Published:Updated:

வைகோ வழியா... ராமதாஸ் பாணியா... என்ன செய்யப்போகிறார் டி.டி.வி.தினகரன்?

டி.டி.வி.தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
டி.டி.வி.தினகரன்

அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் அ.ம.மு.க நிர்வாகிகள் என்ன மாதிரியான செயல்பாடுகளை முன்னெடுப்பது என்பது தொடர்பாக எங்கள் கட்சிக்குள் ஒரு குழப்பம் ஏற்பட்டது

வைகோ வழியா... ராமதாஸ் பாணியா... என்ன செய்யப்போகிறார் டி.டி.வி.தினகரன்?

அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் அ.ம.மு.க நிர்வாகிகள் என்ன மாதிரியான செயல்பாடுகளை முன்னெடுப்பது என்பது தொடர்பாக எங்கள் கட்சிக்குள் ஒரு குழப்பம் ஏற்பட்டது

Published:Updated:
டி.டி.வி.தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
டி.டி.வி.தினகரன்

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமையை முன்வைத்து கோஷ்டி மோதல்கள் அரங்கேறிவரும் சூழலில், மாநில நிர்வாகிகள் கூட்டம், மாவட்டம்தோறும் செயல்வீரர்கள் கூட்டம் எனச் சுழன்றடிக்க ஆரம்பித்திருக்கிறார் டி.டி.வி.தினகரன்.

‘அ.தி.மு.க-வை மீட்பதே லட்சியம்’ என அ.ம.மு.க-வை ஆரம்பித்த தினகரன், கடந்த நான்கு ஆண்டுகளில் தேர்தல் தோல்விகள், முக்கிய நிர்வாகிகள் விலகல், வழக்கு அலைக்கழிப்புகள் எனப் பல்வேறு சறுக்கல்களைச் சந்தித்துவிட்டார். ஆனால், அவர் காத்திருந்த ஒரு தருணம் இப்போதுதான் வந்திருக்கிறது. அ.தி.மு.க பலவீனமாக இருக்கும் இந்தச் சூழலிலாவது, அவர் தெளிவாகக் காய்நகர்த்த வேண்டும்’ என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள் அவரின் கட்சி நிர்வாகிகள்.

காலம் தந்த கடைசி வாய்ப்பு!

கடந்த சில மாதங்களாக மாவட்ட நிர்வாகிகள். செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்திவரும் டி.டி.வி.தினகரன், கடந்த ஜூன் 30-ம் தேதி, சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.ம.மு.க தலைமைக் கழக அலுவலகத்தில், மாநில நிர்வாகிகளுக்கான கூட்டத்துக்கு அழைப்புவிடுத்திருந்தார். இந்தக் கூட்டத்தில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வெளியில் வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த தினகரன், ``அ.தி.மு.க-வில் இருக்கும் உண்மையான தொண்டர்கள், அம்மாவின் தொண்டர்கள், தலைவருடைய தொண்டர்கள் மிச்சம் மீதி இருந்தால், இதையெல்லாம் சகித்துக்கொண்டே இருக்காமல் எங்களுடன் வாருங்கள்’’ என அழைப்புவிடுத்தார். ஆனால், `அரசியலில் இவரின் பாணி எல்லாம் எடுபடாது. இன்னும் அதிரடியாக இறங்க வேண்டும். காலம் தந்த கடைசி வாய்ப்பு இது. இதையும் பயன்படுத்திக்கொள்ளவில்லையென்றால் அவ்வளவுதான்’’ எனப் படபடக்கிறார்கள் அ.ம.மு.க முன்னணி நிர்வாகிகள்.

வைகோ வழியா... ராமதாஸ் பாணியா... என்ன செய்யப்போகிறார் டி.டி.வி.தினகரன்?

இது குறித்து விரிவாகப் பேசிய அவர்கள், ``அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் அ.ம.மு.க நிர்வாகிகள் என்ன மாதிரியான செயல்பாடுகளை முன்னெடுப்பது என்பது தொடர்பாக எங்கள் கட்சிக்குள் ஒரு குழப்பம் ஏற்பட்டது. நாமாக ஏதாவது செய்து, அது பொதுச்செயலாளருக்குப் பிடிக்காமல் போய்விட்டால் தேவையில்லாத பஞ்சாயத்துதான் வரும் என்று அவரைச் சந்திக்க நினைத்திருந்தோம். இந்த நேரத்தில் அவரே கூட்டத்துக்கு அழைத்தது வசதியாகப் போய்விட்டது. வந்திருந்த நிர்வாகிகளிடம், ‘கட்சியின் வளர்ச்சி, உள்ளாட்சி இடைத்தேர்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்துப் பேசுங்கள்’ என்று மைக் கொடுக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான நிர்வாகிகள் அ.தி.மு.க-வில் தற்போது ஏற்பட்டிருக்கும் சூழல்கள் குறித்தே பேசினார்கள். அதுதான் தற்போதைய தேவையும்கூட.

ராமதாஸ் பாணியா, வைகோ வழியா?

திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரான தொட்டியம் ராஜசேகரன் எழுந்து, `மகாபாரதத்தில் ஆளானப்பட்ட கர்ணனையே பலிகொடுத்து நீதியை நிலைநாட்டினார் கிருஷ்ண பரமாத்மா. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் கர்ணன்கள் அல்ல, துரியோதனன்கள்தான். அதனால் இந்தச் சூழலைப் பயன்படுத்தி, கிருஷ்ணாவதாரம் எடுத்து நீங்கள் அ.தி.மு.க-வை மீட்க வேண்டும்’ என்று உணர்ச்சி பொங்கப் பேசினார். அனைவரின் கருத்தையும் உன்னிப்பாகக் கேட்டுக்கொண்ட தினகரன், `நான் கிருஷ்ணனாக இருக்க விரும்பவில்லை. தர்மராக இருக்கவே விரும்புகிறேன். குறுக்குவழியில் கட்சியைக் கைப்பற்ற நினைக்க வேண்டாம். இந்தச் சண்டையில் நாம் தலையிடவும் வேண்டாம். இப்போது இல்லாவிட்டாலும் எப்போதாவது இரட்டை இலைச் சின்னம் முடங்கும் என்பது எனக்குத் தெரியும். உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை சிலைச் சின்னத்தில் போட்டியிட முடியாத நிலையில் அ.தி.மு.க நிர்வாகிகள் இருக்கிறார்கள். ஆனால், நம்மிடம் ‘குக்கர்’ என்கிற சின்னம் இருக்கிறது.

வைகோ வழியா... ராமதாஸ் பாணியா... என்ன செய்யப்போகிறார் டி.டி.வி.தினகரன்?

மாநகரம் முதல் பேரூராட்சி வரை கவுன்சிலர் தேர்தல் நடக்கும் இடங்களில் மக்களிடம் நம் சின்னத்தைக் கொண்டு செல்வதற்குக் கடுமையாக உழையுங்கள். மொத்தமுள்ள 34 இடங்களில் பத்து கவுன்சிலர் இடங்களில் வென்று, இரண்டாம் இடத்துக்கு வந்தால்கூட அது நமக்குச் சாதகமாகவே இருக்கும். மக்களின் பார்வை நம் பக்கம் திரும்பும். அதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமையின்மீது அதிருப்தியாக இருக்கும் அ.தி.மு.க நிர்வாகிகளிடம் நேரில் பேசி நம் இயக்கத்துக்கு அழைத்துவாருங்கள். நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவால் மகத்தான வெற்றியைப்பெற்றால், அனைத்து அ.தி.மு.க நிர்வாகிகளும் நம்மை நோக்கி வந்துவிடுவார்கள்’ என்றார். ஆனால்...’’ என்று இழுத்தவர்கள், சிறு இடைவெளிக்குப் பிறகு தங்கள் ஆதங்கங்களைக் கொட்டித் தீர்த்தனர்.

``தினகரன் சொல்வதைக் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அரசியலில் இதெல்லாம் வேலைக்கு ஆகாது. உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க போட்டியிடாவிட்டால் பா.ஜ.க., பா.ம.க., காங்கிரஸ் போன்ற கட்சிகளே இரண்டாம் இடத்துக்கு வர வாய்ப்பிருக்கிறது. அ.ம.மு.க வரும் என்று எந்த அடிப்படையில் சொல்கிறார் என்றே தெரியவில்லை. சம்பாதித்த பணத்தை இ.பி.எஸ்-ஸைவிட அதிகமாகச் செலவழித்து, எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் வேலையைப் பார்க்கலாம். அதேபோல, ஓ.பி.எஸ்-ஸை எடப்பாடி தரப்பு நடத்திய விதத்தால் தென்மாவட்ட முக்குலத்து சமுதாய மக்களிடம் கடுமையான அதிருப்தி உண்டாகியிருக்கிறது. தஞ்சாவூர் தொடங்கி திருநெல்வேலி வரைக்கும் உள்ள முக்குலத்தோர் அமைப்புகளை ஒருங்கிணைத்து ‘ராமதாஸ் பாணி’ அரசியலில் இறங்கினால் மட்டுமே இப்போது வேலைக்காகும். ஆனால், இது குறித்துக் கூட்டத்தில் சிலர் பேசியபோதும்கூட, ‘அதெல்லாம் கூடாது, அப்படி யாராவது சாதிரீதியாக நடந்துகொண்டால் உடனடியாகக் கட்சிப் பதவியைவிட்டு நீக்கிவிடுவேன்’ எனக் கறாராகச் சொல்லிவிட்டார். தான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஏற்கெனவே தன்மீது சாதி முத்திரை விழுந்து விட்டது என்பதையே அவர் இன்னும் உணராமல் இருக்கிறார். 2024-ல் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியில் சில இடங்களைப் பெற்று தேர்தலில் நிற்கலாம் என நினைக்கிறார் என்று சொல்கிறார்கள். அப்படி ஒன்றிரண்டு இடங்களைப் பெற்றுக்கொண்டு தேர்தலில் நின்றால், இன்று வைகோவின் கட்சி இருக்கும் நிலைதான் நாளை எங்களுக்கும் ஏற்படும்’’ என்கிறார்கள் வருத்தத்தோடு.

சி.ஆர்.சரஸ்வதி
சி.ஆர்.சரஸ்வதி

இந்த விவகாரம் குறித்து அ.ம.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் பேசினோம். ``கட்சி நிர்வாகிகளுக்குப் பல எதிர்பார்ப்புகள் இருக்கலாம். ஆனால், எங்கள் பொதுச்செயலாளர் ஜனநாயக முறைப்படி தேர்தலில் வெற்றிபெற்று இரட்டை இலைச் சின்னத்தை, அ.தி.மு.கவை மீட்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்’’ என்பதோடு முடித்துக்கொண்டார்.

முயற்சியில்லாத வெறும் கனவால் என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது?!