"துரோகம் என்பது பழனிசாமியின் மூலதனம். இரட்டை இலைச் சின்னம் இருந்தாலும், பழனிசாமியால் தி.மு.க-வை வீழ்த்த முடியாது. ஒன்றிணைந்தால் மட்டுமே தி.மு.க-வை வீழ்த்த முடியும். அ.தி.மு.க-வை பிராந்தியக் கட்சியாக மாற்றிவிட்டார்" என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்திருக்கிறார்.

இன்று மதுரைக்கு வந்திருந்த டி.டி.வி.தினகரன், கோச்சடையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளான இன்று அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ஜெயலலிதா பிறந்தநாளில் அவருக்கு மதுரையில் மரியாதை செலுத்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தற்போது தவறானவர்கள் கையில் இரட்டை இலைச் சின்னம் இருக்கிறது.
பழனிசாமி ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதே லட்சியத்துக்காக தொடங்கப்பட்டது அ.ம.மு.க. லாபத்துக்காக எடப்பாடியுடன் சிலர் இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் அ.ம.மு.க வளர்ந்துவரும் இயக்கமாக மாறியிருக்கிறது. இரட்டை இலை, துரோகிகளின் கையில் இருந்ததால் தி.மு.க வெற்றிபெற்றது. பழனிசாமியின் வெற்றி என்பது பணபலம், ஆட்சி அதிகாரம் இருந்ததால் வந்திருக்கிறது.

இரட்டை இலைச் சின்னம் இருந்தும் பழனிசாமியால் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. அ.தி.மு.க-வின் அழிவுக்கு பழனிசாமியின் ஆணவம், அகங்காரம்தான் காரணம். அ.தி.மு.க-வை பிராந்தியக் கட்சியாக மாற்றிவிட்டார்.
தேவர் திருமகனாரின் நினைவிடத்துக்கு பழனிசாமியின் அரசியல் தவறால் வர முடியவில்லை. அ.தி.மு.க-வில் தற்போது இருப்பவர்கள் தொண்டர்கள் அல்ல, டெண்டர்கள்! `எங்களுக்கு துரோகம் செய்ததால், ஒரு சிலரைப் பார்த்து அச்சம் இருக்கலாம், அதனால்தான் சேர்க்க மாட்டேன்' என்கிறார் பழனிசாமி.
எனக்குத் தகுதி இல்லை, நான் தேவை இல்லை என்கிறார். ஆனால், ஆட்சி அதிகாரம், பணபலம் இருந்தும் தி.மு.க ஆட்சிக்கு வருவதை பழனிசாமியால் தடுக்க முடியவில்லை. ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க வெற்றிபெற முடியாது, பழனிசாமி மெகா கூட்டணி என்றார். ஆனால், தேமுதிக, பாமக வெளியேறிவிட்டன. வன்னியர் உள் இட ஒதுக்கீடு 10.5 சதவிகிதம் அறிவித்து முறையாக நடைமுறைப்படுத்த முடியாமல் மக்களை ஏமாற்றிவிட்டார்.
பா.ம.க., பழனிசாமியிடமிருந்து நல்லவேளையாக தப்பித்துவிட்டது. ஒரு கண்ணில் வெண்ணைய், மறு கண்ணில் சுண்ணாம்பு என்பதுபோல வன்னியர் உள் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. துரோகம்தான் பழனிசாமியின் மூலதனம்.
ஆட்சி அதிகார அகங்காரத்தால், பணத்தால் பழனிசாமி ஆட்டம்போடுகிறார், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இந்தச் சுற்றில் பழனிசாமி தற்காலிகமாக வெற்றிபெற்றிருக்கிறார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், `பொதுக்குழு செல்லும்’ என்று கூறியிருக்கின்றனர். தீர்மானத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை, அம்மா, எம்.ஜி.ஆரின் சின்னம் பழனிசாமியிடம் கிடைத்ததால் அது பின்னடவைச் சந்தித்திருக்கிறது.

அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஓர் அணியில் திரண்டு செயல்பட்டால் தி.மு.க என்ற தீயசக்தியை வெல்ல முடியும். அனைவரும் ஒன்றிணைந்து எங்களோடு வருவார்கள். பழனிசாமி, அம்மாவின் தொண்டராக உணரவில்லை, அகங்காரத்தில் குதிக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிக்காக நாங்கள் 40 சீட்டுகள் கேட்டோம். ஆனால், பழனிசாமியின் தவறான முடிவால் ஆட்சிப் பொறுப்புக்கு வர முடியவில்லை.
பழனிசாமி எப்போதும் திருந்துவதாகத் தெரியவதில்லை. நீதிமன்றத் தீர்ப்பில் மேல் முறையீடு போகலாம், தேர்தல் ஆணையம் போகலாம். கட்சி இருப்பதால் மட்டும் சோபித்துவிட முடியுமா... இந்தத் தீர்ப்பால் தற்காலிகத் தீர்வுதான் கிடைத்திருக்கிறது. பழனிசாமிதான் பொதுச்செயலாளர் என அறிவித்தாலும் தி.மு.க-வை வீழ்த்த முடியாது. கூட்டணி பலத்தோடு இருக்கும் தி.மு.க-வை வீழ்த்த முடியாத நிலையில் பழனிசாமி இருக்கிறார். பணபலமும், மூத்த நிர்வாகிகளும் உடன் இருப்பதால் மட்டுமே வெற்றிபெற்றுவிட முடியாது
எனது உயரம் எனக்குத் தெரியும், நாடாளுமன்றத் தேர்தலில் எனது தலைமையில் கூட்டணி அமைக்கவில்லை. சுவாசம் உள்ளவரை போராடுவோம், அ.ம.மு.க-தான் அம்மாவின் இயக்கம்" என்றார்.