Published:Updated:

`கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகணும்!’ - புகழேந்தியைச் சாடிய தினகரன்

சசிகலா சட்டப்படி வெளிவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறோம். சிறை விதிகளை மீறியதாகப் பல பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று சந்தித்துப் பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மேதாவிகளுக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது. கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வரும்” என்று புகழேந்தியைச் சாடினார்.

பெங்களூரு புகழேந்தி
பெங்களூரு புகழேந்தி

``ஆர்.கே.நகர், உள்ளிட்ட ஒரு சில இடைத்தேர்தலைத் தவிர்த்து, அனைத்து இடைத்தேர்தல்களிலும் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது எதிர்பார்த்த ஒன்றுதான். அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணபலத்தால் இரண்டு தொகுதிகளில் ஆளும் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

2006 முதல் 2010 வரை நடந்த அனைத்து இடைத்தேர்தல்களிலும் அப்போது ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க தான் வெற்றி பெற்றது. ஆனால், 2011-ம் ஆண்டு அது தலைகீழாக மாறியது. ஜெயலலிதா அவர்கள் மாபெரும் வெற்றி பெற்றார்கள். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பதிவுசெய்வது குறித்த விசாரணை முடிவடைந்துள்ளது. விரைவில் பதிவு எண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயம் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் போட்டியிடும்” என்றார்.

புகழேந்தி குறித்த கேள்விக்கு பதிலளித்த டி.டி.வி.தினகரன், ``மேதாவிகளுக்கெல்லாம் பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. கத்திரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும். விரைவில் அது வெளி வரும். இந்தியாவைப் பொறுத்தவரை இரண்டு பெரிய கட்சிகள், பா.ஜ.க-வும் காங்கிரஸும்தான். தோல்விகளைச் சந்தித்தாலும் இப்பெரு இயக்கங்களும் அதிலிருந்து மீண்டு வெற்றியைப் பெறுவார்கள் என்பதுதான் இயற்கை. சசிகலா, சட்டப்படி வெளிவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். சிறை விதிகளை மீறியதாகப் பல பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

டி.டி.வி. தினகரன்
டி.டி.வி. தினகரன்

வினய் குமார் அளித்த அறிக்கையில்கூட சசிகலா மீது எந்த விதமான குற்றச்சாட்டும் கூறவில்லை. சசிகலா பதில் சொல்ல முடியாத நிலையில் உள்ளே இருக்கிறார் என்பதால், இங்கு சிலர் பேசிவருகிறார்கள். பணபலத்தாலும் தி.மு.க-வின் திறமையின்மை காரணமாகவும் 2 இடைத்தேர்தலில் இவர்கள் வெற்றிபெற்றிருக்கிறார்கள். மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, அவர்களை அழைத்துப் பேசி உரிய நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும். மருத்துவர் பணி இன்றியமையாத ஒன்று. நோயாளிகளின் உயிரோடு யாரும் விளையாடக் கூடாது. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதாக இருந்தால், அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு