Published:Updated:

``நித்தியானந்தா மேல் தப்பில்லை..!” - அடித்துச் சொல்லும் சூர்யா சிவா

சூர்யா சிவா

``உலக மக்கள் தேடி வரும் அளவுக்கு மிகப்பெரிய சக்தியுடன் இருக்கிறார் நித்தியானந்தா. அவருடைய பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவே பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது.” - சூர்யா சிவா

``நித்தியானந்தா மேல் தப்பில்லை..!” - அடித்துச் சொல்லும் சூர்யா சிவா

``உலக மக்கள் தேடி வரும் அளவுக்கு மிகப்பெரிய சக்தியுடன் இருக்கிறார் நித்தியானந்தா. அவருடைய பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவே பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது.” - சூர்யா சிவா

Published:Updated:
சூர்யா சிவா

இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு `கைலாசா’ நாட்டில் தலைமறைவாக இருப்பதாகச் சொல்லப்படும் நித்தியானந்தாவிடம், திருச்சி சிவாவின் மகனும், தமிழக பா.ஜ.க ஓபிசி பிரிவு பொதுச்செயலாளருமான சூர்யா சிவா "தர்மரக்‌ஷகா" விருது பெற்றிருக்கிறார். சமூக வலைதளங்களில் பேருபொருளாக மாறியிருக்கும் அவரிடம் பல கேள்விகளை முன்வைத்தோம்.

"நித்தியானந்தாவிடமிருந்து 'தர்மரக்‌ஷகா' விருது வாங்கியிருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷமா இருக்கீங்கபோல..?"

``இந்து மதத்தை ஆதரித்து உலக அளவில் கருத்துகள் பேசிவருவதால் சுவாமி ஜி இந்த விருதை எனக்குக் கொடுத்திருக்கிறார். இந்த விருது எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். ரொம்பப் பெருமையாக இருக்கிறது.”

சூர்யா
சூர்யா

``விருதோடு கோடிக்கணக்கில் பணமும் வாங்கியிருக்கிறீர்கள் என்று சொல்கிறார்களே?”

"திருச்சி சிவா பையனுக்கு, பணத்துக்காகப் பேச வேண்டும், விருது வாங்க வேண்டும் என்று எந்த அவசியம் கிடையாது. எங்கள் தாத்தா காலத்திலேயே நாங்கள் விவசாய நில புலன்களோடு சௌகரியமாக வாழ்ந்த குடும்பம். 50 வருட அரசியல் வாழ்க்கையில் என்னோட அப்பா 30 வருடம் எம்.பி-யாகவே இருக்கிறார். பா.ஜ.க-வுக்குப் போனால் பணம் வாங்கிவிட்டுச் சென்றுவிட்டார் என்றும், நித்தியானந்தாவுக்கு ஆதரவாகப் பேசினால் நித்தியிடம் பணம் வாங்கிவிட்டார் என்றும் சொல்வது அபத்தமாக இருக்கிறது."

"விருதுபெற்ற உங்களிடம் நித்தியானந்தா என்ன பேசினார்?"

``விருது பெறுவதற்கு நான்கு நாள்களுக்கு முன்பாக அவரிடம் இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேசினேன். 'உங்களின் தீவிர பக்தன் நான். உங்களைப் பார்ப்பதை பாக்கியமாக நினைக்கிறேன்’ என்றேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே 'நன்றி' என்றார். `நல்லதே நடக்கும். அரசியல் பயணம் நல்லபடி தொடரும். வாழ்த்துகள்’ என்றார்.’’

"நித்தியானந்தாவிடம் விருது வாங்கியதை உங்கள் தலைவர் அண்ணாமலையிடம் சொன்னீர்களா?"

``அண்ணாமலை அமெரிக்காவுக்குச் சென்றதால் என்னால் கூற முடியவில்லை. அவர் என்னுடைய ட்விட்டர், ஃபேஸ்புக் பாலோயராக இருக்கிறார். அதனால், கண்டிப்பாகப் பார்த்திருப்பார்."

``நித்தியானந்தா உண்மையிலேயே எங்கு இருக்கிறார்... இருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்கிறார்களே?"

``அவர் கைலாசா நாட்டில்தான் இருக்கிறார். நான் 'ஜூம் காலில்' பேசியபோது கூட கைலாசாவுக்குத் தனியாக அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். என்னுடைய சின்ன வயதிலிருந்தே நான் நித்தியானந்தாவின் தீவிர பக்தன். வெளிநாடுகளில் இருக்கக்கூடிய முக்கிய நபர்கள் அவரின் தரிசனத்துக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களுக்குக் காட்சி தராதவர் எனக்கு விருது கொடுத்திருக்கிறார். அவர் என்னுடைய ஆன்மிக குரு, நான் அவரின் ஆன்மிகத் தொண்டன். இதுவே எங்களுக்கு இடையிலான தொடர்பு."

நித்தியானந்தா
நித்தியானந்தா

"நித்தியானந்தாவை நேரில் பார்த்திருக்கிறீர்களா?"

``இல்லையே... இல்லையே... அதற்கெல்லாம் வாய்ப்பே கிடைத்ததில்லை. வீட்டில் நித்தியானந்தாவின் படத்தை வைத்திருக்கிறேன். காலையில் எழுந்தவுடன் அவரைத்தான் பார்ப்பேன். கைலாசா செல்ல வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அவரைச் சென்று பார்த்துவிட்டு வருவேன். தயாராக இருக்கிறேன்."

"நித்தியானந்தா ஆசிரமத்தில் உங்களுக்கு முக்கியப் பொறுப்பு கொடுக்கப்படவிருக்கிறதாமே?"

``நான் அரசியல் பயணம் செய்து வருகிறேன். இது போன்ற பொறுப்புகளுக்கு இதுவரையில் நான் ஆசைப்படவில்லை. அவரை ஒரு குருவாக மட்டுமே பார்க்கிறேன்."

"தேடப்படும் குற்றவாளி ஒருவருக்கு இந்த அளவுக்கு ஆதரவும், வக்காலத்தும் வாங்குகிறீர்களே?"

"வக்காலத்து வாங்குவது என்று சொல்லாதீர்கள். நியாயம் கேட்கிறேன் என்று சொல்லுங்கள். நித்தியானந்தா மீதான புகார்கள் சித்திரிக்கப்பட்ட அரசியல். அவர் மீதான குற்றங்கள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த நித்தியானந்தாவை உலக மக்கள் தேடி வரும் அளவுக்கு மிகப்பெரிய சக்தியுடன் இருக்கிறார். அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது."

"தன்மீது தவறு இல்லையென்றால் ஏன் ஓடி ஒளிகிறார்?"

``அவருடைய பக்தனாகச் சொல்கிறேன். அவர் ஓடி ஒளியவில்லை. அவருடைய நியாயத்தை நிரூபிக்க சில நாள்கள் ஆகுமே தவிர இதில் வேறொன்றும் இல்லை. தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தவறு என்று நிரூபித்துவிட்டுதான் அவர் வெளியே வருவார். தலைமறைவாக இருப்பதால் அவர் குற்றம் செய்தவர் என்று கூறிவிட முடியாது. அவர் மீண்டு வருவார். மீண்டும் வருவார்."

சூர்யா சிவா
சூர்யா சிவா

"அப்படியென்றால் பா.ஜ.க நித்தியானந்தாவை ஆதரிக்கிறதா?"

``நாங்கள் அவரை ஆதரித்திருந்தால் அவர் இந்தியாவுக்குள்தானே இருந்திருக்க வேண்டும்... அவர் மீதான குற்றச்சாட்டைப் பொய் என நிரூபித்துவிட்டுத்தான் இந்தியாவுக்கு வருவார். அவர் பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் செயலாகத்தான் நாங்கள் அதைப் பார்க்கிறோம். 100 சதவிகிதம் அடித்துச் சொல்கிறேன்... அவர் வெளியே வருவார்."