Published:Updated:

` 2 லட்சம் கோடிக்கு கணக்குச் சொல்வாரா எடப்பாடி?' - நாங்குநேரியில் தகித்த திருநாவுக்கரசர்

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் இரு தொகுதிகளிலும் முகாமிட்டுள்ள அ.தி.மு.க அமைச்சர்கள் களப்பணியாற்றவில்லை, பணப்பட்டுவாடா பணி செய்வதற்காகவே முகாமிட்டிருக்கிறார்கள்.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பிரசாரம் மேற்கொள்வதற்காக, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவருமான திருநாவுக்கரசர் வந்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

’’ காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தி.மு.க தலைவர் ஸ்டாலினும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்ததன் மூலம் தமிழகத்தில் வெற்றியைக் கைப்பற்றினார்கள்.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

இதே கூட்டணி இந்த இடைத்தேர்தலிலும் தொடர்கிறது. எதிர்காலத்திலும் தொடரும். இடைத்தேர்தல் நடைபெறும் இரு தொகுதிகளிலும் தி.மு.க, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்கள்.

தமிழகம், ஊழல் மலிந்த மாநிலமாக உள்ளது. இங்குள்ள ஆட்சியாளர்களால் பலன் இருப்பதால்தான், தமிழக அமைச்சர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள். நாட்டில் ஜனநாயகத்துக்கு விரோதமான ஆட்சி நடைபெற்று வருகிறது. திரைத்துறையினர் மோடிக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், அவர்கள்மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதன்மூலம், இவர்களின் நடவடிக்கை உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.

`நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு  ஆதரவு கேட்ட ஏழு அமைச்சர்கள்!’ - கைவிரித்த ஜான் பாண்டியன்
நாடாளுமன்றத் தேர்தலின்போது, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
திருநாவுக்கரசர் எம்.பி

தேர்தல் நேரத்தில் அளித்த எந்த வாக்குறுதியையும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு நிறைவேற்றவில்லை . தமிழகத்தில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகளைப் பெற்று வந்திருப்பதாகக் கூறினார். இது தொடர்பாக, எந்த நாட்டிலிருந்து எவ்வளவு முதலீடு பெறப்பட்டுள்ளது என்பதையும் எத்தனைபேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

திருநாவுக்கரசர் பேட்டி
திருநாவுக்கரசர் பேட்டி
எல்.ராஜேந்திரன்

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சரே ஒப்புதல் அளிக்கும் அளவுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் கூடுதல் கவனம் செலுத்தி மக்களைப் பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் நடக்கும் இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க அமைச்சர்கள் முகாமிட்டுக் களப்பணியாற்றவில்லை. அவர்கள் பணப் பட்டுவாடா பணியைச் செய்துவருகிறார்கள்’’ என்றார்.