Published:Updated:

பா.ஜ.க-வுடன் நெருக்கம்... பன்னீருக்கு சாமரம்... தினகரன் கணக்கு என்ன?

தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
தினகரன்

சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், புரோக்கர் சுகேஷ் சந்திராவுடன் சேர்த்து தினகரன் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தொடக்கத்தில் ஏற்பாடானது.

பா.ஜ.க-வுடன் நெருக்கம்... பன்னீருக்கு சாமரம்... தினகரன் கணக்கு என்ன?

சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், புரோக்கர் சுகேஷ் சந்திராவுடன் சேர்த்து தினகரன் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தொடக்கத்தில் ஏற்பாடானது.

Published:Updated:
தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
தினகரன்

2019 நாடாளுமன்றத் தேர்தல் நேரமது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடந்த பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், “தமிழகத்தைப் புறக்கணித்த மோடி, பா.ஜ.க-வுடன் என் வாழ்நாளில் கூட்டணி அமைக்க மாட்டேன். எங்களுக்குச் சின்னம் கிடைப்பதில்கூட கடும் இடைஞ்சல் கொடுத்தார்கள். தேசியக் கட்சிகளை நம்பி ஏமாறாதீர்கள்” என்று சீறினார். அதே தினகரன், கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி நடந்த கட்சிப் பொதுக்குழுவில், “தேசியக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதுதான் சரியானதாக இருக்கும். காங்கிரஸ் அல்லது பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைப்போம்” என்று பேசியிருக்கிறார். “தினகரனின் அரசியல் கணக்கு என்ன?” அவருக்கு நெருக்கமான அ.ம.மு.க பிரமுகர்களிடம் பேசினோம்.

“தினகரனுக்கு பா.ஜ.க கொடுத்த இம்சைகள் கொஞ்ச நஞ்சமல்ல. லஞ்சம் கொடுத்து இரட்டை இலைச் சின்னம் பெற முயன்றதாகத் தொடரப் பட்ட வழக்கில் அவரை டெல்லி போலீஸ் கைது செய்தது. அ.ம.மு.க-வுக்கு சின்னம் கிடைக்க விடாமல் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டது. சசிகலா தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தியபோது, தினகரனுக்குச் சொந்தமான இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இப்படி யான தாக்குதல்கள் சிறுபான்மைச் சமூகத்தினர் மத்தியில் அவர்மீது ஒருவித அனுதாபத்தை வரவழைத்தது. 2019 தேர்தலின்போது, சுயேச்சையாக அ.ம.மு.க வேட்பாளர்கள் போட்டியிட்டபோது, சிறுபான்மையினர் வாக்குகள் ஓரளவு திரண்டன. அதை உணர்ந்த தினகரன், எஸ்.டி.பி.ஐ கட்சியையும் கூட்டணியில் சேர்த்துக்கொண்டார். ஆனால், தன் ரூட்டை தினகரன் பின்னாளில் மாற்றிக்கொண்டார்.

பா.ஜ.க-வுடன் நெருக்கம்... பன்னீருக்கு சாமரம்... தினகரன் கணக்கு என்ன?

சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், புரோக்கர் சுகேஷ் சந்திராவுடன் சேர்த்து தினகரன் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தொடக்கத்தில் ஏற்பாடானது. இந்த வழக்கு தொடர்பாக, இந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் டெல்லி அமலாக்கத்துறையில் ஆஜராகி விளக்கமளித்தார் தினகரன். அப்போது டெல்லியில் பா.ஜ.க-வைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். ‘கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க-வில் சேரலாமே’ என்று டெல்லி விடுத்த அழைப்பை தினகரன் ஏற்கவில்லை. ‘கட்சியைக் கலைக்க முடியாது, வேண்டுமானால் கூட்டணி அமைக்கலாம்’ என்று புது ‘ரூட்’ போட்டார். அதைத் தொடர்ந்து, புதுச்சேரி அருகேயுள்ள தினகரனின் தோட்ட இல்லத்திலும் ஒரு ரகசிய சந்திப்பு நடந்தது. இதையடுத்துதான், தினகரன் - பா.ஜ.க கூட்டணி ‘டீல்’ இறுதிசெய்யப்பட்டது. இந்த வருடம், ஜூன் மாதம் சின்னம் வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபோது, தினகரன் பெயர் அதில் இல்லை. கூட்டணி சமரசத்தின் விளைவு இது.

பா.ஜ.க-வுடன் நெருக்கம்... பன்னீருக்கு சாமரம்... தினகரன் கணக்கு என்ன?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க கூட்டணியில் ஐந்து சீட்டுகளைப் பெறத் தீர்மானித்திருக்கிறார் தினகரன். இத்துடன், ஒரு ராஜ்ய சபா சீட், ஒரு மத்திய இணை அமைச்சர் பதவியையும் கேட்டிருக்கிறார். இப்போதைக்கு சிவகங்கை, மயிலாடுதுறை தொகுதிகளைத் தருவதாக பா.ஜ.க உத்தரவாதம் அளித்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே, ‘அ.தி.மு.க பிளவுபட்டுவிடும், தனி அணியாகச் செயல்படும் பன்னீருடன் கரம் கோப்பது தனக்கு தென்மாவட்டங்களில் லாபத்தைத் தரும்’ என்பது தினகரனின் கணக்கு.

அதனால்தான், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களோடு ஒன்றிணைந்து செயல்பட கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்தியிருக்கிறார். பொதுக்குழுவில், ‘பன்னீர் மனம் திருந்திவிட்டார்’ என்று சாமரம் வீசியதும் இந்தக் கணக்கின் அடிப்படையில்தான். அடுத்த இரண்டு மாதங்களுக்குள்ளாக, மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள பன்னீருக்கும் அழைப்பு விடுக்கப்படலாம். அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்திருப்பதையும், அவர் எங்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதையும் நல்ல சகுனமாகவே பார்க்கிறோம். எடப்பாடியை ஓரங்கட்ட ஓ.பி.எஸ்-ஸுடன் இணைந்து வேலை களைச் செய்வார் தினகரன்” என்றனர் விரிவாக.

இது ஒருபுறமிருக்க, அ.ம.மு.க பொதுக்குழுக் கூட்டத்துக்காக வைக்கப்பட்ட பேனர்கள் பலவற்றிலும் சசிகலாவின் படம் இல்லை. அ.ம.மு.க பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கிவிட்டு, தினகரன் அந்தப் பொறுப்பை ஏற்றபோது, ‘கட்சியின் தலைவர் பதவி என்றுமே சசிகலாவுக்குத்தான்’ என்றனர். இப்போது, தலைவர் பதவிக்குத் தேர்தலை அறிவித்திருக்கிறார் தினகரன். சசிகலாவை மொத்தமாகவே அவர் ஓரங்கட்டுவது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

சசிகலா படம் இல்லாமல் பொதுக்குழுவில் வைக்கப்பட்ட பேனர்...
சசிகலா படம் இல்லாமல் பொதுக்குழுவில் வைக்கப்பட்ட பேனர்...

இனி கூட்டணி அரசியல்தான் எடுபடும் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார் தினகரன். பா.ஜ.க - பன்னீர்செல்வம் - அ.ம.மு.க., இந்த கூட்டணிக் கணக்கு தனக்கு சீட்டுகளைப் பெற்றுத் தருமென நம்புகிறார். தன்னை திஹார் சிறையில் ஒரு மாதம் அடைத்த பா.ஜ.க., தனக்கு மத்திய மந்திரி பதவி தரும் என அதீதமாக நம்புகிறார். ஆனால், அந்தக் கணக்கு எடுபடுமா என்பதுதான் தெரியவில்லை. 2019, 2021 தேர்தல்களில் அவருக்கு விழுந்ததெல்லாம், தி.மு.க., பா.ஜ.க எதிர்ப்பு, எடப்பாடி - பன்னீர் எதிர்ப்பு வாக்குகள். பா.ஜ.க., பன்னீருடன் தினகரன் கரம்கோக்கும் பட்சத்தில், அந்த வாக்குகள் என்னவாகும் என்கிற கேள்வி பிறந்திருக்கிறது.

தினகரனின் மனக்கணக்கு வெல்கிறதா அல்லது வீழ்ச்சியைச் சந்திக்கப்போகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.