Published:Updated:

`30 ஆண்டுகளாகத் தீராத துயரம்!' - பாம்பு, கீரி, ஆமைகளுடன் ஆர்.டி.ஓ-வைப் பார்க்கவந்த பழங்குடிகள்

இடம்பெயரும் பழங்குடியினருக்குச் சாதிச்சான்று வழங்க மறுக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆனாலும் அதை மதிக்காமல் எங்களுக்குச் சான்றிதழ் வழங்க மறுக்கிறார்கள்.

பாம்புடன் முற்றுகை
பாம்புடன் முற்றுகை

நெல்லை மாவட்டம் தருவை கிராமத்தில் காட்டுநாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த 30 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடந்த 30 வருடங்களாக அங்கு குடியிருந்துவரும் அவர்கள், வேட்டையாடியும் குறி சொல்லியும் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்திவருகிறார்கள்.

கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

நாடோடி சமூகத்தைச் சேர்ந்த அந்த மக்கள், தங்கள் குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதற்குச் சாதிச்சான்று தேவைப்படுவதால் வருவாய்த்துறையினரிடம் மனு செய்துள்ளனர். ஆனால், அவர்களுக்குச் சாதிச்சான்று வழங்க தொடர்ந்து மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளாகப் பலரும் இதுபோன்று அலைக்கழிப்புக்கு உள்ளாக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.

``சாதிச் சான்றிதழ் வேண்டும்..!” - பாம்புகளுடன் ஆட்சியர் அலுவலகத்தை அதிர வைத்த நாடோடி இன மக்கள்

இந்தநிலையில், தங்களுக்குச் சாதிச் சான்று கேட்டுக் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி நெல்லை ஆர்.டி.ஓ-விடம் மனு அளித்தார்கள். ஆர்.டி.ஓ மணிஷ் நாரணவரே ஏற்பாட்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியர் சுமதி தலைமையிலான குழுவினர் அந்த மக்கள் வசிக்கும் இடங்களை ஆய்வு செய்தனர். அவரது அறிக்கையில், `தருவையில் வசிப்பவர்கள் காட்டுநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்' எனக் குறிப்பிட்டுள்ளதாக அந்தச் சமூகத்தினர் தெரிவிக்கிறார்கள்.

கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

இருப்பினும், தொடர்ந்து தங்களுக்குச் சாதிச் சான்று வழங்க மறுப்பதைக் கண்டித்து 30 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இன்று கோட்டாட்சியர் மணிஷ் நாரணவரே அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பாம்பு, அணில், கீரி, ஆமை உள்ளிட்டவற்றுடன் ஆர்.டி.ஓ அலுவலகம் வந்தனர். தங்களுடைய ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றையும் அரசிடம் திருப்பி ஒப்படைக்கப்போவதாக அறிவித்தனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய காட்டுநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த மகேஸ்வரி கூறுகையில், ``தருவை கிராமத்தில் 30 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களில் 6 பேருக்கு பணம் பெற்றுக்கொண்டு சாதிச்சான்று கொடுத்திருக்கிறார்கள். எஞ்சியவர்களுக்குக் கொடுக்க மறுக்கிறார்கள். இது தொடர்பாகக் கோட்டாட்சியர் அனுப்பியுள்ள கடிதத்தில், `விருதுநகர் மாவட்டத்துக்குச் சென்று சான்றிதழ் பெற்றுக்கொள்ளுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி எங்களுக்கு சாதிச் சான்று கொடுக்க மறுக்கிறார்கள். அதனால் எங்கள் பிள்ளைகள் பள்ளிகளில் சேர்வதில் சிரமம் ஏற்படுகிறது.
மகேஸ்வரி

இடம்பெயரும் பழங்குடியினருக்குச் சாதிச்சான்று வழங்க மறுக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆனாலும் அதை மதிக்காமல் எங்களுக்குச் சான்றிதழ் வழங்க மறுக்கிறார்கள். இதனால் குழந்தைகளால் படிப்பைத் தொடர முடியாத நிலை இருக்கிறது. எங்களுக்குச் சான்றிதழ் கிடைக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம்’’ எனத் தெரிவித்தார்.

இதனிடையே தடை செய்யப்பட்ட பாம்பு, கீரி, அணில், ஆமை உள்ளிட்டவற்றுடன் சிலர் முற்றுகைப் போராட்டம் நடத்துவதை அறிந்த வனத்துறையினர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு விரைந்து வந்தார்கள். அவர்கள் அந்த உயிரினங்களைக் கைப்பற்றிச் சென்றனர்.

கூண்டுகளில் பிடித்து வரப்பட்ட வன உயிரினங்கள்
கூண்டுகளில் பிடித்து வரப்பட்ட வன உயிரினங்கள்

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், அனைவரையும் அழைத்துப் பேசினார். அடுத்த 10 நாள்களுக்குள் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் அறிவித்ததால் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றார்கள்.

காட்டு நாயக்கர் சமூகத்தினர் சாதிச் சான்றிதழ் கேட்டு மனுக் கொடுப்பதும் அதிகாரிகள் அலைக்கழிப்பதும் காலம்காலமாக நடந்து வருகிறது. இதுகுறித்து உங்கள் கமெண்டுகளைப் பதிவு செய்யலாம்.