Published:Updated:

`என் ஒரே கையெழுத்தில் விதியைத் தீர்மானிக்க முடியும்’ - தனியார்மயமாகும் தெலங்கானா போக்குவரத்து

'தெலங்கானா போக்குவரத்து ஊழியர்களின் தற்கொலைகளுக்கு நான் பொறுப்பேற்க முடியாது' என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தெலங்கானா சாலை போக்குவரத்துக் கழகத்தை (TSRTC) முழுமையாக அரசுடன் இணைப்பது, பல்வேறு காலி பணியிடங்களுக்குப் போதுமான ஆட்களை நியமிப்பது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்குவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள், கடந்த 20 நாள்களுக்கும் மேலாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெலங்கானா போக்குவரத்துக் கழகம்
தெலங்கானா போக்குவரத்துக் கழகம்
Twitter/@tsrtcbuses

அரசு எச்சரிக்கையையும் மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் வேலை இழந்ததாக அறிவித்தது தெலங்கானா அரசு.  அரசுப் பேருந்துகளை இயக்கும் தற்காலிக ஓட்டுநர்களால் ஏற்படும் விபத்து, போக்குவரத்து ஊழியர்களின் தற்கொலை, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு போன்ற எதையும் கண்டுகொள்ளாத முதல்வர் சந்திரசேகர ராவ், தன் வேலை நீக்க முடிவிலிருந்து பின்வாங்க மறுத்துவருகிறார்.

2003-ல் ஜெயலலிதா.... இன்று சந்திரசேகர் ராவ்... 48 ஆயிரம் அரசு ஊழியர்களை அதிரவைத்த உத்தரவு!

இதற்கிடையில், தெலங்கானா சூர்யபேட் மாவட்டத்தில் உள்ள ஹுசூர் நகர் தொகுதி இடைத்தேர்தலில், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. தேர்தல் வெற்றி மற்றும் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஆகியவை பற்றி நேற்று முதல்வர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களிடம் பேசினார். “தெலங்கானா போக்குவரத்துக் கழகம் என்பது ஆர்.டி.சி ஊழியர்களின் வேலை நிறுத்தத்துடன் முடிந்துவிட்டது.

தெலங்கானா
தெலங்கானா
Twitter/@tsrtcbuses

இனி, தெலங்கானா போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படவுள்ளது. இன்னும் ஓரிரு நாள்களில்,  மக்கள் சேவைக்காக 7,000 தனியார் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்கு சட்டசபையின் அனுமதி தேவையில்லை. தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி அளித்து நான் போடும் ஒரு கையெழுத்தில், ஆர்.டி.சி-யின் விதியை எளிதாகத் தீர்மானிக்க முடியும். விரைவில் இயக்கப்படவுள்ள தனியார் பேருந்துகளில் முறையான கட்டணம், தரம் மற்றும் சிறந்த முறையில் பயணம் செய்ய முடியும்.

போராட்டங்களால் வளர்ந்த சந்திரசேகர் ராவ், இன்று போராட்டங்களை எதிர்க்கிறாரா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் புவியில் உள்ள ஒருவராலும் தெலங்கானா போக்குவரத்தை அரசுடன் இணைக்க முடியாது. அது ஒரு பகுத்தறிவற்ற தேவை. ஒருவேளை ஆர்.டி.சி அரசுடன் இணைக்கப்பட்டால், மற்ற போக்குவரத்து நிறுவனங்களும் தங்களை அரசுடன் இணைக்க வேண்டும் எனக் கூறி போராட்டம் நடத்துவார்கள். அது சாத்தியம் இல்லாத ஒன்று. மேலும், ஊழியர்கள் நடத்திய போராட்டத்தால் அவர்களே தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதற்கு நான் எந்த வகையிலும் பொறுப்பேற்றுக்கொள்ள முடியாது” என்று கறாராகப் பேசியுள்ளார்.

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்

சந்திரசேகர ராவின் இந்தப் பேச்சு, தெலங்கானாவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. “தெலங்கானா போக்குவரத்துக் கழகம் யாருடைய சொந்த சொத்தும் இல்லை. பிறருடைய இஷ்டத்திற்காக இதை மூடமுடியாது. முதல்வரின் பேச்சு பல எதிர்ப்புகளையும் இன்னும் பல தற்கொலைகளையும் தூண்டும். 1932-ம் ஆண்டு முதல் ஆர்.டி.சி செயல்பட்டுவருகிறது. இது இன்னும் முடிவடையவில்லை. யார் முடிப்பார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்” என டி.எஸ்.ஆர்.டி.சி-யின் கூட்டு நடவடிக்கைக் குழு உறுப்பினர் அஷ்வத்தாமன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு