Published:Updated:

ப.சிதம்பரம் கைது... பழிவாங்கலா... நடைமுறையா?! - வேலுச்சாமி vs வானதி சீனிவாசன்

P. Chidambaram
P. Chidambaram

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரத்தைக் கைதுசெய்திருப்பது மத்திய பி.ஜே.பி அரசின் திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை என்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி. அதற்கு எதிர்ப்பாக விளக்கம் கொடுக்கிறார் வானதி சீனிவாசன்.

ப.சிதம்பரம் கைது, நாடு முழுவதும் பலத்த விவாதத்துக்குள்ளாகி வருகிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்திருந்த முன் ஜாமீன் மனு தள்ளுபடியானது. இதையடுத்து, சி.பி.ஐ அதிகாரிகள் நள்ளிரவில் ப.சிதம்பரத்தின் வீட்டு காம்பவுண்டு சுவரேறிக்குதித்து, அவரை அதிரடியாகக் கைதுசெய்தனர்.

P.Chidambaram arrested
P.Chidambaram arrested

இதையடுத்து, 'ப.சிதம்பரம் மீதான கைது நடவடிக்கை, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் திட்டமிட்ட பழிவாங்கல்' என்று காங்கிரஸார் நாடு முழுக்க போராட்டம் நடத்திவருகின்றனர். தமிழக அரசியலில், 'ப.சிதம்பரம் கைது நடவடிக்கைக்கு எதிராக தி.மு.க தனது கண்டனத்தைப் பதிவுசெய்யாதது மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மிக முக்கியத் தலைவர்களேகூட இதுகுறித்து வாய் திறக்காதது ஏன்... என்பது போன்ற கேள்விகள் எழுந்தன.

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், 'சி.பி.ஐ அதிகாரிகள் சுவரேறிக் குதித்தது நாட்டுக்கே பெரும் அவமானம்' என்று ப.சிதம்பரம் கைது நடவடிக்கைக்கு எதிராகத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்தார்.

P.Chidambaram
P.Chidambaram
`3 சி.பி.ஐ குழு; உதவிய டெல்லி போலீஸ்!' - சிதம்பரம் கைதின்போது என்ன நடந்தது?

இந்நிலையில், ப.சிதம்பரம் கைதுகுறித்த கேள்விகளோடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியிடம் பேசினோம்.

''ப.சிதம்பரம் கைது நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு போன்ற தலைவர்கள் கலந்துகொள்ளாதது செய்தியாக்கப்படுகிறதே?''

''130 கோடி மக்களை ஆண்டுகொண்டிருக்கிற பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் ஒரு கேள்விக்குக்கூட பதில் சொல்ல மாட்டேன் என்கிறார். பத்திரிகையாளர்களை சந்திக்கப் பயப்படுகிறார். அதையெல்லாம் கேள்வி கேட்காத நீங்கள், இப்படியொரு கேள்வியை எங்களைப் பார்த்து கேட்பது நியாயம்தானா?

Trichy Veluchamy
Trichy Veluchamy

ஏற்கெனவே, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கைது நடவடிக்கையைக் கண்டித்து பேட்டி கொடுத்துவிட்டார். எல்லோரும் எல்லா இடத்திலேயும் இருக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?

தமிழ்நாடு முழுக்க காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்துவருகிறார்கள். ராகுல் காந்தியும் பிரியங்காவும் உச்ச நீதிமன்ற வாசலிலேயே போய் நின்றிருக்கிறார்கள். கபில்சிபல் அப்பீல் ஆகிறார். சோனியா காந்தி கண்டனம் தெரிவிக்கிறார். இவ்வளவு விஷயங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, சுவரில் உள்ள ஒரு சிறு புள்ளியையே சுவர்போல நினைத்து கேள்வி கேட்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது.''

''கூட்டணிக் கட்சியான தி.மு.க ஏன் மௌனம் காக்கிறது, கே.எஸ்.அழகிரி ஏன் கார்த்தி சிதம்பரத்தை சந்திக்கவில்லை என்றெல்லாம் கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியிருக்கிறாரே?''

P.Chidambaram
P.Chidambaram

''கராத்தே தியாகராஜன் என்பவர் யார்... அவருக்கும் காங்கிரஸுக்கும் என்ன சம்பந்தம்? 'ரஜினிகாந்த்தான் அடுத்த முதல்வர்' என்று சொல்கிற அவர் எப்படி காங்கிரஸ்காரராக இருக்க முடியும்? ப.சிதம்பரம் கைது நடவடிக்கைகுறித்து கேள்வி கேளுங்கள், பதில் சொல்கிறேன்.''

''சிபிஐ, மத்திய அரசின் கைப்பாவையாகிவிட்டது என்று இப்போது குற்றம் சுமத்துகிறது காங்கிரஸ் கட்சி. ஆனால் 'கடந்த காலத்தில், காங்கிரஸ் அரசும் இதே தவற்றைத்தானே செய்தது' என்று எதிர்க்கேள்வி வருகிறதே?''

P Chidambaram - Karthi Chidambaram
P Chidambaram - Karthi Chidambaram

''எதைக் கேட்டாலும், ஏற்கெனவே காங்கிரஸ் செய்ததுதான் என்று ஒரே பதிலை திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்களே... அப்படியென்றால், ஏற்கெனவே காங்கிரஸ் செய்ததையே புதிதாகச் செய்வதற்கு இவர்கள் எதற்கு?

ப.சிதம்பரத்துக்கு உள்துறை பாதுகாப்பு இருக்கிறபோது, அவர் எப்படி ஓடி ஒளிந்துகொள்ள முடியும். அப்படி ஓடி ஒளிந்துவிட்டார் என்றால், அதுவே உள்துறை அமைச்சகத்துக்கு தோல்விதானே?

வெளிப்படையாக பத்திரிகையாளர்களையே சந்திக்கிறார் ப.சிதம்பரம். அப்படி கைதுசெய்யத் துடிப்பவர்கள், அப்போதே கைது செய்யலாமே... நாடு முழுக்க ப.சிதம்பரத்தின் பெயரை டேமேஜ் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே, வேண்டுமென்றே இப்படியொரு நாடகத்தை மத்திய பி.ஜே.பி அரசு நடத்தியிருக்கிறது. ஆனால், அவர்கள் நினைத்ததற்கு மாறாக, மக்கள் மத்தியில் இந்தக் கைது விவகாரம் விவாதத்துக்கு வந்ததால், அவர்களுக்கும் பி.ஜே.பி-யின் நாடகம் புரிந்துவிட்டது. எனவே, இதுவும் நன்மைக்குத்தான்.''

''மத்திய பி.ஜே.பி நாடகம் நடத்துகிறது என்பது தெரிந்திருந்தால், கைது நடவடிக்கையை எதிர்கொண்டு, உண்மையை நிரூபித்திருக்கலாமே ப.சிதம்பரம்?''

''இந்த வழக்கில், இதுவரை 20 முறை கார்த்தி சிதம்பரம் ஆஜராகியிருக்கிறார். இதில், இரண்டு மூன்று முறை அவரைக் கைதுசெய்து கஸ்டடிக்கும் கொண்டு சென்றார்கள். இத்தனைக்குப் பிறகும், எஃப்.ஐ.ஆரில் ப.சிதம்பரம் பெயர்கூட இல்லாத நிலையிலும், 'சிதம்பரத்தைக் கைதுசெய்தே ஆகவேண்டும்' என்று மத்திய பி.ஜே.பி அரசியல் செய்கிறது. அதற்குப் பதிலடியாக நாங்களும் அரசியல் செய்கிறோம் அவ்வளவுதான்.

ப.சிதம்பரம் ஒன்றும் தெருவைச் சுற்றிக்கொண்டிருக்கிற ஆள் இல்லை. உலகமே ஒப்புக்கொள்ளும் மிகப்பெரிய பொருளாதார மேதை. 100 வருடங்களுக்கு முன்பே அவருடைய பாட்டன் 2,000 ஏக்கரில் யுனிவர்சிட்டி கட்டியவர். பர்மா, சிங்கப்பூர் என்று அப்போதே ஊருக்கு ஊர் கெஸ்ட் ஹவுஸ் வைத்திருந்த குபேரன் வீட்டுப் பிள்ளை அவர். அப்படிப்பட்டவர்மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லி, அதை நிரூபிக்கவும் முடியவில்லை இவர்களால்.

ப.சிதம்பரம், 75 வயதைக் கடந்துவிட்டார். நாடு முழுக்க சுற்றிச் சுழன்று பொதுக்கூட்டம் பேச, பேட்டி கொடுக்க, பத்திரிகைகளுக்கு எழுத என்று ஓய்வில்லாமல் உழைத்துவிட்டார். ஒரே மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் கல்யாணம் செய்துவைத்து, பேரன் பேத்தியோடு வாழ்ந்துவிட்டார். இந்த ஓய்வுக் காலத்தில் அவர் ஜெயிலில் இருப்பதால், யாருக்கு என்ன நஷ்டம்? அவரை எப்படியாவது சிறைக்குள் வைத்துவிட வேண்டும் என்றுதானே துடிக்கிறார்கள் பி.ஜே.பி-யினர்; வைத்துக்கொள்ளுங்கள்."

"நாளை கிருஷ்ண ஜெயந்தி. பகவான் கிருஷ்ணனே ஜெயிலில்தான் பிறந்தார் என்று சொல்கிறார்கள். ஆக, பகவான் கிருஷ்ணனே ஜெயிலில் இருந்தது தவறு இல்லையென்கிறபோது, இவர் இருப்பது ஒன்றும் தப்பில்லை!"
என்றார் திருச்சி வேலுச்சாமி ஆதங்கத்துடன்.

இதையடுத்து, காங்கிரஸ் தரப்பு எழுப்புகிற கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு, தமிழக பி.ஜே.பி-யின் பொதுச்செயலாளர் வானதி ஶ்ரீனிவாசனிடம் பேசினோம்... ''ப.சிதம்பரம் கைது என்பது வெறும் 24 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து இதுவரை அவர் எத்தனை முறை முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார், அவர் மீதான எஃப்.ஐ.ஆர் நகல்கள் மட்டுமல்லாது, அது தொடர்பான ஆவணங்களையும் பல்வேறு நிலையில் இருக்கக்கூடிய நீதிமன்றங்கள் விசாரித்துதான் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதன் பின்புதான் அவர் கைது செய்யப்படுவதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

Vanathi Srinivasan
Vanathi Srinivasan

ஒரு கட்சியின் மூத்த தலைவராக, கற்றறிந்த வழக்கறிஞராக இருக்கக்கூடிய ஒரு நபர், விசாரணைக்கான ஒத்துழைப்பைக் கொடுக்காமல் இருக்கும்போது, சட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை அறியாதவரும் அல்ல அவர். முன் ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மென்சனிங் செய்கிறார். அங்கேயும் அது ஒப்புக்கொள்ளப்படவில்லை. ஆக, நீதிமன்ற உத்தரவு இல்லாத இந்தச் சூழலில், எந்நேரமும் தான் கைதுசெய்யப்படலாம் என்பது அவர் அறிந்ததுதான்.

ஆனாலும், தான் இருக்கும் இடத்தைத் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காகவே, செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டார். இதையடுத்து, 'சிதம்பரத்தைக் காணவில்லை' என்ற அறிவிப்பு வெளியான பிறகுதான், பத்திரிகையாளர்களை அவசரம் அவசரமாகச் சந்தித்தார்.

சி.பி.ஐ மாளிகையில் சிதம்பரம்! அன்று சிறப்பு விருந்தினராக... இன்று `கைதி’யாக!

முன்னாள் அமைச்சர், பாதுகாப்பில் இருக்கிறவர் என்பதெல்லாம் மத்திய அரசுக்கும் தெரிந்திருந்த காரணத்தினால்தான், அவராகவே ஒத்துழைப்பு கொடுப்பார் என்று பொறுத்திருந்தனர். பத்திரிகையாளர்களை அவர் சந்தித்தபோதே கைது செய்திருந்தாலும்கூட, 'இதுவும் நாடகம்' என்றுதான் புகார் சொல்லியிருப்பார்கள். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் அவரது உறவினர்களது சொத்து விவரம் பற்றியெல்லாம் இதுவரை பொதுவெளியில் பேசாதவர், இப்போது 'பழிவாங்கல்' என்ற ஒற்றை வார்த்தையில் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தடுப்புச் சுவர் எழுப்பி, கடந்துசெல்லப் பார்க்கிறார். அது முடியாது!'' என்கிறார் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு