Published:Updated:

விழுப்புரம்: சாதிச் சான்றிதழ் கேட்டு பிள்ளைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தந்தை!

பிள்ளைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முருகன்
News
பிள்ளைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முருகன் ( தே.சிலம்பரசன் )

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி தன் பிள்ளைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தந்தை ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம் - சித்தேரிக்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (45). இவர் தன் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு பழங்குடி சாதிச் சான்றிதழ் கேட்டு நீண்டநாள்களாகப் போராடிவருகிறார். இந்த நிலையில், இன்று திடீரென தன் இரு பிள்ளைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து கையில் பதாகைகளை எந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக முருகனிடம் பேசினோம். ``எனக்குப் பூர்வீகம் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள தெங்கியாநத்தம் கிராமம்தான். நான் அங்கிருந்து இடம்பெயர்ந்து விழுப்புரம் சித்தேரிக் கரை பகுதியில் கடந்த 18 வருடங்களாக வசித்துவருகிறேன். தற்போது விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறேன். 1990-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் எனக்கு 'பழங்குடிச் சாதிச் சான்றிதழ்' வழங்கினார். ஆனால் ஆர்.டி.ஓ-தான் இந்தச் சாதிச் சான்றிதழை வழங்க வேண்டும் எனக் கூறி அந்தச் சான்றிதழை ரத்துசெய்துவிட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விழுப்புரம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விழுப்புரம்.
தே.சிலம்பரசன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என்னைப் போன்ற 67 பேருக்கு சாதிச் சான்றிதழ் வழங்கும்படி மாநில மனித உரிமைகள் ஆணையம் 2003-ம் ஆண்டு ஓர் ஆணையை வழங்கியது. அதுமட்டுமல்லாமல், `67 நபர்களுக்கும் நிவாரணமாக தலா 1,000 ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும். அந்தத் தொகையை கோட்டாட்சியரின் சம்பளத்திலிருந்து தமிழக அரசு பிடித்துக்கொள்ள வேண்டும்' என கூறப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து எனக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

2017-ம் ஆண்டு என் மனைவிக்கும், 2019-ம் ஆண்டு என் மகன் மற்றும் மகளுக்கும் சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தேன். நீண்டநாள்களாகக் கிடப்பிலேயே எங்கள் விண்ணப்பங்கள் இருந்துவந்தன. இந்த நிலையில், கடந்த வருடம் மானுடவியலாளர், வல்லுநர், கோட்டாட்சியர் ஆகியோர் நேரில் வந்து விசாரித்துவிட்டுச் சென்றார்கள். அதன் பிறகு எப்போது சென்று கேட்டாலும் 'இதோ... இதோ...' என்று தட்டிக்கழித்துவந்தனர். அதைத் தொடர்ந்து பலகட்ட போராட்டத்தை நடத்திப் பார்த்துவிட்டேன். ஆனால், சாதிச் சான்றிதழைத் தரவே இல்லை. இப்போது இருக்கும் வருவாய் கோட்டாட்சியர் ஹரிதாஸ் சார், `நீங்கள் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. உங்களுடைய பூர்வீகத்தில் சென்று வாங்கிக்கொள்ளுங்கள்' என ஆறு மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார். ஆனால் 18 வருடங்களாக இங்கு வசிப்பதால் எனக்கு அனைத்து ஆதாரமும் விழுப்புரம் மாவட்டத்தில்தான் இருக்கின்றன.

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், விழுப்புரம்.
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், விழுப்புரம்.

என்னுடைய மகன் இங்குதான் 12-வது படிக்கிறான். என்னுடைய மகள் 10-வது படிக்கிறாள். இரண்டு பேருக்குமே படிப்புக்காக சாதிச் சான்றிதழ் தேவையாக இருக்கிறது. 'இவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கலாம். தகுதியானவர்கள்தான்' என வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார் உள்ளிட்ட அனைவரும் பரிந்துரை செய்த கடிதத்தையும் மனுவுடன் இணைத்திருக்கிறேன். ஆனால், இன்றுவரை சாதிச் சான்றிதழ் கிடைக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்ற வாரமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தேன். எங்களை அழைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கடிந்துகொண்டதோடு, 'அவர்களுக்கு உரிய பதில் அளிக்காமல் ஏன் நிலுவையில் போட்டுவைத்திருக்கிறீர்கள்' எனக் கேட்டார். அன்றே ஆர்.டி.ஓ-வை பார்க்கச் சொல்லி அனுப்பினார். நாங்களும் அன்று மாலையே சென்று ஆர்.டி.ஓ-வைப் பார்த்தபோது 'வாங்க சார் தருகிறேன்' எனக் கூறி அனுப்பிவிட்டார். ஆனால், எந்தப் பயனும் இல்லை.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்

இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கலாம் என்றுதான் வந்தேன். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இன்று திங்கட்கிழமை மனுவை நேரில் தர முடியவில்லை. அதனால் வேறு வழி தெரியாமல், சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி பிள்ளைகளுடன் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டேன்" என்றார் ஆதங்கத்தோடு.

இது தொடர்பாக விளக்கம் கேட்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் பேசினோம். ``தந்தைக்குச் சாதிச் சான்றிதழ் இருக்கிறது எனும்போது. அவர் பிள்ளைகளுக்கும் கொடுத்துவிடலாம். நான் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசுகிறேன்" என்றார் சுருக்கமாக.

இந்தக் கடைநிலை மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்குச் செவிசாய்க்குமா மாவட்ட நிர்வாகம்? பொறுத்திருந்து பாப்போம்!