Published:Updated:

``பட்டா, வீடுன்னு நெறைய சொன்னாங்க, ஆனா..!" - பழங்குடியினப் பெண்ணின் புகாரும்... திமுக விளக்கமும்!

பழங்குடியினப் பெண் ஆதங்கம்

``முதலமைச்சர் வழங்கிய கடனுதவி தற்போது வரை எங்களுக்கு கிடைக்கவில்லை." - பழங்குடியினப் பெண் அஸ்வினி

``பட்டா, வீடுன்னு நெறைய சொன்னாங்க, ஆனா..!" - பழங்குடியினப் பெண்ணின் புகாரும்... திமுக விளக்கமும்!

``முதலமைச்சர் வழங்கிய கடனுதவி தற்போது வரை எங்களுக்கு கிடைக்கவில்லை." - பழங்குடியினப் பெண் அஸ்வினி

Published:Updated:
பழங்குடியினப் பெண் ஆதங்கம்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்துள்ள பூஞ்சேரியில், சுமார் 81 நாடோடி பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வரும் பயணிகளிடம் ஊசி, பாசிமணி விற்பதுதான் இவர்களின் முழுநேர வேலை. இந்த நிலையில், கடந்த 2021 அக்டோபர் 24-ம் தேதி அங்குள்ள ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் நாடோடி பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அன்னதானம் சாப்பிடச் சென்றபோது விரட்டியடிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

``அரசாங்கம்தானே அன்னதானம் போடுது, உங்க வீட்டுக் கல்யாண சாப்பாடு போடற மாதிரி அடிச்சு விரட்டறீங்க” என பழங்குடியின பெண்மணி அஸ்வினி என்பவர் கேள்வி எழுப்பிய காணொளி வைரலானது. அதோடு, ``நாங்க எல்லாம் ஊசி, பாசிமணி விற்கிறோம். எங்களுக்கு சாப்பாடு பிரச்னையில்ல. எங்க குழந்தைக படிக்கணும். எம்.பி.சி பட்டியல்ல இருக்கற எங்களை எஸ்.டி பட்டியலுக்கு மாத்தணும்” எனப் பல்வேறு கோரிக்கைகளையும் அஸ்வினி முன்வைத்தார். இதனைக் கவனித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலுக்கு நேரடியாக சென்றார். அங்கு நடந்த அன்னதானத்தில் அஸ்வினியுடன் இணைந்து அவர் உணவருந்தினார். இந்தக் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலானது.

அஸ்வினி-ஸ்டாலின்
அஸ்வினி-ஸ்டாலின்

அப்போது அமைச்சருடன் பேசிய அஸ்வினி, இந்தப் பகுதியில் 25 வருடங்களாக தங்கள் சமூகத்தினர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வசித்து வருவதாகவும், பட்டா உட்பட எந்தவித அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனை முதலமைச்சரின் கவனத்துக்கு சேகர்பாபு கொண்டு சென்றார். இதையடுத்து, ``அந்தப் பகுதியில் ஒரு வாரத்தில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கவேண்டும்” என முதல்வர் உத்தரவிட்டார். இதனை உள்வாங்கிக் கொண்ட அதிகாரிகள் மின் கம்பம் அமைத்தல், குடிநீர் குழாய் பொருத்துதல், புதிய சாலைகள் அமைத்தல் என பூஞ்சேரி கிராமத்தின் தோற்றத்தையே மாற்றிவிட்டனர்.

இதையடுத்து, தீபாவளி நாளான நவம்பர் 4-ம் தேதி பூஞ்சேரி கிராமத்துக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடோடி பழங்குடியின மக்களுக்கு ரூ.4.53 கோடி மதிப்பில் 283 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேடையிலேயே அவருக்கு நன்றி தெரிவித்து அஸ்வினி பேசினார். தொடர்ந்து, புதிதாகத் தயாரித்த ஊசி, பாசிமணி மாலையை முதல்வருக்கு அணிவித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில் முதலமைச்சர் வழங்கிய கடனுதவி தற்போதுவரை தங்களுக்குக் கிடைக்கவில்லையெனவும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகள் நிறைவேறவில்லை எனவும் வேதனை தெரிவித்து அஸ்வினி தற்போது பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ``எங்கள் பகுதிக்கு முதலமைச்சர் ஐயா வந்தாங்க. 12 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாங்க. 30 பேருக்கு 10 ஆயிரம் ரூபாய் லோன் கொடுத்தாங்க. பட்டா, வீடு என நிறை சொன்னாங்க. ஆனால் எதுவுமே நடக்கல. ஒரு லட்சம் ரூபாய் லோன் சொன்னாங்க. ஆனா, அது ஒருத்தருக்குக்கூட கொடுக்கல. ஒரு வருஷம் ஆச்சு. கடை இருந்தா மட்டும் லோன் கொடுப்போம்னு பேங்கில் சொல்றாங்க. கடை இருந்தால்தான் லோன் கொடுப்போம்னு சொல்றாங்க.

எங்கக்கிட்ட ஆதார் அட்டையிலிருந்து, பேங்க் புக், பட்டா, மண் வரி என இத்தன புரூஃப் இருக்கு. இதெல்லாம் பத்தாது நிறையா இருந்தாதான் லோன் கொடுப்போம்னு சொல்றாங்க. இது தொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஐயாவையும் பார்த்தோம். அவர் செங்கல்பட்டு கலெக்டரை பார்க்கச் சொன்னார். அவரும் கடை கொடுக்கலாம்னு சொன்னார். அதுக்கு பிறகு வி.ஏ.ஓ வந்து பார்த்துட்டு கடைகள் காலியா இல்லைனு சொல்லிட்டார். இந்தியாவில் பழங்குடியின சமுதாயத்துல ஒரு கடை எங்களுதுனு காட்டச் சொல்லுங்க. ரோட்டில்தான் உட்கார்ந்து வியாபாரம் பார்க்கணும், ரோட்டில்தான் வாழனும்னு கடவுள் படச்சுவிட்டு போயிட்டாங்க. ‘அரசு உங்களுக்கு நிறைய உதவி பண்றாங்க. உங்களுக்கு என்ன கவலை’னு நாலு பேர் வந்து பேசும்போது கஷ்டமா இருக்கு. எங்க சமூகத்துல லோன் வாங்கினாலும், கட்டி முடிச்சிருக்கோம்” என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் அஸ்வினி.

அண்ணாமலை
அண்ணாமலை

அஸ்வினி பேசியுள்ள வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் இந்த தி.மு.க அரசு, தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை... தேர்தலுக்குப் பின் கொடுக்கும் வாக்குறுதிகளையும் மறந்து விடுகிறார்கள். இப்படி நம்பவைத்து ஏமாற்றுவதுதான் உங்கள் சமூக நீதியா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இது தொடர்பாக தி.மு.க செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் பேரா.ஜெ.கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். ``முதலமைச்சர் சென்று நல திட்டங்கள் வழங்கினார். அதற்கான பிராசஸ் நடந்துகொண்டிருக்கிறது. அதில் ஏதாவது தவறுகள் நடந்திருந்தால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில் சும்மா போய் வரவேண்டும் என்று முதல்வர் போகவில்லை. அந்த ஒரு இடத்திற்கு மட்டுமல்ல பழங்குடிகள் வசிக்கக்கூடிய பல இடங்களில் இன்று பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் சாதி சான்று கிடைக்காதவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இது ஏதோ ஒரு இடத்தில் சின்ன பிரச்னை இருந்திருக்கிறது. அது என்னவென்று பார்த்து, விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அந்த மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்" என்றார்.