Published:Updated:

நாடு தழுவிய போராட்டம் ஏன்? விளக்கும் தொழிற்சங்கங்கள்... மறுக்கும் பா.ஜ.க!

Migrant Worker in Delhi
Migrant Worker in Delhi ( AP Photo/Manish Swarup )

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொழிலாளர் அணியான பாரதிய மஸ்தூர் சங்கம், மத்திய அரசின் கொரோனா கால நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது.

கொரோனா பேரிடரை சமாளிக்க, `20 லட்சம் கோடி ரூபாய் நிதித்தொகுப்பு' என்ற மத்திய அரசின் அறிவிப்பு, ஆதரவும் எதிர்ப்புமாக ஒட்டுமொத்த இந்திய அரசியலையே தடதடக்கவைத்திருக்கிறது.

`பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பதா...' என்று அரசின் அறிவிப்புக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருபுறம் கொந்தளிக்க, `20 லட்சம் கோடியில், வெறும் 2.2 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே அரசுத் தரப்புக்கு கூடுதல் செலவு' என்று அலசி ஆராய்ந்து விமர்சிக்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். ஆனால், `கொரோனா பேரிடரிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கை இது!' என்று பதில் சொல்லிவருகிறது மத்திய பா.ஜ.க அரசு.

இந்நிலையில், மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகக்கூறி, இன்று (22-5-2020) நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளன தொழிற்சங்கங்கள். போராட்டத்தின் ஒருபகுதியாக டெல்லியிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், மத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் உண்ணாவிரதம் நடத்தவிருக்கின்றனர். இதுதவிர, மாநிலங்கள் தோறும் தொழிற்சங்க உறுப்பினர்கள், கறுப்புக்கொடி ஏற்றுதல், கறுப்புப் பட்டை அணிதல் எனப் பல்வேறு வடிவங்களில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யவிருக்கிறார்கள்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

தமிழ்நாட்டில், கறுப்புக் கொடி ஏந்தும் போராட்டத்தை அறிவித்துள்ள `தொழிலாளர் முன்னேற்றச் சங்க'ப் பேரவையின் (தொ.மு.ச) பொதுச்செயலாளர் சண்முகம் இதுகுறித்துப் பேசுகிறபோது, ``ஊரடங்கு அறிவிப்பின் ஆரம்பகட்டத்தில், `தொழிலாளர்கள் அனைவருக்கும் நிறுவனங்கள் ஊதியம் வழங்க வேண்டும்' என்று அறிவித்தது உள்துறை அமைச்சகம். ஆனால், பிஎஸ்என்எல், ஏர் இந்தியா உள்ளிட்ட அரசுத்துறை நிறுவனங்களில் வேலைபார்த்துவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கே ஊதியம் வழங்கப்படவில்லை. ஆக, அரசே இப்படி மோசமான முன்னுதாரணத்துடன் நடந்துகொண்டதால், தனியார் நிறுவன முதலாளிகளும் `கூலி கொடுக்கமுடியாது' என்று சொல்லி உச்சநீதிமன்றம் சென்றார்கள். உடனே மத்திய அரசு, `ஊதியம் கொடுங்கள்' என்ற தன் அறிவிப்பை வாபஸ் வாங்கிவிட்டது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்திலோ, தொடர்ந்து பாராமுகம் காட்டிவருகிறது மத்திய அரசு. மாநிலம்தோறும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய எந்தவித புள்ளிவிவரமும் அரசிடம் இல்லை. தொழிலாளர் சட்ட விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படவில்லை. பசியும் பட்டினியுமாக ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்தே செல்கிறார்கள் தொழிலாளர்கள். வட மாநிலத் தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு திருப்பியனுப்புங்கள், 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்குங்கள், என்றெல்லாம் உள்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகங்களுக்கு, நாங்கள் பலமுறை கடிதம் எழுதி, தொலைபேசியில் அறிவுறுத்தியும்கூட இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், `தொழிலாளிகளை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டாம்' என்ற முதலாளிகளின் விருப்பத்தை மட்டும் தொடர்ந்து செயல்படுத்திவருகிறது மத்திய அரசு. இது, இந்தியாவுக்கே தலைகுனிவு.

இதுமட்டுமல்லாமல், தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்களை நீர்த்துப்போகச் செய்வதற்கான வேலைகளையும் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகமே முன்னெடுத்துச் செய்துவருவதோடு, மாநில அரசுகளையும் இதற்கு உடன்பட வற்புறுத்திவருகிறது. ஏற்கெனவே, பல மாநிலங்களில் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்திவிட்டார்கள். `சர்வதேச தொழிலாளர் அமைப்பு' விதிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுத்துவரும் இந்த மூர்க்க நடவடிக்கைகளைக் கண்டித்தே கறுப்புக்கொடி போராட்டத்தை நடத்துகிறோம்'' என்றார் ஆவேசமாக.

சண்முகம் - சௌந்தர்ராஜன்
சண்முகம் - சௌந்தர்ராஜன்

சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவரான சௌந்தர்ராஜன், ``8 மணி நேர வேலை என்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமை. ஆனால், கொரோனா ஊரடங்கைக் காரணம்காட்டி உத்தரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், புதுச்சேரி, ஹரியானா போன்ற மாநிலங்களில் 12 மணிநேர வேலையைக் கொண்டுவந்துவிட்டார்கள். மேலும், 3 வருடங்களுக்கு தொழிலாளர் நலன் சார்ந்த அடிப்படைச் சட்டங்களை எல்லாம் முடக்கி வைத்துவிட்டார்கள். சட்டங்கள் நடைமுறையில் இருக்கிறபோதே, தொழிலாளர்களின் சம்பளத்தில் ஆரம்பித்து பல்வேறு உரிமைகளையும் பறித்துக்கொண்டிருக்கும் முதலாளி வர்க்கத்துக்கு இந்த `சட்ட முடக்கம்' என்பது கை, கால் கட்டுகளை அவிழ்த்துவிட்ட கதையாகத்தான் இருக்கப்போகிறது. அவசர கால நிலையைத்தான் `கொடுமையான ஆட்சி' என்று சொல்வார்கள். ஆனால், அப்போதுகூட இப்படியான சட்ட முடக்கங்கள் இல்லை.

இது மட்டுமல்ல... பாதுகாப்புத் துறையில் ஆரம்பித்து விண்வெளி ஆராய்ச்சி மற்றும் வங்கி, ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள், நிலக்கரிச் சுரங்கம் உள்ளிட்ட கனிமவளத் துறை என அனைத்தையும் தனியார் மயமாக்கிவிட்டது மத்திய அரசு. இதில், அந்நிய நேரடி முதலீடு என்பது இதுவரையில் 49 சதவிகிதம் மட்டுமே என்றிருந்த நிலையை மாற்றி, 74 சதவிகிதமாக உயர்த்திவிட்டார்கள். இவ்வளவையும் செய்துவிட்டு, `நாங்கள் தற்சார்பை நோக்கி பாரதத்தைக் கொண்டுசெல்கிறோம்' என்று சொல்கிறார்கள். இதுதான் தற்சார்பா? இல்லை நாங்கள் என்ன முட்டாள்களா...

கொரோனா எனும் இந்த உயிர்க்கொல்லி நோயை எதிர்த்து, இன்றைக்கு களத்தில் நின்று போராடும் மருத்துவர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவல்துறையினர் என அனைவருமே பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்தான். இப்போது பஸ், ரயில் என போக்குவரத்துத் துறையினரும் தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து, சேவையாற்றிவருகிறார்கள். இந்தத் துறைகளை எல்லாம் தனியார் மயமாக்கிவிட்டால், இதுபோன்ற பேரிடர் காலங்களில் இந்தச் சேவைகளெல்லாம் சாத்தியமாகுமா? `தனியார் பேருந்து இயக்கத்துக்கு அனுமதி கிடைத்ததும் 3 மடங்கு கட்டண உயர்வில் பேருந்து இயக்கப்படும்' என்று இப்போதே அறிவித்துவிட்டார்கள். தனியார் மயம் என்பது இப்படித்தான் இருக்கும்.

மருத்துவமனைகளை முழுமையாக தனியார் மயப்படுத்தியதால்தான், அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தை நெருங்கியிருக்கிறது. அதே சமயம், பொதுசுகாதாரத்துறையைத் தன்னகத்தே வைத்திருந்ததனால்தான் சீனா, கியூபா, வியட்நாம் போன்ற நாடுகளில், கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்திருக்கிறது. பொது சுகாதாரத்தில் முன்னணி மாநிலமாக இருந்துவரும் கேரளா, அரசு - கட்சி - தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பையும் ஒருங்கிணைத்து, சுமார் 2 லட்சம் பேர்களை ஒன்றுதிரட்டி, கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்தி வெற்றியடைந்திருக்கிறார்கள்.

`போலீஸ் ஏட்டு துணையோடு மணல் கொள்ளை?’- தடுக்க முயன்ற ஒரத்தநாடு விவசாயியிக்கு நேர்ந்த கொடுமை
புலம்பெயர் தொழிலாளர்கள்
புலம்பெயர் தொழிலாளர்கள்

இதையெல்லாம் நாங்கள் எடுத்துச்சொன்னால், `எதிர்க்கட்சிகள் இப்படித்தான் ஆளுங்கட்சியைக் குறைசொல்வார்கள்...' என்று சொல்லி பதில் தர மறுக்கின்றனர் பா.ஜ.க-வினர். ஆனால், பாரதிய ஜனதா கட்சியின் தொழிற்சங்க அமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கமே, மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்த்திருக்கிறது. 20 லட்சம் கோடி நிதித்தொகுப்பு அறிவிப்பு செய்யப்பட்ட நாளன்று, `இது தேசத்தின் சோக நாள்' என்று பி.எம்.எஸ் சங்க பொதுச்செயலாளர் அறிக்கையே வெளியிட்டிருக்கிறார். பா.ஜ.க-வினர், இவர்களுக்காவது பதில் சொல்ல வேண்டும்!'' என்றார் காட்டமாக.

தொழிற்சங்கங்களின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் ஶ்ரீனிவாசனிடம் பேசினோம்... ``மார்ச் 24-ம் தேதியிலிருந்துதான் முதல் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. அப்போதே, `ஊரடங்கிலிருக்கும் நாள்களுக்கும் சேர்த்து தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்' என்று உள்துறை அமைச்சகம் அறிவித்தது. அதன்பிறகு 2, 3 எனக் கடந்து, இப்போது 4-வது கட்ட ஊரடங்கில் இருந்துவருகிறோம். இதற்கிடையில், `ஊதியம் வழங்க இயலாது' எனக்கூறி தொழில் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றம் சென்றுவிட்டது. வழக்கு விசாரணையின்போது, `நிறுவனங்கள் செயல்படாத சூழ்நிலையில் ஊதியம் வழங்க இயலாது' என்று உச்ச நீதிமன்றமும் அரசுக்கு எடுத்துச் சொன்னதாலேயே அறிவிப்பை வாபஸ் வாங்க நேர்ந்தது. இது, 4-வது கட்ட ஊரடங்கு அறிவிப்பின்போது நடைபெற்றது என்பதால், இதற்கு முந்தைய ஊரடங்கு காலகட்டத்தில் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை நிறுவனங்கள் வழங்கியாக வேண்டும்தான். இந்த வழக்கு இன்னும் முடியவில்லை... அடுத்த வாரமும் விசாரணைக்கு வருகிறது. எனவே, இப்போதே `அரசின் நிலைப்பாடு இதுதான்' என்றுகூறி எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது சரியல்ல.

புலம்பெயர் தொழிலாளர்கள்
புலம்பெயர் தொழிலாளர்கள்

கொரோனா ஊரடங்கு என்பது, ஹாலிடே அல்லது பந்த் அல்ல; இது பேரிடர். எனவே, புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குப் போகமுடியாது; போகக்கூடாது. இதுதான் மார்ச் 24 அன்று இருந்த நிலைமை. அதாவது, கொரோனா ஆரம்பகட்ட நடவடிக்கைகளின்போது, நம்மிடம் கொரோனா பரிசோதனைக்கான கருவிகளோ, மருந்துகளோ அல்லது நோய்த் தொற்று குறித்த அனுபவமோ இல்லை. அதனால், நாடு முழுவதும் உள்ள 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களையும் இடம்பெயர அனுமதிக்கவில்லை. ஒருவேளை அனுமதித்திருந்தால், அது எவ்வளவு பெரிய பாதிப்பை உண்டாக்கியிருக்கும் என்பதையும் எதிர்க்கட்சியினர் நினைத்துப்பார்க்க வேண்டும்.

இப்போது, பரிசோதனைக் கருவிகள் மற்றும் மருந்துகளோடு நமக்கு நோய்த்தொற்று குறித்த விரிவான அனுபவமும் கிடைத்திருக்கிறது. எனவே, ஊரடங்கு தளர்வு வரவர புலம்பெயர் தொழிலாளர்களையும் ரயில்கள் வழியே சொந்த ஊர்களுக்கு அனுப்பிவருகிறோம். ரயில்களை இயக்குகிற ரயில்வே துறையைச் சேர்ந்தவர்களைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது. ஆனாலும் இதுவரையில் 1,125 ரயில்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 21 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குத் திரும்பியிருக்கிறார்கள். ஜூன் 1-ம் தேதி முதல் இந்த போக்குவரத்து நிலைமை சகஜமாகும்.

தொழில் பாதுகாப்பாக இருந்தால்தான் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கமுடியும். எனவே, இப்போதைய சூழ்நிலையில் முற்றிலும் விழுந்துவிட்ட பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதற்காகத் தொழில்களைக் காப்பாற்றுவதுதான் முதல்கட்ட நடவடிக்கை. எனவே, தொழிலாளர் சட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன என்பதெல்லாம் தற்காலிகமானதுதான். பொருளாதார நிலைமை சீரானபிறகு, அனைத்து உரிமைகளும் மீண்டும் நடைமுறைக்கு வந்துவிடும்.

தற்சார்பு - சுதேசி என்பதன் அர்த்தமே `இந்திய நலன்கள்' என்பதுதான். அந்த வகையில்தான் தற்போது அந்நிய நேரடி முதலீடு, 74 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், இந்திய ராணுவத் தளவாடங்கள் 90 சதவிகிதம் இறக்குமதிதான் செய்யப்படுகிறது. 10 சதவிகிதம் மட்டுமே இந்தியாவில் உற்பத்திசெய்யப்படுகிறது. இதனால், நம்முடைய பணம் வெளிநாட்டுக்குச் சென்றுகொண்டிருந்தது. ஆனால், 74 சதவிகித நேரடி அந்நிய முதலீட்டினால், வெளிநாட்டு நிறுவனங்களின் பண முதலீடு இந்தியாவுக்குக் கிடைக்கும்.

ஶ்ரீனிவாசன்
ஶ்ரீனிவாசன்
`உங்கள் திறமையின்மையாலேயே இவ்வளவு மரணங்கள்!’ - தொடரும் அமெரிக்கா - சீனா வார்த்தைப் போர்

அடுத்து, இந்தியாவிலேயே பொருள்களை உற்பத்திசெய்யும் சூழல் உருவாவதால், இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். தொழில்நுட்பமும் நாளடைவில் நம் கைவரப்பெறும். எனவே, இது நமக்கு சாதகமான அம்சம்தான். கடந்தகால மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில், 100 சதவிகித நேரடி அந்நிய முதலீடு நடைமுறையில் இருந்துவந்திருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.

பி.எம்.எஸ் எனப்படும் பாரதிய மஸ்தூர் சங்கம், பாரதிய ஜனதா கட்சியின் நேரடி தொழிற்சங்கம் அல்ல. நட்பு இயக்கம் அவ்வளவுதான். எனவே, மத்திய அரசின் நடவடிக்கைகளைப் பொறுத்து பாராட்டுவதும், எதிர்ப்பதுமாக கடந்த காலத்திலும் அவர்கள் பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்துவந்திருக்கிறார்கள்'' என்கிறார் ஶ்ரீனிவாசன்.

அடுத்த கட்டுரைக்கு