Published:Updated:

'புரிந்துகொள்ளப்படாத திருநர் சமூகம்'- அரசு மசோதாவிற்கு மீண்டும் எதிர்ப்பு!

சர்ச்சையாகும் திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2019.

Transgender
Transgender

திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2019-ஐ அறிமுகப்படுத்த, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. திருநங்கைகளின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி அதிகாரங்களுக்கு இந்த மசோதா வழிவகுக்கும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

parliament
parliament

இந்நிலையில், திருநங்கைகள் மசோதாவின் அம்சங்கள் குறித்து தொடர் சர்ச்சைகள், திருநர் சமூகத்திலிருந்து கடும் எதிர்ப்புகள் என இந்த மசோதாவைச் சுற்றிய பிரச்னைகள் இன்னும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, உண்மையில் திருநங்கைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா? அவர்களின் பல வருட போராட்டங்களுக்கு செவிசாய்த்து, அரசு பழைய மசோதாவில் திருத்தங்கள் செய்திருக்கிறதா என்ற கேள்விகளோடு, திருநங்கை சமூகச் செயற்பாட்டாளர் கிரேஸ் பானுவைத் தொடர்புகொண்டோம்.

 கிரேஸ் பானு
கிரேஸ் பானு
Vikatan

``இந்த ஆண்டு, அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் மசோதா, சர்ச்சைக்குரிய கடந்த ஆண்டின் மசோதாவிலிருந்து பெயரில் மட்டுமே மாற்றம் கண்டிருக்கிறது. திருநங்கைகளுக்கான சட்ட மசோதா முதன்முதலில் 2015-ம் ஆண்டு, எம்.பி திருச்சி சிவாவால் தனிநபர் மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையில், அந்த மசோதாவில் திருநங்கைகளுக்கு நன்மை பயக்கும் பல அம்சங்கள் இருந்தன. அந்த மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.

பின்னர், அந்த மசோதா லோக் சபா ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அதேசமயத்தில்தான், அப்போதைய சமூகநீதி மற்றும் நலத்துறை மந்திரி தாவர்சந்த் கெலாட், `திருநங்கைகள் சட்டம் -2016' என்ற சட்டமசோதாவை அறிமுகம்செய்தார். இந்தச் சட்ட மசோதா பெரும் பிழைகளோடு இருந்தது. திருநங்கைகள், திருநம்பிகள் யார் என்ற அடையாளப்படுத்துதல் முதல், அவர்கள் மீதான புரிதலற்ற ஒடுக்குமுறை முதல் பல்வேறு பிழைகள் இருந்தன. இதற்குத்தான் இந்தியா முழுவதும் உள்ள திருநங்கை, திருநம்பி சமூகங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். போராட்டங்களின் பலனாக, திருநர்கள் யார் யார் என்று அவர்களை அரசு அடையாளப்படுத்தும் வரையறையில் மட்டுமே மாற்றங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. அவை தவிர்த்து, மற்ற அம்சங்களில் மாற்றங்கள் செய்யப்படவில்லை" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "அரசு மசோதாவைக் காரணம் காட்டி திருச்சி எம்.பி சிவா அறிமுகப்படுத்திய மசோதாவும் லோக் சபாவில் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு நிறைவேற்றப்படாமல்போன அதே திருநங்கைகள் மசோதாவை, சிறு பெயர் மாற்றத்துடன் இந்த ஆண்டு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதில் எங்களுக்கு நன்மை பயப்பது எதுவுமே இல்லை. மீண்டும் நாங்கள் போர்க்கோடி உயர்த்துகிறோம். எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் போராடுவதைத் தவிர்த்து எங்களுக்கு வேறு வழி இல்லை" என வருத்தத்துடன் பேசி முடித்தா கிரேஸ் பானு.

parliament
parliament

அமைச்சரவையில், திருநங்கைகளுக்கான மசோதா என்றவுடன் அதைப் பாராட்டுகிறோம், ஆதரிக்கிறோம். ஆனால், உண்மை நிலவரம் வேறாக இருக்கிறது. மாற்றுப் பாலினத்தவரின் தேவைகளையும், உணர்வுகளையும் அரசாங்கமே சரிவர புரிந்துகொள்ளாதபோது, தனிமனிதனை மட்டும் நாம் குறைசொல்லி என்ன பயன்?