Published:Updated:

திருச்சி: பற்றி எரிந்த கே.என்.நேருவின் வாழ்த்து பேனர்; செய்தது யார்? - போலீஸ் விசாரணை

பற்றி எரிந்த தி.மு.க பேனர்
பற்றி எரிந்த தி.மு.க பேனர்

திருச்சியில் கே.என்.நேருவை வாழ்த்தி வைக்கப்பட்ட பேனர் தீப்பற்றி எரிந்தது. தீ எப்படிப் பரவியது என்ற தீவிர விசாரணை நடந்துவருகிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் அதிக இடங்களில் வெற்றிபெற்று தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து, வருகிற 7-ம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக தி.மு.க தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்கவிருக்கிறார். அவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அமைச்சர்களாகப் பதவியேற்கவிருக்கின்றனர்.

தி.மு.க பேனர்
தி.மு.க பேனர்

இந்தநிலையில், திருச்சி மேற்குத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரும், தற்போதைய தி.மு.க முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் பத்மநாபனை 80,927 வாக்கு வித்தியாசத்தில் எளிதாகச் சாய்த்து வெற்றிபெற்றிருக்கிறார்.

இந்தநிலையில் ,அவருக்கு வாழ்த்து தெரிவித்து திருச்சி கோர்ட் எம்.ஜி.ஆர் சிலை தென்னூர் இணைப்பு சாலை பஸ் ஸ்டாப் அருகே தி.மு.க-வினர் பேனர் வைத்திருந்தனர். நேற்று மாலை அந்த பேனர் திடீரெனப் பற்றி எரிந்தது.

கே.என்.நேரு
கே.என்.நேரு

இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். மேலும், கன்டோன்மென்ட் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

திருச்சி மேற்கு:'புதுமுக வேட்பாளரை வென்று அமைச்சர் பதவியை நெருங்கிய கே.என்.நேரு!'  #TNelections2021

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``சென்னையில் நடந்த சம்பவத்துக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தி.மு.க-வினர் பேனர் வைத்திருந்த இடத்தின் அருகில் குப்பைக்கிடங்கு உள்ளது. அந்தக் குப்பைகளுக்கு தீ வைத்திருக்கிறார்கள். அது எரிந்ததில் காற்றில் பரவி ஃப்ளெக்ஸில் தீப்பிடித்திருக்க வாய்ப்பிருக்கிறது. தி.மு.க நிர்வாகிகள் ஃப்ளெக்ஸ் இருக்கும் இடத்துக்கும் குப்பைக் கிடங்குக்கும் தூரம் அதிகமாக உள்ளது என்றும், மர்ம நபர்கள் யாரோ தீ வைத்திருக்கக் கூடும் என்று சொல்கிறார்கள். அது குறித்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம். விசாரணை முடிந்த பிறகு முழுமையாகப் பேசுகிறோம் என்று முடித்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு