Published:Updated:

முடிவடைந்த 3 நாள் கெடு; கண்டுகொள்ளாத ஊழியர்கள் - அடுத்த அதிரடிக்குத் தயாராகும் கேசிஆர்?

தெலங்கானா போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் ஒரு மாதத்தைக் கடந்து தொடர்வதால் பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

தெலங்கானா போராட்டம்
தெலங்கானா போராட்டம் ( Twitter/@tsrtcbuses )

தெலங்கானாவில் நடைபெறும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் 33-வது நாளை எட்டியுள்ளது. சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் ஊழியர்களின் போராட்டத்தால் பொதுமக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். தற்காலிக ஊழியர்களால் இயக்கப்படும் பேருந்துகளால் நிறைய விபத்துகள் ஏற்படுவதும், தங்களின் வேலை இழப்பால் பல போக்குவரத்து ஊழியர்கள் தற்கொலை செய்து இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

தெலங்கானா போராட்டம்
தெலங்கானா போராட்டம்
Twitter/@tsrtcbuses

தெலங்கானா சாலைப் போக்குவரத்துக் கழகத்தை (TSRTC) முழுமையாக அரசுடன் இணைப்பது, பல்வேறு காலிப் பணியிடங்களுக்குப் போதுமான ஆட்களை நியமிப்பது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்குவது, 2017 ஊதிய சீரமைப்புப் பரிந்துரைகளை அமல்படுத்துவது மற்றும் டீசல் மீதான வரியை அகற்றுவது போன்றவையே போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளன.

ஆனால், ஊழியர்களின் ஒரு கோரிக்கையைக் கூட ஏற்கமுடியாது அவர்களின் வேலை நிறுத்தம் நியாயமற்றது எனக் கூறி அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். முதல்வரின் எச்சரிகையைக் கண்டுகொள்ளாமல், ஊழியர்கள் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்ததன் விளைவாக ஒரே நேரத்தில் சுமார் 48,000 ஊழியர்கள் பணி இழந்ததாக அறிவித்தார் முதல்வர். இது தெலங்கானாவில் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது.

தெலங்கானா போராட்டம்
தெலங்கானா போராட்டம்
Twitter/@tsrtcbuses

இதைத் தொடர்ந்து தெலங்கானா போக்குவரத்துக் கழகத்தைத் தனியார் மயமாக்கும் வேலைகளில் இறங்கினார் சந்திரசேகர ராவ். இதற்கும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இப்படியே 25 நாள்கள் கடந்த நிலையில், கடந்த வாரம் சற்று மனம் இறங்கி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கினார் முதல்வர் சந்திரசேகர ராவ்.

`மனம் மாறாத ராவ்; சாவைத் தேடும் அரசு ஊழியர்கள்!’ - பதற்றத்தில் தெலங்கானா

உயர் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்பது சாத்தியமே இல்லை. தெலங்கானாவில் மொத்தம் 10,400 பேருந்து வழித்தடங்கள் உள்ளன, அவற்றில் 5,100 வழித்தடங்கள் தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தங்களின் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்குகிறேன்.

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்

அவர்கள் நவம்பர் 5-ம் தேதிக்குள் பணிக்குத் திரும்பினால் சிறந்தது. இல்லையேல் மீதமுள்ள 5,300 வழித்தடங்களும் தனியார் மயமாக்கப்படும். என்ன நடந்தாலும் போக்குவரத்துக் கழகம் அரசுடன் இணைக்கப்படமாட்டாது. கடந்த 4 வருடங்களில் போக்குவரத்து ஊழியர்களுக்கு 67% ஊதியம் உயர்த்தப்பட்டுவிட்டது, அவர்களின் கோரிக்கை நியாயமற்றது” எனப் பேசியிருந்தார்.

சந்திரசேகர ராவ் ஊழியர்களுக்கு வழங்கிய காலக்கெடு முடிந்து இரண்டு நாள்கள் ஆன நிலையிலும் வெறும் 200-க்கும் குறைவான ஊழியர்கள் மட்டுமே மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. கெடு கொடுத்த முதல் இரண்டு நாளில் 400 பேர் பணிக்குத் திரும்பிய நிலையில் மூன்றாம் நாளில் வெறும் 200 பேர் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலங்கானா பேருந்து
தெலங்கானா பேருந்து
Twitter/@tsrtcbuses

கால அவகாசம் கொடுத்தும் ஊழியர்கள் பணிக்குத் திரும்பாததால் முதல்வர் சந்திரசேகர ராவ் கொதித்துப்போயுள்ளாராம். முதல்வரின் அடுத்த நடவடிக்கை பற்றிப் பேசியுள்ள உயர் அதிகாரி ஒருவர், “ தெலங்கானா போக்குவரத்துக் கழகத்தை முழுவதும் தனியார் மயமாக்கும்போது அதனால் ஏற்படும் சட்டச் சிக்கல் மற்றும் பிற பிரச்னைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தெலங்கானா போக்குவரத்து தொடர்பாக முதல்வர் எடுக்கும் இறுதி முடிவு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகலாம்” எனத் தெரிவித்துள்ளார். முதல்வருக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே நடக்கும் மோதலில் சிக்கி அம்மாநில மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.