Published:Updated:

சசிகலா: `கெமிக்கல் ரியாக்‌ஷன்’, `சஸ்பென்ஸ்’, `பொறுத்திருந்து பாருங்கள்’ - தினகரன் அதிரடி

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

`அ.தி.மு.க-வை மீட்டெடுக்கும் சட்டப்போராட்டத்தை சசிகலா தொடர்வார். எங்களுக்கு குறுகிய மனப்பான்மை கிடையாது. யார் என்ன பேசினாலும் சிரித்துக்கொண்டே ரசிக்கிறோம்’ - டி.டி.வி.தினகரன்.

அ.ம.மு.க அமைப்புச் செயலாளர் இ.மகேந்திரன் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்ள இன்று மதுரை வந்த டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், ``நான்கு ஆண்டுச் சிறைவாசத்துக்குப் பிறகு சசிகலா தமிழகம் வருகிறார். தமிழக மக்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். தமிழக எல்லையிலிருந்து சென்னை வரை அலைகடலென வரவேற்பு அளிக்கவிருக்கிறார்கள். சசிகலா விடுதலையால் தமிழகத்தில் கெமிக்கல் ரியாக்‌ஷன் ஏற்பட்டிருக்கிறது” என்றார்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

`நீங்கள் மன்னிப்புக் கேட்டு, மனு அளித்தால் அ.தி.மு.க-வில் இணைப்பது குறித்து பரிசீலிப்பதாக கே.பி.முனுசாமி கூறியிருக்கிறாரே...' என்ற கேள்விக்கு பதிலளித்த தினகரன், ``யார் தவறு செய்தவர்கள், யார் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதைக் காலம் முடிவு செய்யும். அம்மாவின் ஆட்சி தொடர வேண்டும் என இந்த ஆட்சியை அமைத்தவர் சசிகலா” என்றார்.

தொடர்ந்து பேசிய தினகரன், ``அவசர அவசரமாக ஜெயலலிதா நினைவு மண்டபம் திறக்கப்பட்டது. சீப்பை மறைத்துவைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என நினைக்கிறார்கள். அது நடக்காது. சசிகலா அ.தி.மு.க அலுவலகத்தில் பொதுக்குழுவைக் கூட்டுவாரா என்பது சஸ்பென்ஸ். அம்மாவின் அ.தி.மு.க-வை மீட்டெடுக்கவே அ.ம.மு.க தொடங்கப்பட்டது" என்றார்.

சசிகலா காரில் அ.தி.மு.க கொடி
சசிகலா காரில் அ.தி.மு.க கொடி

`மருத்துவமனையிலிருந்து சசிகலா சென்ற காரில் அ.ம.மு.க கொடியைக் கட்டாமல், அ.தி.மு.க கொடி கட்டப்பட்டது பற்றி..?’ என்று கேட்டதற்கு, ``அ.தி.மு.க பொதுச்செயலாளர் என்ற முறையில் அவருக்கு அந்த உரிமை இருக்கிறது. பொதுக்குழுவைக் கூட்ட, கட்சித் தேர்தலை நடத்த, கட்சியைவிட்டு நீக்க அதிகாரம் படைத்தவர் பொதுச்செயலாளர். வழக்கு நிலுவையில் இருப்பதால் அவருக்குத்தான் அதிகாரம் உண்டு. அ.தி.மு.க-வை மீட்டெடுக்கும் சட்டப் போராட்டத்தை சசிகலா தொடர்வார். எங்களுக்குக் குறுகிய மனப்பான்மை கிடையாது. யார் என்ன பேசினாலும் சிரித்துக்கொண்டே ரசிக்கிறோம்" என்றார்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்:  உயர்மட்டக் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை! #NowAtVikatan

`தேர்தலில் தனித்துப் போட்டியா?' என்ற கேள்விக்கு பதிலளித்த தினகரன், ``தேர்தலில் தனித்துப் போட்டியா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்" என்றார்.

தினகரன்
தினகரன்

`அ.தி.மு.க அமைச்சர்கள் உங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்களா?' என்றதற்கு, ``அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்களா என்பதை சசிகலா கூறுவார்" என்றார். `சசிகலாவை ஆதரித்து போஸ்டர் ஒட்டினால், அவரை எதிர்த்து ஒரு லட்சம் போஸ்டர் ஒட்டுவேன் என்று சி.வி.சண்முகம் கூறியிருக்கிறாரே?’ என்ற கேள்விக்கு, ``அதை சி.வி.சண்முகம் நிதானத்தில்தான் பேசினாரா என்பதைக் கேட்டுச் சொல்லுங்கள்" என்றார்.

மதுரையில் அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் பத்திரிக்கையாளர் சந்திப்பு. நிருபர்: சல்மான் வீடியோ: என்.ஜி.மணிகண்டன்

Posted by Junior Vikatan on Tuesday, February 2, 2021
அடுத்த கட்டுரைக்கு