Published:Updated:

டெல்லியைத் தொடர்ந்து மும்பை: தொடரும் புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலை!

பாந்த்ரா
பாந்த்ரா

நாடு தழுவிய ஊரடங்கால் வருமானம், வேலை இல்லாமல் புலம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.

கொரோனா அச்சுறுத்தல் உலகத்தையே முடக்கிப் போட்டுள்ளது. ஏப்ரல் 15-ம் தேதி நிலவரப்படி உலகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.25 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் அமலில் இருந்து வந்த 21 நாள் ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலை இந்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல் காலம் கடந்த பிறகே செயல்பட்டதாக குற்றச்சாட்டு இருந்துவருகிறது.

இந்த நிலையில், கடந்த மார்ச் 24-ம் தேதி நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு எந்தவித முன்னறிவுப்புமின்றி அறிவித்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைபோல நான்கு மணி நேரம் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டது. ஒரே இரவில் நாடு முழுவதும் பேருந்து, ரயில் என அனைத்துப் போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன. மக்கள் நடமாட்டம் ஒரே இரவில் முற்றிலுமாக முடங்க, வீட்டிலே தனித்திருந்து சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டிய தேவை உருவானது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

ஆனால், மத்திய அரசு எரிதழலாக கொதித்துக்கொண்டிருந்த நெருப்பை கண்டுகொள்ளத் தவறியது. 21 நாள்கள் ஊரடங்கால் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து அனைத்துத் தொழில்களும் முடங்கிப்போயின. இதனால் அமைப்பு சாரா துறையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பலருக்கும் வருமானம் தடைபட்டுப் போனது. இந்தத் தொழிலாளர்கள் பலரும் வேறு மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களே. வருமானமும் இல்லாமல், உணவுக்கும் வழியில்லாமல் போனதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெருவாரியான எண்ணிக்கையில் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல முற்பட்டனர்.

மத்திய அரசு இதை எதிர்பார்த்திருக்கவில்லை. இதனால் ஊரடங்கு அமலுக்கு வந்த தினம் இந்தியா முழுவதும் பிற மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல பேருந்து, ரயில் நிலையங்களில் குவிந்தனர். போக்குவரத்து முடங்கியதால் பல நூறு கிலோமீட்டர்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்றனர். இதனால் பலரும் உயிரிழக்கவும் நேர்ந்தது. அதற்குப் பிறகே ஊரடங்கு காலம் முடிகின்ற வரையில் அந்தந்த மாநில அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இருப்பிடமும், உணவும் அளிக்க வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டது.

அதற்குப் பிறகு டெல்லியில் சிக்கித்தவிக்கும் தங்கள் மாநிலத் தொழிலாளர்களை அழைத்துச் செல்ல உத்தரப்பிரதேச அரசு பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தது. அப்போது டெல்லியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டனர். அந்தக் காட்சிகள் நினைவைவிட்டு அகலாத நிலையில், கடந்த திங்களன்று மும்பையின் பாந்த்ராவில் சொந்த ஊர்களுக்கு தங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என பிற மாநிலத் தொழிலாளர்கள் குரல் எழுப்பத் தொடங்கினர்.

டெல்லி
டெல்லி

பாந்த்ராவில் என்ன நடந்தது?

மும்பையில் புலம்பெயர் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட, சமூகவலைதளங்கள் முக்கிய காரணமாக இருந்துள்ளது. Chalo Ghar Ki Ore' (வீடு நோக்கி செல்வோம்) என்ற பெயரில், ஃபேஸ்புக், ட்விட்டரில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகவும் வதந்திகள் பரவின. தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். வினே துபே என்பவர்தான் வதந்திகள் பரவ காரணமென்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏப்ரல் 18-ம் தேதிக்குள் மும்பை வாழ் புலம்பெயர் தொழிலாளர்களைச் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், வட இந்தியா நோக்கிச் செல்லும் பேரணி நடைபெறும்' என்றும் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வினே துபே கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 1,000 தொழிலாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, தொலைக்காட்சி நிருபர் ராகுல் குல்கர்னி என்பவர் ரயில்கள் மீண்டும் இயக்கப்படுவதாக தவறான தகவல்களைக் கொடுத்துள்ளார். ஆயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் பாந்த்ரா ரயில் நிலையத்தில் குவிய இந்தத் தகவலும் காரணமாக இருந்துள்ளது.

நெருக்கிய தொழில் அதிபர்கள்; எச்சரித்த சுகாதார நிறுவனம் - மோடியை முடக்கிய மூன்று நாள்கள்

மும்பையிலும் சரி, டெல்லியிலும் சரி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்னையை அரசு சரிவர கையாள முடியவில்லை என்பதே தெரிகிறது. `இந்த நெருக்கடிக்கு மத்திய அரசே காரணம், ரயில்களை இயக்கி தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்’ என சிவசேனாவின் ஆதித்ய தாக்கரே ட்வீட் செய்திருந்தார். பாந்த்ராவில் கூடியவர்களில் வாடகை கட்ட முடியாமல் வீட்டு உரிமையாளர்களால் விரட்டியடிக்கப்பட்ட தொழிலாளர்களும் அடங்குவர். நாடு முழுவதும் இத்தகைய தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் உரிய இருப்பிடம் இல்லாமல் தெருக்களிலும் குடிசைகளிலும் வசித்து வருகிறார்கள் என்பதே நிதர்சனம்

டெல்லி யமுனா நதிக்கரையில் புலம்பெயர் தொழிலாளர்கள்
டெல்லி யமுனா நதிக்கரையில் புலம்பெயர் தொழிலாளர்கள்

நாட்டில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் அமைப்பு சாரா துறைகளில் வேலை பார்ப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்ற நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. தொழில்கள் முடங்கியதால் வருமானம் நின்றுபோனது. தொழில்கள் எப்போது மீண்டும் தொடங்கும், ஊரடங்கு தளர்ந்தாலும் வேலை இருக்குமா என்கிற கேள்விகளுக்கு விடைதெரியாத மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்வதே வழி என்கிற முடிவுக்கு வந்திருந்தனர்.

இவர்களின் வேலைக்கும், வருமானத்துக்கும் எந்தவித உத்தரவாதமும் தற்போதுவரை வழங்கப்படவில்லை. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பொருளாதார உதவி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கும் மத்திய அரசு மௌனம் சாதித்தே வருகிறது. உச்சநீதிமன்றம் இது தொடர்பான வழக்கில், ``அரசாங்கம் உணவு வழங்குகின்றபோது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏன் ஊதியம் வழங்க வேண்டும்” என தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் எப்படியாவது சொந்த ஊர்களுக்குச் சென்றாக வேண்டும் என இந்தியாவின் பல பகுதிகளிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர்.

Migrants - Vikatan Info graphics
Migrants - Vikatan Info graphics

டெல்லியில் கடந்த மாதமும் மும்பையில் இந்த வாரமும் நிகழ்ந்த சம்பவங்களில் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அரசுத் தரவுகளின்படி இந்தியாவிலே அதிக அளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கொண்டுள்ள நகரங்கள் இவை இரண்டுமே. டெல்லி மற்றும் மும்பை மக்கள் தொகையில் மூன்றில் ஒருவர் புலம்பெயர்ந்து வந்தவர்களே. இந்த இரண்டு மாநிலங்களுக்கும் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரிலிருந்துதான் அதிக அளவில் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் உரிய வேலைகள் இல்லாத காரணத்தினால் மக்கள் மும்பை போன்ற தொலைவான நகரங்களுக்கு வேலைக்காகச் செல்ல நேர்கிறது.

இனிவரும் காலங்களிலாவது மத்திய, மாநில அரசுகள் அமைப்பு சாரா துறைகளில் பணிபுரிபவர்களின் வாழ்வாதாரம், வேலை மற்றும் வருமானத்துக்கான உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு