Published:Updated:

கொரோனா: `ட்ரம்ப்பால் முடியாததை பிரதமர் மோடி செய்துகாட்டினார்!’ - பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா

பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா
பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா

`தற்போது நடைபெறும் தேர்தல் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் நிகழ்வு மட்டுமல்ல; இது பீகாரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடியது’ - ஜெ.பி.நட்டா

`அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் செய்யத் தவறியதை பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்கிறார்’ என்றும், `கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றியிருக்கிறார்’ என்றும் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, பீகாரின் தர்பங்காவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசினார்.

பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் பதவிக்காலம் நவம்பர் 29-ம் தேதியோடு நிறைவடையும் நிலையில், பீகார் மாநிலத் தேர்தலில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல் இரண்டுகட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 10-ம் தேதி வெளியாகின்றன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில், ராஷ்டிரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் ஒரே கூட்டணியில் பா.ஜ.க-வை எதிர்த்து வெற்றிபெற்றன. நிதிஷ் குமார் முதலமைச்சராகவும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் சார்பில் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இதையடுத்து, இரண்டு கட்சிகளுக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்தக் கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் விலகி, பா.ஜ.க-வுடன் புதிய கூட்டணியமைத்து முதலமைச்சரானார். இந்தப் பரபரப்பான அரசியல் சூழலில், நடைபெறவிருக்கும் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க-வுடனும், ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸுடனும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றன.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவிருக்கும் நிலையில், நேற்று பீகார் மாநிலம் தர்பங்காவில் தன் இறுதிக்கட்ட பிரசாரத்தில் பேசிய பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, ``அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் செய்யத் தவறியதை பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றியிருக்கிறார்.

US election 2020: `மிகப்பெரிய கௌரவம்!’ தேர்தல் வெற்றிக்குப் பின் ஜோ பைடன் #LiveUpdates

அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன, டொனால்டு ட்ரம்புக்கு எதிரான குற்றச்சாட்டு என்னவென்றால், அவரால் கொரோனா தொற்று பிரச்னையைச் சரியாகக் கையாள முடியவில்லை. ஆனால், சரியான நேரத்தில் முடிவுகளை எடுத்து பிரதமர் மோடி, நாட்டையும் 130 கோடி மக்களையும் காப்பாற்றியிருக்கிறார்.

பொதுமுடக்க காலத்தில் 80 கோடிப் பேருக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் உணவுப் பொருள்களையும், 15 கோடி பெண்களுக்குப் பணத்தையும் பிரதமர் மோடி வழங்கியிருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும்போதெல்லாம், தேசநலனுக்கு எதிராகப் பேசுவதை உணராதவராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருக்கிறார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி, தனது 15 ஆண்டுக்கால ஆட்சியில் நடைபெற்ற அராஜகங்களுக்காக பீகார் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

மோடி
மோடி

தற்போது நடைபெறும் தேர்தல், வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் நிகழ்வு மட்டுமல்ல; இது பீகாரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடியது. இந்தத் தேர்தலில் மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பணியாற்றியவர்கள் ஒருபுறமும், மாநிலத்தை அழிவுப் பாதைக்கு எடுத்துச் சென்றவர்கள் மறுபுறத்திலும் இருக்கின்றனர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார். ஆனால், அதற்கு முன், தனது தந்தை லாலு பிரசாத்தின் ஆட்சியில் 25 லட்சம் பிகாரிகள் புலம்பெயர் தொழிலாளர்களாக மாறியதைப் பற்றியும் தேஜஸ்வி பேச வேண்டும்.

பின்னர், பா.ஜ.க 19 லட்சம் வேலைவாய்ப்புகளை அளிப்பதாக உறுதியளித்தது. நாட்டின் தாமரை விதைகள் உற்பத்தியில் பீகார் 80 சதபிகிதம் பங்களிக்கிறது. இதில் 90 சதவிகித உற்பத்தி மிதிலாஞ்சல் மண்டலத்தில் நடைபெறுகிறது. இதற்காக இந்தப் பகுதியில் ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு இந்தப் பகுதி மக்கள் வேலைக்காகத் திண்டாட மாட்டார்கள்’’ என்று ஜெ.பி.நட்டா பேசினார்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. முதலிடத்தில் அமெரிக்கா இருக்கிறது. பண்டிகைக் காலம் என்பதால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர். ட்ரம்ப் , மோடி இருவருக்கும் இடையேயான நட்பு குறித்து இதுவரை புகழாரம் சூட்டிவந்த பா.ஜ.க-வினர் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் பின்னடைவைச் சந்தித்துவருவதாக வெளியான தகவலுக்குப் பின்னர், அவரை விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு