Published:Updated:

"அதிமுக-வுக்காக பன்னீர்செல்வம் போராடிவருகிறார்!" - டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரன்

'தன்மீது தி.மு.க எந்த வழக்கும் போட்டுவிடக் கூடாது என்பதற்காக, அ.தி.மு.க-வை அழிக்கும் வகையில், எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுவருகிறார்.'- டி.டி.வி. தினகரன்

"அதிமுக-வுக்காக பன்னீர்செல்வம் போராடிவருகிறார்!" - டி.டி.வி.தினகரன்

'தன்மீது தி.மு.க எந்த வழக்கும் போட்டுவிடக் கூடாது என்பதற்காக, அ.தி.மு.க-வை அழிக்கும் வகையில், எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுவருகிறார்.'- டி.டி.வி. தினகரன்

Published:Updated:
டி.டி.வி.தினகரன்

அ.தி.மு.க அரசின் முன்னாள் தலைமை கொறடா துரை.கோவிந்தராஜன் படத்திறப்பு நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணியைச் செய்துவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்தத் தேர்தலில் ஒரு முத்திரையைப் பதிக்கும். இந்தியாவின் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாங்களும் ஈடுபட்டிருக்கிறோம்.

தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தினகரன்
தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தினகரன்

தலையில்லா முண்டமாக அ.தி.மு.க இருக்கிறது. பன்னீர்செல்வமும் பழனிசாமியும் பிரிந்து செயல்படுகின்றனர். தேர்தல் ஆணையத்தின்படி இருவரும் வேட்பாளருக்கான படிவத்தில் கையெழுத்திட வேண்டும். எடப்பாடி கூட்டிய பொதுக்குழுவில் நான்கு மாதங்களில் கட்சியில் தேர்தல் நடத்தப்படும், பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார் எனக் கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. தற்போது எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளராக இருப்பதுகூட சட்டப்படித் தவறாகும்.

துரை.கோவிந்தராஜன் படத்திறப்பு நிகழ்ச்சி
துரை.கோவிந்தராஜன் படத்திறப்பு நிகழ்ச்சி

அ.தி.மு.க-வின் சின்னத்துக்காகவும், கட்சிக்காகவும் அங்கிருக்கும் தொண்டர்கள், பழனிசாமி அதிமுக-வை அழிக்க வேண்டும் என்ற சுயநலத்தோடு செயல்பட்டுவருகிறார் என்பதை உணர்ந்துவருகின்றனர். இன்றைய சூழலில் இரட்டை இலை செயல்படாமல் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை, கூடவே இருந்து காப்பாற்றிய பன்னீர்செல்வத்தையே அவர் வெளியேற்றியிருக்கிறார். தற்போது வேறு வழியின்றி கட்சிக்காக பன்னீர்செல்வம் போராடிவருகிறார்.

அ.தி.மு.க-வின் எதிர்காலம் நீதிமன்றத்தில் இருப்பதுபோல மாற்றியது எடப்பாடி பழனிசாமிதான். அவர் அ.தி.மு.க-வை பலவீனப்படுத்துவது திமுக-வுக்குத்தான் லாபமாக அமையும். தன்மீது தி.மு.க எந்த வழக்கும் போட்டுவிடக் கூடாது என்பதற்காக பழனிசாமி இறங்கியிருக்கிறார். துரோகம், சுயநலம் என எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுவருகிறார். எனவே, எடப்பாடி பழனிசாமிக்கு வீழ்ச்சி ஏற்பட்டால் அதிமுக-வுக்கும், தமிழகத்துக்கும் ஜனநாயகத்துக்கும் நன்மையாக அமையும். பன்னீர்செல்வமும் நானும் வாய்ப்பு கிடைக்கும்போது சந்திப்போம்.

கருணாநிதி குடும்பம், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் ஆக்டோபஸ்போல அனைத்துத் துறைகளிலும் தங்கள் குடும்பம்தான் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். தற்போது அது போன்றுதான் நடந்துவருகிறது. தங்கள் குடும்பம் கூறுவதைப்போலத்தான் திரைப்படங்களை வெளியிட வேண்டும் எனத் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் சர்வாதிகாரம் செய்துவருவதாகவும், உண்மையிலேயே ரெட் ஜெயன்ட் நிறுவனம் அரக்கன்போல் செயல்படுவதாகவும் கூறிவருகின்றனர். இதற்கான நல்லதொரு முடிவை காலம் தரும்.

பழனிசாமி ஆட்சியிலிருந்து இறங்க வேண்டும் என எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கூறியபோது நான் ஆதரவு தெரிவித்ததற்குக் காரணம் சுயநலமோ, எங்களுக்கு துரோகம் செய்துவிட்டாரோ என்பதோ கிடையாது. எடப்பாடி பழனிசாமி கையில் ஆட்சி இருந்தால் அதிமுக-வை அழித்துவிடுவார் என்பதற்குத்தான். நான் அதிமுக-வை மீட்டெடுப்பேன் எனக் கூறிய நிலையில், அது தானாகவே நடந்துவிடும். எடப்பாடி பழனிசாமியைத் தோளில் தூக்கிவைத்திருந்தவர்கள், கீழே போட்டு மிதிப்பதற்கான காலமும் விரைவில் வரும்" என்றார்.