Published:Updated:

`பதவியேற்கும் முன்பே பட்டாபிஷேகமா?' - கொந்தளித்த டி.ஆர்.பாலு

அ.சையது அபுதாஹிர்

இந்தப் புகைச்சல் இன்னும் சில நாள்களில் தி.மு.க-வுக்குள் எழப்போகிறது என்று எச்சரிக்கை செய்கிறார்கள், மூத்த நிர்வாகிகள்.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

``நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்று 100 நாள்கள் கடந்துவிட்டன. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினராக இதுவரை பதவியே ஏற்காமல் அடுத்த பதவிக்குப் பட்டாபிஷேகம் நடத்தியது நியாயமா?'' என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியுள்ளார், தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு
தி.மு.க-வில் தனி ஆவர்த்தனங்கள் அதிகரிப்பு: கடுப்பில் டி.ஆர்.பாலு!

ஆகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டார், துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த். தேர்தல் முடிவிலும் பலத்த இழுபறிக்கிடையே வெற்றியும் பெற்றார். அவர் வெற்றிபெற்று இதுவரை நாடாளுமன்றத்திற்குச் செல்லவில்லை. நாடாளுமன்றத்தில் இன்னும் பதவியேற்பும் செய்துகொள்ளவில்லை. ஆனால், அதற்குள் முக்கியப் பதவி ஒன்றைக் கைப்பற்றிவிட்டார், கதிர்ஆனந்த்.

தென்னக ரயில்வேயின் சென்னைக் கோட்டத்துக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவர் என்கிற பதவியை தற்போது பெற்றுள்ளார், கதிர்ஆனந்த். இப்படி ஒரு பதவி இருப்பதே பல தி.மு.க எம்.பி-க்களுக்கு இப்போதுதான் தெரியும். ஆனால், துரைமுருகன் தன் மகன் வெற்றிபெற்றவுடனேயே இந்தப் பதவியைக் கைப்பற்றிவிட முடிவுசெய்துவிட்டார். சென்னைக் கோட்டத்தில்தான் டி.ஆர்.பாலுவின் ஸ்ரீபெரும்புதூர், மத்திய சென்னை, அரக்கோணம் உள்ளிட்ட தொகுதிகள் வருகின்றன. இந்தத் தொகுதியில் மூத்த தி.மு.க உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளார்கள். ஆனால், அவர்களை முந்திக்கொண்டு இந்தப் பதவியை கதிர் ஆனந்த் பெற்றுள்ளார்.

கதிர் ஆனந்த்
கதிர் ஆனந்த்

கடந்த சில நாள்களுக்கு முன்பே சென்னைக் கோட்டத்துக்கு உட்பட்ட தி.மு.க எம்.பி-க்களிடம் துரைமுருகன் தொடர்புகொண்டு பேசியுள்ளார். ``என் மகனுக்கு இந்தமுறை வாக்களித்து வாய்ப்பு தாருங்கள்" என்று உருக்கமாகப் பேசியுள்ளார். அப்போதே இந்த விவகாரம், கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது. அப்பா பொருளாளர். மகன் முதல்முறையாகக் களத்தில் இறங்கியதும் பதவியா என்று சிலர் முணுமுணுத்துள்ளார்கள்.

அப்பாவின் அழுகை, கட்சிப் பதவி, ஸ்டாலின் பரிசு... - கதிர் 'ஆனந்தம்' பகிர்வுகள்!

குறிப்பாக டி.ஆர்.பாலு, இப்படி ஒரு வாய்ப்பை, தாம் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போனது குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டுள்ளார். ஒருவழியாக, நேற்று தென்னக ரயில்வே அலுவலகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றக் குழுத் தலைவர் தேர்வில் கதிர் ஆனந்த் வெற்றியும் பெற்றுள்ளார். இந்தப் புகைச்சல் இன்னும் சில நாள்களில் தி.மு.க-வுக்குள் எழப்போகிறது என்று எச்சரிக்கை செய்கிறார்கள், மூத்த நிர்வாகிகள்.

துரைமுருகன்
துரைமுருகன்

இந்தப் பதவியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பல்வேறு சலுகைகள் உள்ளன. அதேபோல் தென்னக ரயில்வேயில் மேற்கொள்ளப்படும் புதிய ரயில் திட்டங்களில் இவர்களது தலையீடும் அதிகம் இருக்கும். பல உறுப்பினர்களுக்கு இப்படி ஒரு பதவி இருப்பதே தெரியாத நிலையில், துரைமுருகன் லாகவமாகத் தன் மகனுக்குப் பதவியைப் பெற்றுவிட்டார் என்று உள்ளுக்குள் புலம்பிவருகிறார்கள் தி.மு.க-வினர்.