Published:Updated:

``காங்கிரஸ்காரர்களே பேசாத விஷயத்தை, தி.மு.க-வினர் ஏன் பேச வேண்டும்?’’- திருமுருகன் காந்தி கேள்வி!

`விடுதலைப் புலிகளால், சோனியா காந்தியின் உயிருக்கு ஆபத்து' என்ற உள்துறை அமைச்சக அறிக்கையை சுட்டிக்காட்டிப் பேசிய தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலுவின் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்திக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்ட விவகாரத்தில், மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. ஆனால், தமிழ்நாட்டிலோ இதே விவகாரம் தி.மு.க-வுக்கு எதிரான விவாதமாக உருவெடுத்து வருகிறது.

சோனியா காந்தி
சோனியா காந்தி

`விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாகச் சித்திரிக்கும் முயற்சியாக, தி.மு.க எம்.பி ஒருவரே இதுபோல் நாடாளுமன்ற அவையில் பேசலாமா? உண்மையில், விடுதலைப் புலிகள் விவகாரத்தில் தி.மு.க-வின் நிலைப்பாடுதான் என்ன?' என தி.மு.க-வுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கட்சியினர் கேள்விக்கணைகளை தொடுத்து வருகின்றனர். தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் டி.ஆர்.பாலுவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருப்பதுதான் இப்பிரச்னையில் ஹைலைட்!

எடப்பாடி பழனிசாமி மட்டுமா... தமிழகத்தில் நிகழ்ந்த 8 அரசியல் அதிசயங்கள்!

இந்நிலையில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியிடம் இவ்விவகாரம் குறித்து கருத்து கேட்டோம்...

``தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலைக்காகப் போராடிய போராளிகள். அப்படிப்பட்ட போராளிகள் மீது இப்படியொரு அபாண்டமான குற்றச்சாட்டை மத்திய பா.ஜ.க அரசு சுமத்துவதையும் அதை வழிமொழிந்து தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் பேசுவதையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

திருமுருகன் காந்தி
திருமுருகன் காந்தி

`விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீட்டிக்க வேண்டும்; அதன் தொடர்ச்சியாக தமிழின உணர்வாளர்கள், திராவிட இயக்கத்தவர்கள், பெரியார் - அம்பேத்கரியவாதிகள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்க வேண்டும்' என்ற நோக்கத்தோடுதான் மத்திய பா.ஜ.க அரசே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஓர் அறிக்கையை கொடுத்திருந்தது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததைத்தான் தற்போது மத்திய - மாநில அரசுகளும் நடைமுறையில் நிகழ்த்தி வருகின்றன. ஆக, இப்படி உள்நோக்கம் கொண்ட ஓர் அறிக்கையை உதாரணமாகக் காட்டி, `விடுதலைப் புலிகளால், சோனியாவின் உயிருக்கு ஆபத்து' என்று தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.

அதேசமயம் `விடுதலைப் புலிகள் விவகாரத்தில் தி.மு.க-வின் நிலைப்பாடு இதுதான்' என்பதை டி.ஆர்.பாலு வெளிப்படுத்துகிறாரா என்ற கேள்வி எழுகிறது. எனவே, விடுதலைப்புலிகள் குறித்தும் தமிழீழ விடுதலை குறித்தும் தி.மு.க என்னவிதமான நிலைப்பாடு வைத்திருக்கிறது என்பதை நாங்கள் இந்நேரத்தில் கேள்வியாக எழுப்புகின்றோம்.

சோனியா காந்தியின் உயிர் குறித்த அக்கறையை வெளிப்படுத்துகிற இதே நேரத்தில், இந்த அம்மையாரின் ஆட்சிக் காலத்தில்தான் இந்திய அரசின் துணையோடு இலங்கையில் இனப்படுகொலையும் அரங்கேறியது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். எனவே, சோனியாகாந்தியை, இனப்படுகொலை குற்றவாளியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். இந்த இனப்படுகொலை குறித்தான சர்வதேச விசாரணை நடத்தப்படும்போது, சோனியா காந்தியும் விசாரிக்கப்பட வேண்டும். ஏனெனில், அவரும் ஒரு கூட்டுக் குற்றவாளிதான்.

திருமுருகன் காந்தி
திருமுருகன் காந்தி

இந்த உண்மைகளை எல்லாம் அறிந்துதான் டி.ஆர்.பாலு பேசுகின்றாரா... அல்லது தெரியாமல் பேசுகின்றாரா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரையில், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்; தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கான உரிய மரியாதை அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும்.

பல்வேறு அச்சுறுத்தல்களின் காரணமாகத்தான் சோனியா காந்திக்கு சிறப்பு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், `விடுதலைப் புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு ஆபத்து' என்ற ஓர் அம்சத்தைக் குறிப்பிட்டு சுட்டிக்காட்டிப் பேச வேண்டிய அவசியம் தி.மு.க எம்.பி-யான டி.ஆர்.பாலுவுக்கு ஏன் வந்தது? காங்கிரஸ்காரர்களே இதுகுறித்துப் பேச முன்வராத சூழ்நிலையிலும்கூட தி.மு.க-வினர் ஏன் இப்படிப் பேசியிருக்க வேண்டும்?'' என்றார் காட்டமாக.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

டி.ஆர்.பாலுவின் பேச்சு குறித்தும், இவ்விவகாரத்தில், தி.மு.க-வின் நிலைப்பாடுதான் என்னவென்பது குறித்தும் தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டோம்....

``நாடாளுமன்றத்தில், டி.ஆர்.பாலு பேசிய விஷயத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு சிலர் இதுபோல் பேசிவருகிறார்கள். 'விடுதலைப் புலிகளால், சோனியா காந்தியின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று சொல்லித்தான் ஏற்கெனவே சிறப்புப் பாதுகாப்பை அவருக்குக் கொடுத்திருந்தீர்கள். அப்படியிருக்கும்போது, இப்போது அதே பாதுகாப்பை ஏன் விலக்கிக்கொண்டீர்கள்...' என்றுதான் டி.ஆர்.பாலு கேட்டிருந்தார். இதில், விடுதலைப் புலிகள் பற்றிய எங்களது கருத்து எதுவும் இல்லை.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

விடுதலைப் புலிகள் விவகாரத்தில், கருணாநிதி என்ன நிலைப்பாட்டை எடுத்திருந்தாரோ அதே நிலைப்பாட்டில்தான் இப்போதும் தி.மு.க தொடர்கிறது'' என்றார் தெளிவாக.