Published:Updated:

முதல்வர் கரூர் விசிட்: போக்குவரத்தில் குளறுபடி; அல்லாடிய பயணிகள், வாகன ஓட்டிகள்!

முதல்வர் கரூர் விசிட் ( நா.ராஜமுருகன் )

முதல்வரின் வருகையையொட்டி 10-ம் தேதி இரவும், விழா நடைபெற்ற இன்று காலையும் போக்குவரத்து ஸ்தம்பித்துப்போனதாக பொதுமக்கள் குமுறுகிறார்கள்.

முதல்வர் கரூர் விசிட்: போக்குவரத்தில் குளறுபடி; அல்லாடிய பயணிகள், வாகன ஓட்டிகள்!

முதல்வரின் வருகையையொட்டி 10-ம் தேதி இரவும், விழா நடைபெற்ற இன்று காலையும் போக்குவரத்து ஸ்தம்பித்துப்போனதாக பொதுமக்கள் குமுறுகிறார்கள்.

Published:Updated:
முதல்வர் கரூர் விசிட் ( நா.ராஜமுருகன் )

கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்த 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், 'இது தமிழக அரசியலில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய நாள். இந்தியாவிலேயே இது போன்ற சாதனையை யாரும் செய்யவில்லை' என்று மெச்சிப் பேசினார். ஆனால், முதல்வரின் வருகையையொட்டி 10-ம் தேதி இரவும், விழா நடைபெற்ற இன்று காலையும் போக்குவரத்து ஸ்தம்பித்துப்போனதாக பொதுமக்கள் குமுறுகிறார்கள்.

விழாவில் முதல்வர்
விழாவில் முதல்வர்
நா.ராஜமுருகன்

அரவக்குறிச்சி அருகேயுள்ள தடாகோயில் பகுதியில், கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி, இந்த விழா நடைபெற்றது. நேற்று மாலை ஈரோட்டில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர், நேற்று இரவே கரூருக்கு வருகை தந்தார். இன்று மதியம் திண்டுக்கல்லில் பிரதமர் கலந்துகொள்ளும் விழாவில் கலந்துகொள்ளவிருந்ததால், இடைப்பட்ட நேரத்தில் முதல்வரை வைத்து, மின் இணைப்பு வழங்கும் விழாவை நடத்தத் திட்டமிட்டார் செந்தில் பாலாஜி.

கரூருக்கு முதல்வர் வந்தபோது
கரூருக்கு முதல்வர் வந்தபோது
நா.ராஜமுருகன்

கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு திடீரென இந்த விழாவை முடிவுசெய்த அமைச்சர், அதற்கான இடத்தைத் தேர்வு செய்தல், விழா ஏற்பாட்டைச் செய்து முடித்தல் என துரிதகதியில் செயல்பட்டார். வழக்கமாக அவர் செய்யும் பிரமாண்ட விழா பந்தல், தோரணங்கள், வரவேற்புகள் என அனைத்தையும் செய்தார். இந்த நிலையில், 'டிராஃபிக் ஜாம், பயணிகளின் அல்லல்' ஆகிய விஷயங்கள் விழா ஏற்பாட்டில் குறை ஏற்படுத்திவிட்டதாகச் சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர்.

நேற்று இரவு, ஈரோடு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, கொடுமுடி வழியாக கரூர் மாவட்ட எல்லையான நொய்யல் குறுக்கு சாலை பகுதிக்கு முதல்வர் வருகைதந்தபோது, கரூர் மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் வளர்மதி, புகழூர் நகரத் தலைவர் குணசேகரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கரூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள ரவுண்டானா பகுதியில் கரூர் நகர தி.மு.க சார்பில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்காக, இரண்டு மணி நேரத்துக்கு முன்பிருந்தே தி.மு.க தொண்டர்கள் சாலையின் இருபுறமும் நின்று கொடியை அசைத்தபடி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், தமிழக முதலமைச்சரின் வருகையையொட்டி கரூர் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால் இரவு 7 மணி முதல் 10:00 மணி வரை கரூர் நகரப் பகுதிக்கு வரும் கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலை, கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டன.

கரூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள்
கரூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள்
நா.ராஜமுருகன்

இதனால், கரூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பேருந்து கிடைக்காமல் சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்தனர். அவர்களால் உடனடியாக பேருந்தில் ஏறிச் செல்ல முடியவில்லை. இரவு 10 மணியளவில் கரூர் நகர் பகுதியில் பேருந்துகள் அனுமதிக்கப்பட்டதால், மாலையே வீடு திரும்பவேண்டிய பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். இதற்குக் காரணம், முதல்வரின் வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து மாற்றம் செய்த காவல்துறை, இரவு நேரத்தில் வீடு திரும்பும் பொதுமக்களுக்கு தனிக்கவனம் செலுத்தி போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தராததே என்று அதிருப்தி தெரிவிக்கிறார்கள் பொதுமக்கள். அதேபோல், கரூர் நகரப் பகுதிக்கு வெளியேயுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கரூர்-ஈரோடு சாலையில் தமிழக முதல்வர் வருகையால் சுமார் எட்டு மணி அளவில் திடீரென போக்குவரத்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

இதனால், வழிநெடுக சுமார் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டதுடன், சுமார் இரண்டு மணி நேரத்தத்துக்குப் பிறகே போக்குவரத்து நெரிசல் சீரானது. இந்த நெரிசலில் சிக்கிய பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். நெடுந்தூரம் அவசரமாகச் செல்ல வேண்டிய மக்கள் அவதிக்குள்ளாகினார்கள். அதேபோல், விழா நடைபெற்ற இன்றும் ஒரு மணி நேரத்துக்கு கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல், விழா தொடங்குவதற்கு முன்பே வெளியே மழை பலமாகப் பெய்தது. பாதுகாப்புக்காக இருந்த அதிகாரிகளும், காவல்துறையினரும் மழையில் நனைந்தபடி நின்றனர். குடை, பிளாஸ்டிக் உடைகளிலிருந்தவர்கள் அதைப் பயன்படுத்தி மழையிலிருந்து தங்களை காபந்து செய்துகொண்டனர்.

வரவேற்பு கொடுக்க காத்திருந்த பெண்கள்
வரவேற்பு கொடுக்க காத்திருந்த பெண்கள்
நா.ராஜமுருகன்

அதேபோல், முதல்வரை வரவேற்க நெடுஞ்சாலையிலிருந்து விழா மேடை வரை 50 மீட்டர் தூரத்துக்குப் பெண்கள் பூரண கும்ப மரியாதை வழங்க கால் மணி நேரம் கொட்டும் மழையில் நனைந்தபடி காத்திருந்தனர். "முதல்வர் முக்கியமான விழாவுக்கு கரூர் வந்தார். அதை யாரும் குறை சொல்ல முடியாது. ஆனால், கரூரில் கன்னியாகுமரி டு காஷ்மீர், திருச்சி டு கோவை, திருச்சி டு ஈரோடு என முக்கியச் சாலைகள் செல்கின்றன. ஆனால், சரிவர போக்குவரத்து மாற்றம் செய்யாததால், ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியுற்றனர். அமைச்சருக்கு இந்தக் குளறுபடிகள் தெரியுமா, தெரியாதா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், இனிமேல் நடக்கும் விழாக்களிலாவது இந்த விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும்" என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.