திருச்சி மாநகராட்சியின் மேயர் பதவி யாருக்கு என உறுதியாகிவிட்ட நிலையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் என இரு ஆளுமைகள் மையம்கொண்டுள்ள திருச்சி மாநகரின் துணை மேயர் பதவியை அலங்கரிக்கப்போவது எந்த அணியினர் என்பதற்கான கடும் போட்டியால் தமிழகமே உற்று நோக்கும் மாநகரமாக மாறியிருக்கிறது திருச்சி.

திருச்சி மத்திய மாவட்டத்தில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர் வைரமணியின் கட்டுப்பாட்டுக்குள் 27 வார்டுகளும், தெற்கு மாவட்ட தி.மு.க அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் 38 வார்டுகளும் என மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. இவற்றில் யார் அதிக இடங்களில் வெற்றிபெற்று துணை மேயர் பதவியைப் பிடிக்கப்போவது என்கிற போட்டி கடுமையாக நடந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபிரசாரத்தில் நேரு தரப்பினர் அதிக இடங்களைக் கைப்பற்றிவிடக் கூடாது என்று அன்பில் மகேஷ் தரப்பினரும், அன்பில் மகேஷ் தரப்பினர் அதிக இடங்களைக் கைப்பற்றக் கூடாது என்று நேரு தரப்பினரும் மேற்கொண்ட உள்ளடி வேலைகளும் அனல் பறந்தனவாம். அப்படியிருந்தும் 65 வார்டுகளில் போட்டியிட்ட தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 59 இடங்களில் வெற்றிபெற்றுள்ளன.

அவற்றில் 49 இடங்களில் இன்று தி.மு.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருக்கிறது. இந்த நிலையில், மேயர், துணை மேயர் மற்றும் மண்டலத் தலைவர்கள் பதவியைக் கைப்பற்ற, வெற்றிபெற்ற தி.மு.க வார்டு உறுப்பினர்கள் கடுமையாகக் காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
திருச்சி மாநகராட்சியில் அதிகமாக தி.மு.க கவுன்சிலர்கள் வெற்றிபெற்றதால் தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் துணை மேயர் அன்பழகன்தான் இந்த முறை மேயராகிறார் என்பது உறுதியாகியுள்ளதாம். இதனால், துணை மேயர் பதவிக்குத்தான் கடும் போட்டி நிலவுகிறது. துணை மேயராக நேரு தரப்பில் முத்துசெல்வம், மண்டி சேகர், விஜயா ஜெயராஜ் ஆகியோரின் பெயர்களை முன்வைக்கிறார்.

மகேஷ் தரப்பில், மதிவாணனை முன்னிறுத்துகிறார்கள். அன்பழகனுக்கு மேயர் பதவியை விட்டுக்கொடுத்ததால், அன்பில் மகேஷ் தரப்பினர் மதிவாணனை துணை மேயராக்கக் கடுமையாகக் காய்நகர்த்திக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால், தி.மு.க தலைமை, மேயர் மற்றும் துணை மேயர் பதவியை ஒரே (முக்குலத்தோர்) சமூகத்தைச் சேர்ந்த இருவருக்கும் பதவியை கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறதாம். இதனால் மகேஷ் ஆதரவாளருக்கு துணை மேயர் பதவி கிடைக்குமா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. சமுதாயக் கணக்கைவைத்து இதிலும் நேருதான் வெற்றிபெறப்போகிறார் என்கிறார்கள் கட்சியின் உள் விவகாரம் அறிந்தவர்கள்.
மறுபுறம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் மேயர் சுஜாதா, சோபியா விமலா ராணி, மாநகர் மாவட்டத் தலைவர் ஜவகர் ஆகிய மூன்று பேரும் துணை மேயர் பதவியைக் குறிவைத்துவந்தனர். இப்போது மூன்று பேருமே வெற்றிபெற்றுவிட்டதால் மூவருமே தங்கள் தலைமை மூலமாகக் காய்நகர்த்திவருகிறார்கள்.

இதில் சுஜாதா துணை மேயராக வருவதை அமைச்சர் நேருவே விரும்பவில்லை என்கிறார்கள். இந்நிலையில், சுஜாதாவுக்கு ஆதரவாக ப.சிதம்பரம் ஸ்டாலினிடம் பேசியிருக்கிறாராம். இதனால் துணை மேயர் விஷயத்தில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்கிறார்கள்.

அடுத்ததாக திருச்சி மாநகராட்சியைப் பொறுத்தவரை முன்பு நான்கு கோட்டங்கள் இருந்தன. இப்போது புதிதாக ஐந்தாவது கோட்டமாக ஒரு கோட்டம் உருவாகியுள்ளது. இந்த ஐந்து கோட்டங்களுக்கும் ஐந்து கோட்டத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த ஐந்து கோட்டத் தலைவர் பதவிகளைக் கைப்பற்ற, இப்போதே தி.மு.க-வில் முட்டல் மோதல் ஆரம்பமாகியுள்ளது! இதனால் திருச்சியைப் பொறுத்தவரை போட்டியே துணை மேயருக்குத்தானாம்!