Published:Updated:

`சிக்னலில் யாசகம் கேட்கும் குழந்தைகளை இயக்குவது யார்?'- பார்த்திபன் பற்றவைத்த திரியும் கள நிலவரமும்

சிக்னலில் யாசகம் கேட்கும் குழந்தைகள்

சமீப காலமாக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களின் சாலைகள் மற்றும் சிக்னல்களில் யாசகம் கேட்கும் சிறுவர்கள், சிறுமிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதைக் காணமுடிகிறது.

`சிக்னலில் யாசகம் கேட்கும் குழந்தைகளை இயக்குவது யார்?'- பார்த்திபன் பற்றவைத்த திரியும் கள நிலவரமும்

சமீப காலமாக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களின் சாலைகள் மற்றும் சிக்னல்களில் யாசகம் கேட்கும் சிறுவர்கள், சிறுமிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதைக் காணமுடிகிறது.

Published:Updated:
சிக்னலில் யாசகம் கேட்கும் குழந்தைகள்

சென்னை எழும்பூரில் கடந்த வாரம் உள்ள காவல் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ``சிக்னலில் யாசகம் எடுக்கும் குழந்தைகள், அவர்களின் வாழ்க்கை சம்மந்தமாக நாம் பேசிபேசி அந்த எண்ணிக்கை தற்போது குறைந்திருக்கிறது. இருந்தாலும், இன்னமும் 10 பேர் சிக்னலில் நின்று யாசகம் கேட்கும்நிலைதான் இருக்கிறது. அந்த நிலையை எப்படியாவது அகற்றவேண்டும். இதற்குப் பின்னால் வேறு சிலரின் முகம் இருக்கிறது. அவர்கள்தான் இந்தக் குழந்தைகளை இயக்குகிறார்கள். இந்த பிரச்னைக்கு தீர்வு காண உடடியாக நடவடிக்கை வேண்டும் என தமிழ்நாடு காவல்துறையை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

பார்த்திபன்
பார்த்திபன்

இந்த விவகாரத்தின் உண்மை நிலை என்ன? உண்மையிலேயே யாசகம் கேட்கும் குழந்தைகளின் பின்னணியில் ஒரு நெட்வோர்க் செயல்படுகிறதா? என்ற கேள்விகளின் அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்புக்காகச் செயல்பட்டுவரும் எய்ம்ஸ் (AIMS - All India Movement for Service) தன்னார்வ அமைப்பின் செயலாளர் கன்யா பாபுவிடம் பேசினோம். அவர் நேரில் சந்தித்த சில கள அனுபவங்களுடன் நம்மிடையே பேசத் தொடங்கினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சேத்துப்பட்டு சிக்னலில் நடந்த சம்பவம்:

``கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சேத்துப்பட்டு சிக்னலில் நடந்த ஒரு சம்பவம். ஒரு பெண் கையில் குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு யாசகம் எடுத்துக்கொண்டிருந்தார். நான் சந்தேகப்பட்டு, குழந்தை அழகாக இருக்கிறதே? என்றுச் சொல்லி அந்தக் குழந்தையை போட்டோ எடுக்க முயன்றேன். உடனடியாக அந்த பெண் `போட்டோ எடுத்தால் என் கணவர் திட்டுவார்' என்று சொல்லி மற்றுத்து சண்டையிடத் தொடங்கினார். உடனடியாக, `என்ன பிரச்னை? என்று கேட்டுக்கொண்டே அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக வந்த ஒரு நபர், `அந்த குழந்தையின் அம்மா அங்கே உட்கார்ந்திருக்கிறாள். அவள் பார்த்தா சண்டைக்கு வருவாள்' எனக்கூறி என்னை விரட்டினார்.

கன்யா பாபு
கன்யா பாபு

எனக்கு அது அவர்களின் குழந்தை இல்லை என்பது புரிந்தது. உடனடியாக, `உண்மையைச் சொல்லுங்க, இந்தக் குழந்தை யாருடையது?' என்று கேட்கத் தொடங்கவும், என்னைச் சுற்றி அவர்களுடைய ஆட்கள் ஒரு 10 பேர் சூழ்ந்துகொண்டார்கள். அதில் ஒருவன் திடீரென வந்து, `எதுவாக இருந்தாலும் என் தலைவர்கிட்ட பேசிக்க!' என்று சொல்லி ஒரு கட்சி பிரமுகரின் விசிட்டிங் கார்டை நீட்டினான். அதற்குள் அந்த யாசகம் எடுக்கும் பெண்ணை குழந்தையுடன் மெதுவாக நகர்த்திச் சென்றுவிட்டனர். சுற்றிலும் நபர்கள் சூழ்ந்துவிட்டதால், என்னுடைய இரண்டு குழந்தைகளுடன் இருந்த நான், சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அந்த இடத்திலிருந்து நகர்ந்து ஆட்டோவில் ஏறி தப்பி வந்துவிட்டேன். அதன்பிறகு, அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.கே. விஸ்வநாதனிடம் இந்த சம்பவம் குறித்து புகார் தெரிவித்தேன். அதன்பிறகு, சென்னையில் யாசகம் கேட்டுவந்த 90-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டனர்."

சிக்னலில் யாசகம் எடுக்கும் குழந்தைகள் (கோப்பு படம்)
சிக்னலில் யாசகம் எடுக்கும் குழந்தைகள் (கோப்பு படம்)

சென்னை மெரினாவில் நடந்த சம்பவம்:

``இதேபோல, ஒரு நாள் சென்னை மெரினா கடற்கரையில் ஒரு அனுபவம் கிடைத்தது. அங்கு யாசகம் எடுத்துக்கொண்டிருந்த ஒரு பெண் குழந்தையிடம் பேசியபோது, அந்தக் குழந்தை வேறு மாநிலத்திலிருந்து சென்னை வந்திருப்பதை தெரிந்துகொண்டேன். அந்தக் குழந்தையை அமர வைத்து விவரங்களைக் கேட்டபோது, `அந்தக் குழந்தைக்கு ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெற்றோர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அந்தக் குழந்தைக்கு மாமாவாக ஒரு ஏஜெண்ட் செயல்படுகிறார். அன்றைய நாள் டார்கெட் பணத்தைக் குழந்தையால் யாசகம் எடுத்துக் கொடுக்கமுடியாத பட்சத்தில் குழந்தைக்கு ஏஜெண்ட் மாமா அடி கொடுக்கிறார்' என்ற தகவல்களைக் கேட்டு அதிர்ந்துபோனேன்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வட மாநிலக் குழந்தைகளை தமிழ்நாட்டிலும், தென் மாநிலக் குழந்தைகளை வட மாநிலங்களிலும் மாற்றி யாசகம் எடுக்க வைக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொண்டோம். குழந்தைகள் மட்டுமல்லாமல், கண் ஆபரேஷன் செய்த வயதான ஜோடிகளை செட் செய்தும் யாசகம் எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்துகிறது அந்த மாஃபியா கும்பல். இதேபோல், கைக்குழந்தையை வைத்து யாசகம் எடுக்கும் பெண்கள் குழந்தைக்கு மயக்க மருந்துகொடுத்து, உறக்க நிலையில் இருக்கும் வகையில் செய்து யாசகம் எடுக்க வைக்கப்படுகிறார்கள் என்பது இன்னும் வேதனை."

மெரினா
மெரினா

குஜராத்தில் சந்தித்த சம்பவம்:

``2017-ம் ஆண்டு தமிழ்நாட்டில் காணாமல் போன குழந்தை, குஜராத் வதோராவில் யாசகம் எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேரடியாக நங்கள் குஜராத் சென்றோம். அப்போதுதான் இதன் பின்னணியில் இருந்த மிகப்பெரிய நெட்வொர்க்கைப் பார்த்து அதிர்ந்துபோனோம். கிட்டத்தட்ட 2,000 குழந்தைகளை யாசகம் எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தி ஒரு மிகப்பெரிய மாஃபியா கும்பல் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்ததைக் கண்டுபிடித்தோம். அவர்களை ரகசியமாகப் பின் தொடர்ந்தோம். காலையில் சிறிய டெம்போக்களில் குழந்தைகளை மந்தை, மந்தையாக ஏற்றிக்கொண்டு கிளம்புகிறார்கள். ஒவ்வொரு 2 கி.மீட்டருக்கும் குழந்தைகளை கொஞ்சம் கொஞ்சமாக பிடித்து இறக்கி விடுகின்றனர். அந்த குழந்தைகளுடன் இரண்டு பெரிய ஆட்கள் அதாவது ஏஜெண்ட்கள் இறங்கிக்கொள்கிறார்கள். அவர்கள் பலூன் விற்பது, பஞ்சுமிட்டாய் விற்பது போன்ற போர்வையில் அந்தக் குழந்தைகளைக் கண்காணித்துக் கொள்கின்றனர்.

அவர்களின் கண்காணிப்பு வளையத்தை மீறி அந்தக் குழந்தைகள் தப்பித்தும் செல்லமுடியாது, வெளியாள்கள் வேறுயாரிடமும் பேசவும் முடியாது. இப்படியான சூழ்நிலையில்தான் யாசகம் எடுக்கும் குழந்தைகள் கடினமான நாள்களை நாள்தோறும் கடத்துகிறார்கள் என்பதை கண்கூடாக கண்டறிந்தோம். இந்தக் குழந்தைகளுக்கு ஒருநாள் கலெக்‌ஷன் டார்கெட் 2,000 ரூபாய். இந்த இரண்டாயிரம் குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் ஒருநாளைக்கு 2,000 ரூபாயை இந்த மாஃபியா ஏஜெண்டுகள் எடுத்தால், ஒருநாளைக்கு எவ்வளவு லட்சங்களில் வருமானம் ஈட்டுகிறார்கள் என்பதை நீங்களே கணக்குப்போட்டு பார்த்துக்கொள்ளுங்கள்!" என்றார். இந்த சம்பவங்களை நாங்கள் நிறைய திரைப்பட இயக்குநர்களிடமும், நடிகை ரோகினியுடனும் கூட பேசியிருக்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான விஜய்யின் தெறி படத்திலும் இதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?

``கடந்த மாதம்கூட எனது குழந்தைகளை மூலம், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம், `சென்னையில் யாசகம் எடுக்கும் குழந்தைகளை அதிகளவில் நாங்கள் பார்க்கிறோம். யாசகம் எடுக்கும் குழந்தைகள் இருக்ககூடாது. இதை தடுக்கவேண்டும்' எனக்கோரி மனுகொடுத்தோம். இதேபோல, நான் கம்ளைண்ட் கொடுக்கும்போதெல்லாம் ஒரு நான்கு நாள்களுக்கு யாசகம் எடுப்பவர்கள் எங்கும் இருக்க மாட்டார்கள். அதற்குள் எப்படியோ தகவல்போய் அலர்ட் ஆகிவிடுகிறார்கள். அதன்பிறகு மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக பழையபடியே அந்தந்தந்த இடங்களில் யாசகம் எடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

மாஃபியா
மாஃபியா

வியாபார நோக்கில் திட்டமிட்டு குழந்தைகளை யாசகம் எடுக்க வைப்பது ஒரு புறம் இருக்க, வறுமை காரணமாக பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை யாசகம் எடுக்க அனுப்புவதும் இருக்கத்தான் செய்கிறது. இதுபற்றி தொடர்ந்து குழந்தைகள் நலக் குழுவின் (Child Welfare Committee- CWC) உதவி எண் 1098-க்கு அழைத்து தகவல் தெரிவித்தாலும், அவர்கள் சம்மந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர்களை எச்சரித்து மட்டுமே அனுப்புகின்றனர். ஆனால், அப்படி செய்யக்கூடாது. பெற்றோர்களால் வளர்க்கமுடியாதக் குழந்தைகளை அரசாங்கமே ஏற்று, அரசு சார்பில் இயங்கும் இல்லங்களில் சேர்த்து, உணவு உடை இருப்பிடம், கல்வி என அனைத்து வசதிகளையும் அந்தக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும். இல்லையென்றால், அந்தக் குழந்தை பெண் குழந்தையாக இருக்கும்பட்சத்தில் விற்பதுக்கும், பாலியல் தொழிலில் தள்ளக்கூடிய நிலைக்கும் பெற்றோர்கள் செல்வார்கள். சென்றிருக்கிறார்கள்.

சிக்னல்
சிக்னல்

இந்த விவகாரங்களில் அரசாங்கம் அலட்சியமாக இருக்கக்கூடாது. இந்தக் குற்றங்களில் ஈடுபடும் மாஃபியா நெட்வொர்க்கை கண்டுபிடித்து, சம்மந்தப்பட்டவர்கள் யாராக இருப்பினும் நடவடிக்கை எடுத்து, கடுமையான தண்டனைகள் வழங்கவேணும். மேலும், பொதுமக்களும் யாசகம் எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பதுக்குப் பதிலாக உணவு வாங்கி கொடுக்கும் முறைக்கு மாறவேண்டும். ஏதாவது ஒரு புள்ளியிலாவது இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்." என்கிறார் கன்யா பாபு.

அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்!