Election bannerElection banner
Published:Updated:

சசிகலா முடிவு; பா.ஜ.க பகை... கறார் காட்டிய அ.தி.மு.க! - திரிசங்கு நிலையில் தினகரன்

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

திருப்புமுனையாக இந்தத் தேர்தல் இருக்கும் என்று நினைத்த தினகரனுக்கு, சசிகலாவின் அறிக்கையால் திக்குத் தெரியாமல் திணறும்நிலை ஏற்பட்டிருக்கிறது என வருத்தப்படுகிறார்கள் அ.ம.மு.க-வினர்.

`அ.தி.மு.க-வையும், இரட்டை இலைச் சின்னத்தையும் மீட்கவே அ.ம.மு.க போராடிவருகிறது’ என்று கடந்த மாதம் வரை உற்சாகமாகச் சொல்லிவந்தார் தினகரன். அதற்குக் காரணம், சசிகலா சிறையிலிருந்து வெளியாகி, சென்னைக்கு அவர் வந்தபோது திரண்ட கூட்டமே. சசிகலாவுக்குக் கிடைத்த வரவேற்பால் உற்சாகமாக இருந்த தினகரன், அதே சசிகலாவால் இப்போது சோர்ந்துபோய்விட்டார்.

சசிகலா
சசிகலா

ஆறு மாதங்களுக்கு முன்பிலிருந்து அ.ம.மு.க-வின் அரசியல் செயல்பாடுகளை குறைத்துக்கொண்ட தினகரன், அதற்கு பதிலாக அ.தி.மு.க-வுடன் அ.ம.மு.க-வை இணைப்பதற்கான வழியைத் தேடினார். அதற்காகச் சத்தமிலலாமல் பலமுறை டெல்லி சென்றவர், பா.ஜ.க மேல்மட்ட தலைவர்களைத் தொடர்ந்து சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு நடந்தால் மட்டுமே தி.மு.க-வை வீழ்த்த முடியும் என்கிற கணக்கையும் டெல்லிக்கு உணர்த்தினார்.

ஆனால், அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி அறிவிக்கப்பட்ட பிறகு அந்தக் கட்சியை முழுமையாகத் தனது கட்டுபாட்டுக்குக் கொண்டுவந்தார் எடப்பாடி. இரட்டைத் தலைமையாக இருந்த அ.தி.மு.க-வை தனது அரசியல் ஆட்டத்தின் மூலம் ஒற்றைத் தலைமையே எல்லாம் என்கிற எண்ணத்தை தொண்டர்கள் மத்தியிலும் நிர்வாகிகள் மத்தியிலும் ஏற்படுத்திவிட்டார். இதனால் சிறையிலிருந்து சசிகலா வந்த பிறகு பல அ.தி.மு.க நிர்வாகிகள் அவர் பக்கம் செல்வார்கள் என்று எதிர்பார்த்துவந்த நிலையில், அதற்கு முதலில் முற்றுப்புள்ளிவைத்தார். அடுத்து, `அமித் ஷாவிடமே சசிகலாவையோ, தினகரனையோ கட்சியில் சேர்த்துக்கொள்ள முடியாது’ என்று துணிவோடு சொன்னது தினகரன் தரப்புக்கு ஷாக்கைக் கொடுத்தது.

அமித் ஷா
அமித் ஷா

``தேர்தல் அறிவிக்கப்பட்டால் சீட் கிடைக்காதவர்கள் சின்னம்மா பக்கம் வந்துவிடுவார்கள். எடப்பாடியே அ.ம.மு.க-வுடன் இணைப்புக்கு நாள் குறிப்பார்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவந்தார் தினகரன். ஆனால், தான் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க முடியாது என்று முரண்டுபிடித்த எடப்பாடி, டெல்லி மேலிடத்திடம், ``சசிகலாவை ஒதுங்கச் சொன்னாலே தினகரன் பக்கம் இருப்பவர்கள் அ.தி.மு.க-வுகு வந்துவிடுவார்கள்” என்று சிக்னல் கொடுக்க, அதுவும் கச்சிதமாக நடந்துவிட்டது. இப்போது தினகரன் நிலை திக்குத் தெரியாததாக இருக்கிறது.

சசிகலா அறிக்கைக்குப் பிறகு தனக்கு நெருக்கமானவர்களிடம் தினகரன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். ``இது நான் ஆரம்பித்த கட்சி. இதில் முடிவெடுக்கும் அதிகாரம் என்னிடமே இருக்கிறது. ஆனால், இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் நாம் தனித்துப் போட்டியிட போதுமான வசதிகள் வேண்டும். அதற்கு இப்போது வாய்ப்பில்லை. அ.தி.மு.க தரப்புடன் நாம் இணையலாமா அல்லது பா.ஜ.க-வுடன் உள்கூட்டணி அமைக்கலாமா?’’ என்று கேட்டிருக்கிறார். இரண்டில் எது நடந்தாலும் ஓ.கே என்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

தினகரன்
தினகரன்

பா.ஜ.க தரப்பிடம் இந்த விஷயத்தை பாஸ் செய்தார் தினகரன். அவர்கள் எடப்பாடியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ``தினகரன் கட்சியை எங்களுடன் இணைப்பதில் சிக்கல் இல்லை. ஆனால் ஒற்றை இலத்கத்தில்தான் அவர் ஆட்களுக்கு சீட் கொடுக்க முடியும். உங்களுடன் கூட்டணி என்றாலும் அந்த எண்ணிக்கையில் மாற்றம் இல்லை” என்று கறார் காட்டிவிட்டது அ.தி.மு.க தலைமை. தினகரன் `தரப்பிலோ நாற்பது தொகுதிகள் எனது ஆட்களுக்கு தரட்டும். நான் தேர்தலில் நிற்கவில்லை ஒதுங்கிக்கொள்கிறேன்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு இதுவரை அ.தி.மு.க தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

`சசிகலா முடிவு சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது; எனினும் தேர்தலில் அ.ம.மு.க போட்டியிடும்!’ - தினகரன் #ElectionUpdates

இந்தநிலையில், தனது கட்சியினரிடம் விருப்ப மனுவை வாங்கிவைத்திருக்கும் தினகரன் நேர்காணலையும் நடத்தவிருக்கிறார். ஆனால், தேர்தலில் நிற்பதைப் பற்றி மட்டும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார். `அ.தி.மு.க-வுக்கு எதிராக, தேர்தல் களத்தில் நின்று தேவையில்லாமல் பா.ஜ.க பகையைச் சம்பாதிக்க வேண்டி வரும் அல்லது பா.ஜ.க போட்டியிடும் இடங்களில் நாம் போட்டியிடாமல் இருக்க வேண்டும். இதற்குத் தேவையான பொருளாதாரமும் சிக்கலாக இருக்கிறது’ என்று பல கோணங்களில் தினகரன் இப்போது யோசித்துவருகிறாராம். இதனால் தேர்தலில் போட்டியிடும் முடிவையே தவிர்த்துவிட்டு, தமிழக தேர்தல் முடிந்த பிறகு தனது அரசியல் ஆட்டத்தை ஆட தினகரன் நினைக்கிறார் என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

ஆனால், அ.தி.மு.க தரப்புடன் தொடர்ந்து பேச்சு நடந்துவருகிறது. ``ஒருவேளை அவர்கள் எங்களுக்கு ஒத்துவராவிட்டால் நாங்கள் தனித்து நின்று அ.தி.மு.க-வின் வெற்றியை பாதிப்போம். அப்போது அவர்களுக்கு எங்கள் பலம் புரியும். கண்டிப்பாக தேர்தல் புறக்கணிப்பை தினகரன் கையில் எடுக்க மாட்டார்’’ என்கிறார்கள் மற்றொரு தரப்பினர். 7-ம் தேதி அன்று தனது வீட்டில் முக்கிய சில நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருக்கிறாராம் தினரகன். அதற்குப் பிறகே தனது அரசியல் பயணத்தின் பாதையை முடிவு செய்யவிருக்கிறாராம்.

அ.ம.மு.க நிர்வாகிகளுக்கு சீட்...  தினகரன் எதிர்ப்பைச்  சரிக்கட்ட முதல்வரின் புதிய அஸ்திரம்?

கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

சசிகலா முடிவு; பா.ஜ.க பகை...  கறார் காட்டிய அ.தி.மு.க! - திரிசங்கு நிலையில் தினகரன்

தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;

தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ

உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு