அலசல்
Published:Updated:

‘பற்றவைத்த திருச்சி சிவா... பதம் பார்த்த கே.என்.நேரு!’ - திருச்சி தி.மு.க களேபரத்தின் பின்னணி

திருச்சி சிவாவின் வீட்டினுள்  நடத்திய தாக்குதல்
பிரீமியம் ஸ்டோரி
News
திருச்சி சிவாவின் வீட்டினுள் நடத்திய தாக்குதல்

என் மாமாவின் தூண்டுதலின்பேரில்தான் இந்தப் பிரச்னையே நடந்தது என்கிறார்கள். அது உண்மையென்றால், வெறும் 10 பேர் சேர்ந்து கறுப்புக்கொடி காட்டுவோமா... ஒரு பெரும் கூட்டத்தையே திரட்டியிருப்போமே

திருச்சியில், அமைச்சர் கே.என்.நேரு - திருச்சி சிவா எம்.பி-யின் ஆதரவாளர்களுக்கிடையிலான மோதல் தி.மு.க-வினரையே திடுக்கிடவைத்திருக்கிறது!

மார்ச் 15-ம் தேதி, திருச்சி மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நடைபெற்ற 17-க்கும் மேற்பட்ட முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்கவிழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டார். அந்தவகையில், தி.மு.க எம்.பி திருச்சி சிவா வீடு அமைந்திருக்கும் எஸ்.பி.ஐ காலனி அருகேயுள்ள நவீன இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கைத் திறந்துவைக்க, கே.என்.நேரு சென்றார். அப்போது, திருச்சி சிவா வீட்டுக்கு முன்பு நின்றிருந்த அவரின் ஆதரவாளர்கள் ‘நிகழ்ச்சி அழைப்பிதழ், கல்வெட்டு ஆகியவற்றில் ஏன் திருச்சி சிவாவின் பெயரைப் போடவில்லை?’ என கே.என்.நேருவின் காரை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பியதோடு, கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பும் தெரிவித்திருக்கின்றனர்.

திருச்சி சிவா, கே.என்.நேரு
திருச்சி சிவா, கே.என்.நேரு

இதனால் கோபமடைந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள், திருச்சி சிவாவின் வீட்டினுள் புகுந்து நடத்திய தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்துக்குள் புகுந்து திருச்சி சிவாவின் ஆதரவாளர்களை அமைச்சர் நேருவின் ஆட்கள் தாக்கிய சம்பவம் உச்சகட்ட பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி அரசியலில், அமைச்சர் நேருவுக்கும், திருச்சி சிவாவுக்கும் இடையே நீண்டகாலமாகப் பனிப்போர் நிலவிவந்த நிலையில், தடாலடியாக இரு தரப்பும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நடந்த சம்பவம் குறித்து திருச்சி சிவாவின் மருமகன் கராத்தே முத்துக்குமாரிடம் பேசினோம். “திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் என்னுடைய மாமாவை, திட்டமிட்டே அமைச்சர் கே.என்.நேரு புறக்கணித்துவருகிறார். ‘வீட்டுக்கு அருகில் நடைபெறும் நிகழ்ச்சியின் அழைப்பிதழ், கல்வெட்டு ஆகியவற்றில் ஏன் பெயர் போடவில்லை?’ என்று கேள்வி கேட்டதால், இந்த அராஜகத்தை அவரின் ஆதரவாளர்கள் செய்திருக்கிறார்கள். எங்கள் வீட்டு வாசலில் நின்ற போலீஸார்கூட அப்போது எங்களுக்குப் பாதுகாப்பு வழங்கவில்லை. கட்சிக்காக இத்தனை காலமும் உழைத்துவரும் ஒரு முக்கியத் தலைவரின் குடும்பத்துக்கே பாதுகாப்பில்லாதது வருத்தமளிக்கிறது” என்றவர்...

“என் மாமாவின் தூண்டுதலின்பேரில்தான் இந்தப் பிரச்னையே நடந்தது என்கிறார்கள். அது உண்மையென்றால், வெறும் 10 பேர் சேர்ந்து கறுப்புக்கொடி காட்டுவோமா... ஒரு பெரும் கூட்டத்தையே திரட்டியிருப்போமே... திருச்சியில் அமைச்சர் நேருவை எதிர்ப்பவர்கள் வேறு யாருமே இல்லையா அல்லது அவரை எதிர்ப்பவர்களின் வீடுகளையெல்லாம் அவரின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கிவிடுவார்களா... திருச்சியில் தன்னைத் தாண்டி யாரும் அரசியல் செய்யக் கூடாது என்று அமைச்சர் கே.என்.நேரு நினைக்கிறார். தி.மு.க-வின் முக்கியமான ஒரு சீனியர் தலைவரும், எம்.பி-யுமான திருச்சி சிவாவின் வீட்டை அடித்து நொறுக்கும் அராஜகம் அமைச்சரின் உத்தரவு இல்லாமலா நடந்திருக்கும்?” என்றார் ஆவேசமாக.

இதையடுத்து அமைச்சர் நேரு தரப்பிடம் பேசினோம். “திருச்சி சிவாவின் பெயர் போடாதது குறித்து அமைச்சரிடமோ அல்லது தலைமையிடமோ புகார் கொடுத்திருக்கலாம். அதை விட்டுவிட்டு சொந்தக் கட்சி அமைச்சருக்கே, உள்ளூரில் கறுப்புக்கொடி காட்டுவது எந்த வகையில் நியாயம்... பொது நிகழ்ச்சிகள், கட்சி நிர்வாகிகளுடைய சுக, துக்க நிகழ்வுகள் எதிலும் திருச்சி சிவா எம்.பி கலந்து கொள்வதில்லை. அவரைச் சுற்றிப் பெரிதாக ஆதரவாளர்களும் கிடையாது. அப்படியிருக்க, தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ளவும், அமைச்சரின் பெயரைக் கெடுக்கவுமே திருச்சி சிவா தரப்பு திட்டமிட்டு இந்த நாடகத்தை நடத்தியிருக்கிறது. அதனால்தான் திருச்சி சிவா வீடு தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் திட்டமிட்டு வைரலாக்கிவருகின்றனர். இதெல்லாம் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் எனத் தெரிந்தும் செய்திருக்கின்றனர். திருச்சி சிவாவுக்குத் தெரியாமலா 10 பேர் சேர் போட்டு அமைச்சரை மறிக்க உட்கார்ந்திருப்பார்கள்...” என்றனர் பொருமலாக.

திருச்சி சிவாவின் வீட்டினுள்  நடத்திய தாக்குதல்
திருச்சி சிவாவின் வீட்டினுள் நடத்திய தாக்குதல்

பிரச்னைகளுக்கு விளக்கம் கேட்டு அமைச்சர் கே.என்.நேருவிடமே பேசினோம். “ராஜா காலனி மக்கள் ஒரு எம்.பி என்கிற முறையில், ஷட்டில் கோர்ட் கட்ட திருச்சி சிவாவிடம் நிதி கேட்டிருக்கிறார்கள். அவர் கொடுக்காமல் போனதால், `நமக்கு நாமே’ திட்டத்தில் 12 லட்சமும், மாநகராட்சி தரப்பில் 20 லட்ச ரூபாயும் கொடுத்து ஷட்டில் கோர்ட் கட்டப்பட்டிருக்கிறது. அது என் தொகுதிக்குட்பட்ட பகுதி என்பதால், அதன் திறப்புவிழா நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தார்கள். நானும் கலந்துகொள்ளச் சென்றேன். அப்போது திருச்சி சிவாவின் ஆட்கள் சிலர், எனக்குக் கறுப்புக்கொடி காட்ட, ‘அட போங்கய்யா...’ என்றபடி நான் நிகழ்ச்சியை முடித்துவிட்டு வேறொரு நிகழ்ச்சிக்காக தஞ்சாவூருக்குக் கிளம்பிவிட்டேன். அதன் பிறகே நடந்த சம்பவங்கள் எனக்குத் தெரியவந்தன. நிகழ்ச்சி நடத்தியவர்கள் சிவாவைக் கூப்பிடவில்லையென்றால் அவர் என்னிடம் கோபித்துக்கொள்ளலாமா... சிவா தரப்பு செய்த ரகளையால்தான் தேவையில்லாத பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. நடந்த விஷயங்கள் குறித்த விவரங்களைத் தலைவருக்கு விளக்கமாகத் தெரியப்படுத்திவிட்டேன்” என்றார்.

“பிரச்னை குறித்து பிறகு விரிவாகப் பேசுகிறேன்” என்றிருக்கிறார் திருச்சி சிவா. சண்டையா... சமாதானமா என்பது அப்போது தெரிந்துவிடும்!