அலசல்
Published:Updated:

தினகரனின் திடீர் கரிசனம்! - அ.தி.மு.க-வை மீட்கவா... சித்திக்குப் போட்டியா?

அ.ம.மு.க
பிரீமியம் ஸ்டோரி
News
அ.ம.மு.க

உங்களுக்குக் கட்சியில ஏதாச்சும் பிரச்னை இருந்தா அதைப் பேசுங்க’னு தினகரன் கேட்டாரு... ஆனா, யாரும் பேசலை. ‘சரி, எழுதியாவது கொடுங்க’னு கேட்டார்.

அ.ம.மு.க நிர்வாகிகளின் அதிருப்தியைச் சரிக்கட்ட மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகளின் இரண்டு நாள் கூட்டத்தை சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில் நடத்தி முடித்திருக்கிறார் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். கொடியேற்றுதல், சுற்றுப்பயணம் என்று சசிகலா தீவிர அரசியலில் இறங்கியிருக்கும் சூழலில், தினகரன் இந்தக் கூட்டத்தை நடத்தியிருப்பது அரசியல் அரங்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது!

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தனது கட்சி நிர்வாகிகளுடன் பெரிதாகத் தொடர்பில்லாமல் இருந்தார் தினகரன். தேர்தல் செலவுக்குக் கட்சித் தலைமையிடம் எந்த உதவியும் கிடைக்காமல் அதிருப்தியில் இருந்தவர்களுக்கு, இது மேலும் வருத்தத்தை உண்டாக்கியது. இதனாலேயே கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன், அமைப்புச் செயலாளராக இருந்த வ.து.நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன், டேவிட் செல்வன், மாவட்டச் செயலாளர்கள் பொன்ராஜா, சந்தான கிருஷ்ணன், லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து விலகி தி.மு.க-விலும், அ.தி.மு.க-விலும் இணைந்தனர்.

தினகரனின் திடீர் கரிசனம்! - அ.தி.மு.க-வை மீட்கவா... சித்திக்குப் போட்டியா?

இந்த நிலையில்தான், ‘உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க போட்டியிடும்’ என்று அறிவித்தார் தினகரன். 27 மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கயத்தாறு, கண்ணங்குடி ஆகிய இரண்டு ஒன்றியத் தலைவர் பதவிகளைக் கைப்பற்றிய கட்சியால், இந்தத் தேர்தலில் வெறும் நான்கு ஒன்றியக் கவுன்சிலர் இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இப்படியான நிலையில்தான் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்துக்கான அறிவிப்பை வெளியிட்டார் தினகரன். மொத்தம் மூன்று நாள்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம், கடந்த நவம்பர் 6-ம் தேதி ராயப்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தில் தினகரன் தலைமையில் தொடங்கியது. சென்னை, சேலம், கோவை, தஞ்சை ஆகிய மண்டலங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டம், மழையின் காரணமாக இரண்டு நாள்கள் மட்டுமே நடத்தப்பட்டது.

“கட்சி நிர்வாகிகளின் அதிருப்தியைச் சரிக்கட்டவே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது” என்றபடி கூட்டத்தில் பேசப்பட்டது குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சிலர்... “எங்க பொதுச்செயலாளர் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கலை... ஏன், அவரைத் தொடர்புகொள்ளவே முடியலைங்கிற அதிருப்தி எங்ககிட்ட பல மாதங்களா இருந்தது. ஆனா, கூட்டம் ஆரம்பிக்கிறப்பவே, ‘கொரோனா தொற்று பரவிடுமோன்னுதான் கூட்டத்தை நடத்தலை... வேற ஏதாச்சும் தடை இருந்தாக்கூட அதை உடைச்சு கூட்டத்தை நடத்தியிருக்கலாம். ஆனா, இது உங்களோட உயிர் சம்பந்தப்பட்ட பிரச்னை... அதனாலதான் உங்களையெல்லாம் நான் சந்திக்கலை’னு தெளிவுபடுத்திட்டாரு. பல மாவட்டங்கள்ல நிர்வாகிகள் கட்சியைவிட்டு வெளியேறிட்டாங்க. அதனால யார் கட்சியில் இருக்கா, யார் இல்லைன்னு தெரிஞ்சுக்கவும், கட்சியில யாரெல்லாம் வேலை செய்யலைன்னு தெரிஞ்சுக்கிறதுக்காகவும் இந்தக் கூட்டத்தை நடத்துனாங்க.

‘உங்களுக்குக் கட்சியில ஏதாச்சும் பிரச்னை இருந்தா அதைப் பேசுங்க’னு தினகரன் கேட்டாரு... ஆனா, யாரும் பேசலை. ‘சரி, எழுதியாவது கொடுங்க’னு கேட்டார். அதுக்கும் யாரும் எதுவும் எழுதித் தரலை. மத்தவங்களைக் குறை சொல்றது அவருக்குப் பிடிக்காது. அவரோட இந்த கேரக்டர் தெரிஞ்சதாலதான் யாரும் அந்தத் தப்பைப் பண்ணலை. கடந்த சட்டமன்றத் தேர்தல்ல இருந்து உள்ளாட்சித் தேர்தல் வரைக்கும் போட்டியிட்டவங்க எல்லாரும் கைக்காசை செலவு பண்ணிட்டு வர்றாங்க. இனி கூட்டம், மாநாடுனு செலவு செய்யற நிலைமையில யாரும் இல்லை. அதைப் பத்தியும் பேசினவரு, ‘இனிமே செலவைப் பத்தி யாரும் கவலைப்பட வேண்டாம். எல்லாம் சரியா நடக்கும்’னு உத்தரவாதம் கொடுத்திருக்காரு. அதேபோல, ‘மாவட்டச் செயலாளர்கள், இதர நிர்வாகிகளுடன் எப்போதும் தொடர்புல இருக்கணும், அனுசரிச்சுப் போகணும்’னு அறிவுரை வழங்கினாரு. மழைவிட்டதும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் வர்றதாவும் சொல்லியிருக்காரு...’’ என்றவர்கள் சற்றே நிறுத்தி வேறு சில தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.

தினகரனின் திடீர் கரிசனம்! - அ.தி.மு.க-வை மீட்கவா... சித்திக்குப் போட்டியா?

“வெளியில தினகரன் இப்படிப் பேசினாலும் அவர் மனசுல ஒரு கணக்கு இருக்கும். ஏற்கெனவே, குடும்பப் பிரச்னையாலதான் கட்சியைக் கண்டுக்காம இருந்தார். நிர்வாகிகள் விலகும்போதுகூட எதுவும் சொல்லலை. இப்ப சின்னம்மா சுற்றுப்பயணம் கிளம்பியிருக்குற நிலையில போட்டிக்காக எதுவும் செய்யுறாரான்னு தெரியலை. ஏன்னா, அ.ம.மு.க நிர்வாகிகள் தொடர்ச்சியா சின்னம்மாவைப் போய் பார்த்துட்டு இருக்காங்க. வெளிப்படையா இவர் ஆதரிக்கிறதுபோல காட்டிக்கிட்டாலும், சின்னம்மாவுக்காக கட்சி ஆரம்பிச்சு அவங்க சரியா கண்டுக்கலைன்னு தினகரன் மனசுல வருத்தம் இருக்கத்தான் செய்யுது. சிறையிலிருந்து வெளியே வந்ததிலிருந்து அந்தம்மா ஆளுங்கட்சிக்கு எதிரா நேரடியா பேசினதில்லை. ஆனா, இப்போ விவசாயிகள் பிரச்னைக்காக, சென்னை மழைக்காக ஆளுங்கட்சிக்கு எதிரா அறிக்கைவிட ஆரம்பிச்சுட்டாங்க. அதேசமயம், ‘இரண்டு பேருக்கும் அ.தி.மு.க-வை மீட்குறதுதான் நோக்கம்; பாதைதான் வேறு’னு தினகரன் சொல்லியிருக்கிறதையும் கவனிக்கணும். இதுல யார் பெரியவங்கன்னு இவங்களுக்குள்ள போட்டி உருவாகாம இருக்கணும். அவரை நம்பி நாங்க திரும்பவும் களத்துல இறங்குறோம். அவர் கைவிடாம இருந்தா சரிதான்’’ என்றார்கள் ஆதங்கமாக.

தனது கட்சியினர் மீதான தினரனின் இந்தக் கரிசனம் அ.தி.மு.க-வை மீட்கவா... இல்லை சித்திக்குச் செல்லும் கூட்டத்தை மடைமாற்றவா என்பது சில மாதங்களில் தெரிந்துவிடும்!