Published:Updated:

``திருச்சியில நடக்கிறதைக் கொஞ்சம் கவனிங்க..!" - நிர்வாகிகள் புகாரால் பதறிய எடப்பாடி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

`கட்சிக்கு எதிரான வேலைகள் செய்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்... அது உறுதி' என்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

``அம்மா இருந்தபோது திருச்சி நம்முடைய கட்டுப்பாட்டிலிருந்தது. கொஞ்சமாவது திருச்சியில் என்ன நடக்கிறது என்று விசாரியுங்கள்" என்று ஆலோசனைக்கூட்டத்தில் அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் எடப்பாடியிடமும் ஓ.பி.எஸ்ஸிடமும் புகார்களைக் கொட்டியிருக்கிறார்கள். இரண்டுபேரும் இந்த விஷயங்களை அதிர்ந்துபோய் கேட்டிருக்கிறார்கள். என்ன நடந்தது என்று தலைமைக்கழக வட்டாரத்தில் விசாரித்தோம்.

அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம்
அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம்

அ.தி.மு.க-வில் அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் 56 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து நேற்று தொடங்கி வரும் 13-ம் தேதி வரை மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதன்படி சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று காலையில் நடைபெற்ற கூட்டத்தில் கரூர், தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, நாகை, திருவாரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று மாலை ஒவ்வொரு மாவட்டத்துக்கு நேரம் கொடுத்து கட்சி அலுவலகத்தின் பின்புறத்தில் அமரவைத்திருந்தார்கள்.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் குமார், புறநகர் மாவட்டச் செயலாளர் ரத்தினவேல், சிவபதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குள் உள்ளே சென்றிருக்கிறார்கள்.

அ.தி.மு.க அலுவலகம்
அ.தி.மு.க அலுவலகம்

``அம்மா இருக்கும்வரையில் திருச்சி அ.தி.மு.க-வினர் கட்டுப்பாட்டிலிருந்து. ஆனால், தற்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தி.மு.க-வினர் வசம் சென்றுகொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் இங்குள்ள கோஷ்டி பூசல்கள்தான்" என மெல்ல மெல்ல மா.செ.குமார், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் ஆரம்பித்தார்கள்.

`என்ன சொல்கிறீர்கள். தெளிவாகச் செல்லுங்கள்' என ஓ.பி.எஸ் சொல்ல, அப்போதுதான் மனக்குமுறலைக் கொட்டத் தொடங்கியிருக்கிறார்கள். ``திருச்சி மாநகர மாணவரணி மாவட்டச் செயலாளராகவும் ஒருங்கிணைந்த மாவட்ட ஆவின் பெருந்தலைவராக இருக்கும் கார்த்திகேயனால்தான் மாவட்டமே சீரழிந்துகொண்டிருக்கிறது. அ.தி.மு.க-வில் பல உள்ளடி வேலைகளைச் செய்து ஒற்றுமையாக இருக்கும் கட்சியினர் இடையே கலகம் செய்து வருகிறார். திருச்சியில் இருக்கும் இவருடைய தம்பிக்காக உண்மையாக உழைக்கக்கூடிய பல தொண்டர்களை பலிகிடா ஆக்கிக்கொண்டிருக்கிறார்.

 குமார்
குமார்

ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தை நான்தான் திருச்சிக்கு டிஸ்ட்ரிபூட் எடுத்திருக்கிறேன். இதை எடுத்துக்கொடுத்தே முதல்வர் எடப்பாடியோட மகன்தான். அவரும் நானும் நெருங்கிய கூட்டாளிகள். என்னுடைய காரியங்களை அவர் மூலமாக முதல்வரிடம் சாதித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி அதிகாரிகள் முதல் கட்சி நிர்வாகிகள் வரை கோடி கோடியாகச் சம்பாதித்திருக்கிறார். அத்தோடு வேலுமணியும் தங்கமணியும் நான் சொல்வதைத்தான் கேட்பார்கள். உனக்கு என்ன பதவி வேண்டும் என்று ஒழுங்காக இருக்கும் நிர்வாகிகளைக் கெடுப்பதோடு திருச்சியை கூறுபோடுகிறார்" என்று புகார் அடுக்கியிருக்கிறார்கள். இந்த புகார் எடப்பாடிக்கே அதிர்ச்சி கொடுத்ததாம்.

அதைத்தொடர்ந்து வளர்மதியும் மாநகர் மா.செ.குமார் மீது பல புகார்களை அள்ளி வீசியிருக்கிறார். அதையும் முழுமையாகக் கேட்டுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதியின் ஆதரவாளர்கள் சிலர், புறநகர் மாவட்டச் செயலாளர் ரெத்தினவேல், எந்தப் பொது நிகழ்ச்சிகளுக்கும் அமைச்சர்களை வரவிடுவதில்லை என்று குற்றம் சொல்ல அதற்குக் குறுக்கிட்ட வைத்திலிங்கம், "அரசு நிகழ்ச்சிகளுக்கு அவர் எப்படிப் பொறுப்பாக முடியும். குற்றச்சாட்டு சொல்வதைச் சரியாகச் சொல்லுங்கள்" என முகத்தைக்காட்ட, கப்சிப் என்று அமைதியாகியிருக்கிறார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அதைத் தொடர்ந்து, என்.ஆர்.சிவபதி தன் சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை ஒன்றிணைந்துக்கொண்டு கட்சிக்கு எதிராகப் பல வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார். அத்தோடு என் மாமாதான் முதல்வர். நான் எம்.பி தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும் எனக்குக் கண்டிப்பாக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் எனச் சொல்லிக்கொண்டு திரிகிறார். இவருக்கு பிடிக்காத நிர்வாகிகள் குறித்து தவறான தகவல்களைப் பரப்புகிறார். கழகத்துக்கு கெட்டபெயரை ஏற்படுத்துகிறார்.

திருச்சியில் அன்பில் மகேஷும் கே.என்.நேருவும் தி.மு.க இளைஞரணியை எப்படிச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? இளைஞரணியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல என்ன செய்திருக்கிறார் என அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே சிவபதிக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள்.

என்.ஆர்.சிவபதி
என்.ஆர்.சிவபதி

முதலில் இவருக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்" என வளர்மதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் புகார் சொல்லியிருக்கிறார்கள். இதற்குப் பதில் சொல்ல என்.ஆர்.சிவபதி முற்பட்டபோதும், எடப்பாடி அதற்கு மறுத்துவிட்டராம். `கட்சிக்கு எதிரான வேலைகள் செய்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்... அது உறுதி' என்றிருக்கிறார்.

ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி

அதேபோல் வருகின்ற `ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலுக்கான அறிவிப்புகள் வர இருக்கிறது. இப்போதிலிருந்தே கட்சி வேலையைச் செய்யத்தொடங்குங்கள். அத்தோடு கட்சி பலவீனமாக உள்ள பகுதிகளைக் கணக்கெடுங்கள். அங்கு என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பதைப் பட்டியல் எடுத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றுங்கள். உள்ளாட்சித் தேர்தலில் நடந்தது போல் நகராட்சித்தேர்தலில் நடந்துவிடக் கூடாது. இதை மனதில் வைத்துச் செயல்படுங்கள்" என தெம்பூட்டும் விதத்தில் பேசி அனுப்பியிருக்கிறார் எடப்பாடி.

அடுத்த கட்டுரைக்கு