Published:Updated:

உள்ளடியில் வெல்லமண்டி நடராஜன்; கண்டுகொள்ளாத கார்த்திகேயன்!- களேபரமாகும் திருச்சி ஆவின் தலைவர் பதவி?

எடப்பாடி பழனிசாமி, ஆவின் கார்த்திகேயன்
எடப்பாடி பழனிசாமி, ஆவின் கார்த்திகேயன்

மா.செ குமார், வெல்லமண்டி நடராஜன் இருவரும் கார்த்திகேயனை எப்படியாவது சாய்த்துவிட்டு அந்த இடத்தில் யூனியன் சேர்மனாக வெற்றி பெற்ற சிவக்குமாரைக் கொண்டுவரவேண்டும் என்று பல நாள்களாகக் காய்நகர்த்தி வந்தார்கள்.

``முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது மகன் மிதுன் பெயரைப் பயன்படுத்தி திருச்சி மாவட்டத்தையே கார்த்திகேயன் அழித்துக்கொண்டிருக்கிறார். தர்பார் பட விநியோக உரிமையை நீங்கள்தான் அவருக்குப் பெற்றுக்கொடுத்ததாக நிர்வாகிகளை நம்பவைத்து, பல கோஷ்டிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திருச்சி, நம் கட்டுப்பாட்டில் இருக்காது" என்று அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் குமார், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் வாசித்திருக்கிறார்கள். அதன்பிறகு முதல்வர் எடுத்த நடவடிக்கைதான் ஹைலைட் என்கிறார்கள் அ.தி.மு.க வட்டாரத்தில். யார் இந்த கார்த்திகேயன், முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார் என விசாரிக்கத் தொடங்கினோம்.

வெல்லமண்டி நடராஜன்
வெல்லமண்டி நடராஜன்

அ.தி.மு.கவின் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட வாரியாக சென்னை ராயப்பேட்டையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது மாவட்டச்செயலாளர் குமார், வெல்லமண்டி நடராஜன் இருவரும் ,``திருச்சி மாநகர மாணவரணி மாவட்டச் செயலாளராகவும் ஒருங்கிணைந்த மாவட்ட ஆவின் பெருந்தலைவராக இருந்தவர் கார்த்திகேயன். இவரால்தான் மாவட்டத்தில் கட்சியே சீரழிந்துகொண்டிருக்கிறது. அ.தி.மு.க-வில் பல உள்ளடி வேலைகளைச் செய்து, ஒற்றுமையாக இருக்கும் கட்சியினர் இடையே கலகம் செய்து வருகிறார். திருச்சியில் இருக்கும் இவருடைய தம்பிக்காக, உண்மையாக உழைக்கக்கூடிய பல தொண்டர்களை பலிகிடா ஆக்கிக் கொண்டிருக்கிறார்.

ஆவின் கார்த்திகேயன்
ஆவின் கார்த்திகேயன்

சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தை நீங்களும் (எடப்பாடி பழனிசாமி), உங்களது மகன் மிதுனும்தான் திருச்சி விநியோக உரிமையைப் பெற்றுக் கொடுத்திருப்பதாகச் சொல்லிக்கொண்டு திரிகிறார். அத்தோடு உங்களது மகன் மூலமாக உங்களிடம் பல காரியங்களை நிறைவேற்றிக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் முதல் கட்சி நிர்வாகிகள் வரை சொல்லி கோடிக் கோடியாகச் சம்பாதித்திருக்கிறார்.

`வேலுமணியும் தங்கமணியும் நான் சொல்வதைத்தான் கேட்பார்கள். உனக்கு என்ன பதவி வேண்டும்?' என்று ஒழுங்காக இருக்கும் நிர்வாகிகளைக் கெடுப்பதோடு திருச்சியைக் கூறுபோடுகிறார்" என்று புகார்களை அடுக்கியிருக்கிறார்கள். அத்தோடு திருச்சியில் எத்தனை அணிகள் இருக்கிறது என்று விசாரித்துப் பாருங்கள்'' என்று முதல்வரிடம் கூறியிருக்கிறார்கள். இந்தப் புகார்களால் அதிர்ந்துபோன முதல்வர், `நான் அவருக்கு ஆதரவாகச் செயல்படுகிறேனா... என்ன சொல்கிறீர்கள்?' என்று முழுமையாகக் கேட்டுக்கொண்டார். அத்தோடு அமைச்சர்கள் சொல்வது சரியா இல்லை, கோஷ்டி பூசல்களால் சொல்கிறார்களா என்று குழுவை அமைத்து விசாரித்திருக்கிறார். அவர்களும் இதே பதிலைச் சொல்ல அ.தி.மு.க தலைமை அப்செட் ஆகியிருக்கிறது. இதையடுத்து, ஆவின் கார்த்திகேயனை வரச்சொல்லி கடுமையாக எச்சரித்து அனுப்பியதாகவும் சொல்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

`ஆட்சி நடத்துவது எவ்வளவு பெரிய விஷயமென்று தெரியுமா? அதுவும் முதல்வர் மற்றும் அவரது மகன் பெயர்களைப் பயன்படுத்தி மோசடி செய்வதைப் பொறுத்துக்கொள்ளமுடியாது. அவ்வளவு பெரிய ஆளாகிவிட்டீர்களா?' என்று கடுமையான வார்த்தைகளில் அவரை அ.தி.மு.க தலைமை எச்சரித்தும் அனுப்பியிருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால், `ஆவின்' கார்த்திகேயனின் ஆதரவாளர்கள் கலக்கத்தில் இருக்கிறார்களாம். அதேபோல் திருச்சி மாவட்டத்தில் மட்டும் அ.தி.மு.க, 5 அணிகளாகச் செயல்படுவதாகவும் அந்தக் குழு முதல்வரிடம் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. மேலும், மா.செ குமார், வளர்மதி, என்.ஆர் சிவபதி, ஆகியோர் மீது பல குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருக்கிறது. அவர்களுடைய செயல்பாடுகளையும் முதல்வர் கவனித்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.

திருச்சி அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``ஆவின் கார்த்திகேயன் முதல்வர் அவரது மகன் பெயரைச்சொல்லி ஒரு சில வேலைகள் செய்வது உண்மைதான். அமைச்சர் வளர்மதி, கார்த்திகேயன் இருவரும் மாவட்டச் செயலாளரை மதிக்காமல் இருவரும் தனித்தனி அணியாகச் செயல்பட்டு வந்தார்கள். இது பிடிக்காமல் மா.செ குமார், வெல்லமண்டி நடராஜன் இருவரும் கார்த்திகேயனை எப்படியாவது சாய்த்துவிட்டு அந்த இடத்தில் யூனியன் சேர்மனாக வெற்றி பெற்ற சிவக்குமாரைக் கொண்டுவரவேண்டும் என்று பல நாள்களாகக் காய்நகர்த்தி வந்தார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. அதைப் பயன்படுத்திக்கொண்டு பழிதீர்த்துவிட்டார்கள்.

திருச்சி ஆவின் கார்த்திகேயன்
திருச்சி ஆவின் கார்த்திகேயன்

இப்போது கூட ஆவின் தலைவர் பதவிக்கு சிவக்குமார் பெயரை மேலே பரிந்துரை செய்து கொண்டிருக்கிறார்கள். மா.செ குமார், வெல்லமண்டி நடராஜன் என்ன உள்ளடி வேலைகள் பார்த்தாலும் `அடுத்த ஆவின் தலைவர் நான்தான்' என பந்தாவாக வலம் வருகிறார் ஆவின் கார்த்திகேயன் இதுகுறித்து ஆவின் கார்த்திகேயனிடம் பேசினோம். "திருச்சி உட்பட 14 மாவட்டத்தைப் பிரித்திருக்கிறார்கள். மாவட்டத்தைக் கலைக்கவில்லை. தவறாகச் சொல்கிறார்கள்" என்றார். கோஷ்டி பூசலால் உங்களின் பதவியைப் பறித்தாகச் சொல்கிறார்களே அது உண்மையா என நாம் கேட்க அதற்கு அவர், ``அம்மா பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் இருக்கிறேன் பிறகு பேசுகிறேன்" என முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு