கட்டுரைகள்
Published:Updated:

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து... ஜெயிக்கப்போவது யாரு?

ஜெயிக்கப்போவது யாரு?
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயிக்கப்போவது யாரு?

‘70 ஆண்டுக்கால காங்கிரஸ் ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டிருந்த வடகிழக்கு மாநிலங்கள், மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் வளர்ச்சியடைந்துவருகின்றன’ என்று பா.ஜ.க தலைவர்கள் பேசிவருகிறார்கள்

2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக 2023-ல் ஒன்பது மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. முதற்கட்டமாக, திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கு வரும் பிப்ரவரியில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு தேசிய அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கி யிருக்கிறது.

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்றுமே வடகிழக்கு மாநிலங்கள். தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, திரிபுராவில் பிப்ரவரி 16-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதியும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து, வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியும், அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த மாநிலக் கட்சிகளுமே ஆட்சியதிகாரத்தில் இருந்திருக்கின்றன. திரிபுராவில் மட்டும் மார்க்சிஸ்ட் கூட்டணி அதிகாரம் செலுத்தியது. மத்தியில் 2014-ம் ஆண்டு மோடி தலைமையில் பா.ஜ.க அதிகாரத்துக்கு வந்த பிறகு, வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க கவனம் செலுத்த ஆரம்பித்தது. அதன் பிறகு, அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா என நான்கு மாநிலங்களில் பா.ஜ.க-வின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. மற்ற மாநிலங்களில் பா.ஜ.க-வின் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. நீண்டகாலமாக பா.ஜ.க-வின் கால்தடமே படாமல் இருந்த வடகிழக்கு மாநிலங்களில் மிகக்குறுகிய காலத்தில் பா.ஜ.க எப்படி ஆட்சியைப் பிடித்தது என்பது தனிக்கதை.

Iமாணிக் சகா
Iமாணிக் சகா

திரிபுரா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணியின் கோட்டையாக விளங்கியது திரிபுரா. அங்கு தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் தேர்தலில் வெற்றிபெற்று இடது முன்னணியின் ஆட்சி இருந்தது. நிருபன் சக்கரவர்த்தி, தசரத் தேவ், மாணிக் சர்க்கார் என மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் இடது முன்னணி ஆட்சியில் முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில், 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 7 தொகுதிகளைப் பிடித்து பா.ஜ.க வெற்றிபெற்றது. முதல்வர் நாற்காலியில் அமர்ந்த பிப்லப் குமார் தேப், ‘மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட், சாட்டிலைட் பயன்படுத்தப்பட்டன’ என்பது போன்ற கருத்துகளைத் தொடர்ச்சியாகப் பேசி, சர்ச்சையில் சிக்கிவந்தார். திடீரென கடந்த ஆண்டு, மார்ச் மாதம் பிப்லப் குமார் தேப் மாற்றப்பட்டு, மாணிக் சகா முதல்வராக்கப்பட்டார். வரும் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து, களமிறங்குகின்றன. திரிணாமுல் காங்கிரஸும் போட்டியில் இருக்கிறது. பா.ஜ.க-வே மீண்டும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து... ஜெயிக்கப்போவது யாரு?

நாகாலாந்து

மொத்தம் 60 தொகுதிகளைக்கொண்ட நாகாலாந்தில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், நாகா மக்கள் முன்னணி 26 இடங்களில் வென்று முதலிடத்தைப் பிடித்தது. தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி 17 இடங்களிலும் பா.ஜ.க 12 இடங்களிலும் வெற்றிபெற்றன. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நாகா மக்கள் கட்சிதான் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க-வும் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியும் டீல் பேசி, தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சித் தலைவரான நெய்பியூ ரியோ தலைமையில் ஆட்சியமைத்துவிட்டன. மேலும், நாகா மக்கள் முன்னணியின் 27 எம்.எல்.ஏ-க்களில், 21 எம்.எல்.ஏ-க்கள் 2021-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் திடீரென தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சிக்குத் தாவி அரசியல் களத்தை அதிரவைத்தனர். நாகாலாந்தில் தனிநாடு கோரிக்கை தீவிரமாக முன்வைக்கப்பட்டுவந்த நிலையில், சம்பந்தப்பட்ட நாகா அமைப்புகளுடன் மத்திய பா.ஜ.க அரசு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் சமாதானமடைந்த நாகா அமைப்புகள், தற்போது மாநில பா.ஜ.க தலைவர்களின் அணுகுமுறையால் கடும் அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இதனால், வரும் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து... ஜெயிக்கப்போவது யாரு?

மேகாலயா

மேகாலயாவில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. மொத்தம் 60 தொகுதிகளைக்கொண்ட மேகாலயாவில், 2018-ம் ஆண்டு, 21 தொகுதிகளைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தது. ஆனால், நாகாலாந்தில் என்ன நடந்ததோ, அதேதான் மேகாலயாவிலும் நடந்தது. 19 தொகுதிகளைப் பிடித்து இரண்டாம் இடம் வந்த தேசிய மக்கள் கட்சி, இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற பா.ஜ.க-வின் ஆதரவுடன் மற்ற கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு ஆட்சியமைத்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில் பலரை திரிணாமுல் காங்கிரஸ் தன் பக்கம் இழுத்தது. தற்போது, அங்கு ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க முனைப்பு காட்டிவரும் நிலையில், மம்தா பானர்ஜி அங்கு அதிரடியாகக் களமிறங்கியிருக்கிறார்.

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து... ஜெயிக்கப்போவது யாரு?

‘70 ஆண்டுக்கால காங்கிரஸ் ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டிருந்த வடகிழக்கு மாநிலங்கள், மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் வளர்ச்சியடைந்துவருகின்றன’ என்று பா.ஜ.க தலைவர்கள் பேசிவருகிறார்கள். பா.ஜ.க தலைவர்களின் இந்தக் கருத்தை வடகிழக்கு மக்கள் ஏற்கிறார்களா என்பது தேர்தல் முடிவுகள் வெளியாகவிருக்கும் மார்ச் 2-ம் தேதி தெரிந்துவிடும்!