Published:Updated:

``மதத்தின் பெயரால் நாட்டைச் சீர்குலைக்க முயற்சி" - யாரைச் சொல்கிறார் அஜித் தோவல்?

அஜித் தோவல் ( ANI )

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மத அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு ‘மதத்தின் பெயரால் நாட்டைச் சீர்குலைக்க முயல்கிறார்கள்” எனப் பேசியிருக்கிறார். அந்தச் சிலர் யார்?

``மதத்தின் பெயரால் நாட்டைச் சீர்குலைக்க முயற்சி" - யாரைச் சொல்கிறார் அஜித் தோவல்?

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மத அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு ‘மதத்தின் பெயரால் நாட்டைச் சீர்குலைக்க முயல்கிறார்கள்” எனப் பேசியிருக்கிறார். அந்தச் சிலர் யார்?

Published:Updated:
அஜித் தோவல் ( ANI )

டெல்லியில் அகில இந்திய சூஃபி சஜ்ஜதனாஷின் கவுன்சில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``இந்தியாவை மதம் மற்றும் சித்தாந்தத்தின் பெயரால் சீர்குலைக்கவும், மோதலை ஏற்படுத்தவும் சில தீயசக்திகள் முயல்கின்றன. இது ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கிறது. இது நாட்டுக்கு வெளியேயும்கூட பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாட்டின் வளர்ச்சியைச் சீர்குலைக்கச் சிலர் மதத்தின் பெயரால் பிரிவினையைத் தூண்டிவருகின்றனர். மதத்தின் பெயரால் வெறுப்புணர்வைத் தூண்டும் நபர்கள், அமைப்புகள் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள். நாட்டின் அனைத்துச் சமூகத்தினரும் பாதுகாப்பாக வாழ்வதை உறுதிசெய்ய வேண்டும்.

இந்தியாவில் அனைத்து மதங்களுக்கும் முழுச் சுதந்திரம் இருக்கிறது. பிரிவினைவாத அமைப்புகளுக்கு எதிராக மக்கள் துணிச்சலாகக் குரல் கொடுக்க வேண்டும். நாட்டில் அமைதியை நிலைநாட்ட அனைத்து மதத் தலைவர்களும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். நாட்டில் அமைதி நிலவினால்தான் இந்தியா வலுவான நாடாக உருவெடுக்க முடியும்” எனக் குறிப்பிட்டார். மேலும், கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான இஸ்லாமியத் தலைவர்கள், “பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைத் தடைசெய்ய வேண்டும்” என வலியுறுத்தினர்.

மோடி, அஜித் தோவல்
மோடி, அஜித் தோவல்

அதையொட்டி கூட்டத்தில், ``பிரிவினைவாத அமைப்புகளுக்கு மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும். எந்தவொரு மதத்தின் கடவுளையும் அவமரியாதை செய்தால், அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். விவாதத்தில் கடவுள்கள் குறித்து விமர்சிக்கக் கூடாது. சமூக வலைதளங்களில் மதரீதியான வெறுப்புணர்வு பரப்பப்படுவதைத் தடுக்க வேண்டும்’’ எனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் திருப்பதி நாராயணனிடம் இது குறித்துக் கேட்டோம். “தொடர்ந்து இந்த நாட்டில் இருக்கும் சில எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் தொடர்ந்து போலி மதச்சார்பின்மை பேசுபவர்களும், நாட்டில் இல்லாத ஒரு பதற்றத்தை இருப்பதுபோலச் சித்திரித்துவருகிறார்கள். தமிழ்நாடு உட்பட, தொடர்ந்து சிறுபான்மையினர் சமூகத்தினர் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் அல்லது பா.ஜ.க சிறுபான்மைச் சமூகத்துக்கு எதிராக இருக்கிறார்கள் என்ற கருத்தைப் பரப்ப நினைக்கிறார்கள். பா.ஜ.க-வுக்கு எதிராகச் சிறுபான்மையினரைத் தூண்டிவிட்டு அரசியலில் குளிர்காய்கிறார்கள் சிலர்.

ஒருசில மத அடிப்படைவாத அமைப்புகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பதற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள் என்பதை ஒட்டித்தான் அஜித் தோவல் இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார். எதிர்க்கட்சியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் இந்த நாட்டின் மத நல்லிணக்கத்தை, நாட்டின் மதச்சார்பற்ற தன்மையைப் பாதுகாத்து ஒத்துழைக்கவேண்டியது அவரவர் கடமை. நரேந்திர மோடியின் கடந்த எட்டு ஆண்டுக்கால ஆட்சியில் இந்தியாவுக்குள் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. எல்லை தாண்டிய தீவிரவாதம் காஷ்மீரைத் தாண்டி நுழைய முடியவில்லை. இதையெல்லாம் நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

உள்நாட்டுப் பிரச்னைகளைச் சரிசெய்ததோடு வெளிநாடுகளிலிருந்து வரும் அச்சுறுத்தல்களையும் நீக்கி நாட்டின் பாதுகாப்பில் மிகவும் கவனமுடன் இருக்கிறது இந்திய அரசு. மோடியின் ஆட்சியை மீண்டும் மீண்டும் மக்கள் கொண்டுவருவதால் காழ்ப்புணர்ச்சியில் மத உணர்வுகளைத் தூண்டிவிட்டுச் சிலர் குளிர்காய நினைக்கிறார்கள். அவர்களை எச்சரிக்கும் வகையிலேயே அஜித் தோவல் பேசியிருக்கிறார்” என விளக்கினார்.

அஜித் தோவல் பேசியது எதிர்க்கட்சியைக் குறித்துத்தான் என்ற பா.ஜ.க-வின் குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் லட்சுமி ராமச்சந்திரனிடம் கேட்டோம். “தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ‘சமூக நல்லிணக்கம் தேவை, மதரீதியிலான வெறுப்பு அதிகரித்திருப்பதால் நாட்டின் பெயர் கெட்டுக்கொண்டிருக்கிறது’ எனப் பேசியிருக்கிறார். ‘இதைச் சரிசெய்யவேண்டியது மத அமைப்புகளின் பொறுப்பு’ எனவும் பேசியிருக்கிறார். உண்மையில் பொறுப்பு அவர்களினுடையது மட்டும்தானா... இதைச் சொல்லும்போது ஏன் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. யார் தூண்டிவிடுகிறார்கள்... மதத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவது யார் என ஏன் அவர் வெளிப்படையாகப் பேசவில்லை... உத்தரப்பிரதேசத் தேர்தல் பிரசாரத்தில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களின் சவக்குழிகளை வைத்து அரசியல் பேசியவர் பிரதமர் மோடி.

லட்சுமி ராமச்சந்திரன் - காங்கிரஸ்
லட்சுமி ராமச்சந்திரன் - காங்கிரஸ்

நாட்டின் ஒவ்வொரு மேடையிலும் மத அடையாளத்தை வைத்து அரசியல் பேசிவிட்டு, மக்களைத் தூண்டிவிடுவது பா.ஜ.க செய்யும் வேலை. அது வன்முறையாக மாறும்போது அதைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சி விவாதங்களிலும் மதரீதியிலான வெறுப்பை பா.ஜ.க-வினர்தான் வெளிப்படுத்துகிறார்கள். எல்லா வழிகளிலும் மதத்தைத் தூண்டிவிட்டுவிட்டு அவர்கள் அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது” என பா.ஜ.க-வின் மீது குற்றம் சுமத்தினார்.