Published:Updated:

`உங்களுக்கு முதுகெலும்பே கிடையாது, உட்காருங்கள்!' - ரவீந்திரநாத் குமாரை எச்சரித்த டி.ஆர்.பாலு

`எனக்கு முதுகெலும்பு இருப்பதால் பேசுவதற்கு அனுமதி அளித்து உள்ளார். முதுகெலும்பு இல்லாதவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை' என மக்களவையில் அ.தி.மு.க உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரைச் சுட்டிக் காட்டிப் பேசினார் தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்காக சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்து வருகிறது. அதில் பேசிய தி.மு.க மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, ``அரசியலமைப்பு சட்டப்படி மசோதாவை மக்களவை, மாநிலங்களவில் தாக்கல் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நிறைவேற்றியிருக்கிறீர்கள். உங்களுக்கு பெரும்பான்மை இருப்பதால் இப்படிச் செய்கிறீர்கள். நாடாளுமன்றத்தில் தினமும் இரண்டு, மூன்று மசோதாக்கள் தாக்கல் ஆகின்றன. இது என்னவோ மசோதாக்களை உற்பத்தி செய்யும் இடம்போல் இருக்கிறது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

சபாநாயகரும் சிரித்தபடியே அனைத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கலாம். இறுதியில் நீங்கள் சாதித்தது என்ன. இந்த மசோதாவை நீங்கள் தாக்கல் செய்துவீட்டீர்கள். உங்களுக்கு இந்த அரங்கில் பெரும்பான்மை உள்ளது. கண்டிப்பாக இந்த மசோதா நிறைவேறிவிடும். நாங்கள் தோற்றுவிடுவோம். நாங்கள் வெளிநடப்பு செய்வோம் அல்லது எதிர்த்து வாக்களிப்போம். மத்திய அரசு பெரிய மாநிலமான ஜம்மு-காஷ்மீரை நகராட்சியாக மாற்றுகிறது. காஷ்மீர் விவகாரத்தில் உங்களிடம் என்ன தீர்வு இருக்கிறது. காஷ்மீர் எல்லையில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்கள் நிம்மதியாக இல்லை. தீவிரவாதிகளின் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்.

சமீபத்தில் இந்திய எல்லையில் ஊடுருவிய 7 பேரை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இது தலைப்புச் செய்தியானது. வெள்ளை கொடியுடன் வந்து உடல்களைக் கொண்டு செல்லுங்கள் என பாகிஸ்தானுக்கு இந்தியா கூறியது செய்தியானது. இரண்டு நாள்களாக அந்த உடல்களை எடுத்துச் செல்லுமாறு கெஞ்சினோம். தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த மக்களின் பாதுகாப்பை உங்களால் உறுதி செய்ய முடியுமா. பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து சட்டப்பிரிவு 370-ஐ நீக்க வேண்டும் எனக் காத்திருந்தீர்கள். அதைச் செய்துவீட்டீர்கள்.

ரவீந்திரநாத் குமார்
ரவீந்திரநாத் குமார்

உங்களால் ஏன் தமிழ்நாடு, கேரளாவில் வெற்றிபெற முடியவில்லை. நீங்கள் சிரிக்கிறீர்கள், அணைக்கிறீர்கள் ஆனாலும், அங்கு எதுவும் நடக்கவில்லை'' எனப் பேச, அப்போது அ.தி.மு.க-வை சேர்ந்த தேனி நாடாளுமன்ற அ.தி.மு.க உறுப்பினர் ரவீந்திரநாத் எழுந்து குறுக்கீடு செய்தார். அவர் எழுந்ததைக் கவனித்த டி. ஆர்.பாலு சிரித்தபடியே, `உட்காருங்கள்... உட்காருங்கள்... உங்களுக்கு முதுகெலும்பே கிடையாது. நாடாளுமன்றம் என்பது முதுகெலும்பு இருப்பவர்களால் நிரப்பப்பட்டது. உங்களைப் போன்றவர்களுக்காக இது கிடையாது உட்காருங்கள்... உட்காருங்கள்...' என்றார். ரவீந்திரநாத் குறுக்கீடு செய்ததற்குக் கனிமொழியும் எதிர்ப்பு தெரிவித்தார். டி.ஆர்.பாலு பேச்சுக்கு தி.மு.க எம்.பி-க்கள் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.

தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு,`எனக்கு முதுகெலும்பு இருப்பதால் பேசுவதற்கு அனுமதி அளித்து உள்ளார். முதுகெலும்பு இல்லாதவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. நான் யாரையும் வசைப்பாட வேண்டும் என இப்படிக் கூறவில்லை. எனக்கு முதுகெலும்பு இருக்கிறது என்பதற்காகக் கூறுகிறேன். அவர்களுக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை' என்றார் இயல்பாக.