துறையினர் அறிவுறுத்தி இருக்கிறார்கள். `வியாபாரம் செய்யக் கூடாது. கடைகள் மட்டும் எப்படித் திறந்து வைக்க முடியும்?’ என உள்ளூர் வியாபாரிகள் குமுறுகிறார்கள்.

ஆளும் கட்சி கான்டிராக்டர்கள்!

ஆளும் கட்சி ஒப்பந்ததாரர்
ஆளும் கட்சி ஒப்பந்ததாரர்
பா.ஜெயவேல்

பெயின்ட் அடிப்பது, சுவர் எழுப்புவது, சாலை போடுவது, மின் விளக்குகள் அமைப்பது என எல்லாவற்றையும் ஆளும் கட்சிப் பிரமுகர்களே செய்து வருகிறார்களாம். ‘பணத்தைப் பற்றிக் கவலைப்படாதீங்க.. பார்த்துக்கலாம்!’ என அதிகாரிகள் கிரீன் சிக்னல் கொடுக்க வெளியூரிலிருந்து ஆட்களை இறக்குமதி செய்து பணிகளைச் செய்து வருகிறார்கள். ‘கைக்காசு போட்டு வேலை செய்யுறோம். போட்ட பணம் முழுசா வருமான்னு தெரியல’ என ஒப்பந்ததார்களின் புலம்பலும் கேட்கின்றன. மோடி போன பிறகாவது எவ்வளவு கோடிகள் கணக்குக் காட்டப் போகிறார்கள் என்பதை வெளியிடுவார்களா என்பது சந்தேகம்தான்!

கழிவறைகள் எங்கே?

மாமல்லபுரம் கட்டண கழிவறை
மாமல்லபுரம் கட்டண கழிவறை
பா.ஜெயவேல்

மோடி வருகைக்காகக் கோடி கோடியாக மக்கள் வரிப் பணத்தைக் கரைக்கிறார்கள். ஆனால், லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் உலகப் பாரம்பர்யம் மிக்க சுற்றுலாத் தலத்திற்குக் கழிவறைகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியாமல் போனது வேதனை அளிப்பதாகச் சுற்றுலாப் பயணிகள் கொந்தளிக்கிறார்கள். ஒரு சில இடங்களில் மட்டுமே கட்டண கழிவறைகள் இருக்கின்றன. அதுவும் மக்கள் செல்லும் வழியில் தெரியாதவாறு இருக்கின்றன.

இவ்வளவு செலவு செய்பவர்கள் மொபைல் டாய்லெட்டுகளையாவது வைத்திருக்கலாம். பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவறை பாழடைந்து உடையும் நிலையில் அபாயகரமான நிலையில் உள்ளது. தற்காலிகமாக அந்த இடத்தை பூட்டி வைத்துள்ளார்கள். அந்தப் பக்கம் சென்றாலே சுற்றுலாப் பயணிகள் மீது இடிந்து விழும் நிலையில் அந்தக் கட்டடம் அபாயகரமாக இருக்கிறது.

`4 சந்திப்புகள்; 7 மணிநேரம்!' - மோடி - ஜி ஜின்பிங் சந்திப்புக்குத் தயாராகும் மாமல்லபுரம்

இரு நாட்டுத்தலைவர்கள் சந்திப்பு நல்ல விஷயம்தான். ஆனால் அதை மக்களும் கொண்டாடும் வகையில் இருக்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு.

அடுத்த கட்டுரைக்கு