Published:Updated:

அரசியலில் சந்தித்த சோதனைகள், வேதனைகள்... அமைச்சர் ரோஜா ஜெயித்த கதை!

ஆந்திர முதல்வர் ஜெகனுடன் ரோஜா

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக இடம்பெற்றுள்ள நடிகை ரோஜா, அரசியல் வாழ்க்கையில் ஏராளமான சோதனைகளையும் வேதனைகளையும் எதிர்கொண்டவர்.

அரசியலில் சந்தித்த சோதனைகள், வேதனைகள்... அமைச்சர் ரோஜா ஜெயித்த கதை!

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக இடம்பெற்றுள்ள நடிகை ரோஜா, அரசியல் வாழ்க்கையில் ஏராளமான சோதனைகளையும் வேதனைகளையும் எதிர்கொண்டவர்.

Published:Updated:
ஆந்திர முதல்வர் ஜெகனுடன் ரோஜா

ஆந்திராவின் சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை ரோஜா பொறுப்பேற்ற பிறகு, இரண்டு நாள்களுக்கு முன்பு தன் சொந்தத் தொகுதியான நகரிக்குச் சென்றார். அப்போது, அவருக்குத் தொகுதி மக்கள் பிரமாண்டமான வரவேற்பை அளித்தனர். அமைச்சர் ரோஜாவுக்குக் கட்சித் தொண்டர்கள் 10 அடி உயர ரோஜா மாலையை அணிவித்தனர். இந்த உயரத்தை அடைவதற்கு அவர் சந்தித்த சோதனைகளும், அனுபவித்த வேதனைகளும் ஏராளம்.

முதல்வருடன் ரோஜா குடும்பம்
முதல்வருடன் ரோஜா குடும்பம்

சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கிய ரோஜாவுக்கு, அரசியல்மீது விருப்பம் ஏற்பட்டது. அந்த நேரத்தில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி ஆந்திராவில் நடைபெற்றது. சந்திரபாபு நாயுடுவின் அழைப்பை ஏற்று, தெலுங்கு தேசம் கட்சியில் 1999-ம் ஆண்டு ரோஜா இணைந்தார். அந்தக் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராக ஆந்திரா முழுவதும் அவர் வலம்வந்தார். நக்சலைட் இயக்கத்தின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் அவர் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தை ஆந்திர மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தெலுங்கு தேசம் கட்சியின் மகளிரணித் தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு தனக்குப் பெரிய முக்கியத்துவமோ, அங்கீகாரமோ கட்சியில் அளிக்கப்படவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்தது. தெலுங்கு தேசம் கட்சிக்குள் நிலவிய உட்கட்சி அரசியலால், தனது வளர்ச்சி பாதிக்கப்படுவதாக தனக்கு நெருக்கமான வட்டாரங்களில் அவர் கவலைப்பட்டார். தெலுங்கு தேசம் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இரண்டு முறை அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இரண்டு முறையும் அவரால் வெற்றிபெற முடியவில்லை.

ஜெகன் மோகன் ரெட்டியுடன் ரோஜா
ஜெகன் மோகன் ரெட்டியுடன் ரோஜா

தனக்கு எதிரான உட்கட்சி அரசியல் செயல்பாடுகள்தான், தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று ரோஜா வேதனை தெரிவித்தார். பத்தாண்டுக்காலம் தெலுங்கு தேசம் கட்சியில் அரசியல் பயணம் மேற்கொண்ட அவரால், அதற்கு மேல் அங்கு நீடிக்க முடியவில்லை. எனவே, தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து அவர் விலகினார்.

ஆந்திராவின் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பிறகு, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் என்கிற புதிய கட்சியை ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கினார். அந்தக் கட்சியில் ரோஜா இணைந்தார். 2014-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நகரி தொகுதியில் ரோஜா போட்டியிடுவதற்கு ஜெகன் மோகன் ரெட்டி வாய்ப்பு வழங்கினார். அந்தத் தேர்தலில் ரோஜா வெற்றிபெற்றார். அப்போது, ‘யுத்தத்தில் ஜெயித்துவிட்டேன்’ என்று அவர் கண்ணீருடன் உணர்ச்சி பொங்கக் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது, “இரண்டு முறை தெலுங்கு தேசம் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு, சொந்தக் கட்சியினரால் தோற்கடிக்கப்பட்டேன். இன்றைக்கு தெலுங்கு தேசம் கட்சியினருடன், காங்கிரஸ் கட்சியினரும் கூட்டுச் சேர்ந்து என்னை தோற்கடிக்க சதி செய்தனர். அதை முறியடித்து நான் வெற்றிபெற்றிருக்கிறேன்” என்று ரோஜா கூறினார்.

அவரது சட்டமன்றச் செயல்பாடுகள் அதிரடியாக இருந்தன. சட்டமன்றத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கேள்விகளால் திணறடித்தார் ரோஜா. அதனால், ஓராண்டுக்காலத்துக்கு சட்டமன்றத்திலிருந்து ரோஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

 ரோஜா
ரோஜா

2019-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் ரோஜாவுக்கு வாய்ப்பு வழங்கினார் ஜெகன் மோகன் ரெட்டி. இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ-வாக ரோஜா வெற்றிபெற்றார். அப்போது, அமைச்சரவையில் தனக்கு இடம் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில், ரோஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அரசியலில் தனக்கு எதிரான தடைகளை முறியடித்து, இன்றைக்கு ஆந்திராவின் சுற்றுலாத்துறை அமைச்சராக ரோஜா உயர்ந்திருக்கிறார். 2014-ம் ஆண்டு எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்றபோது, “என் வாழ்நாளை நகரி மக்களுக்காக அர்ப்பணிப்பேன்” என்று கூறிய ரோஜாவை, இன்று 10 அடி உயர ரோஜா மாலையை அணிவித்து நகரி மக்கள் வரவேற்றிருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism