Published:Updated:

`தந்தை பெரியார் தனி மனிதர் அல்லர்; பெரிய இயக்கம்!' - டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தினகரன் கருத்து.

``பெரிய தலைவர்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு யோசித்துப் பல பேரிடம் உண்மை தகவல்களைக் கேட்டறிந்து பேசி இருக்கலாம். சுமார் 40 ஆண்டுக்கால முன்னணி நடிகர், இது போன்ற கருத்துகளை அவருடைய நண்பராகவும் ஆலோசகராகவும் இருக்கக்கூடிய தமிழருவி மணியனிடம் கேட்டு இருந்தால்கூட உண்மை நிலை தெரிந்திருக்கும்'' என்று டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறார்.

தினகரன்
தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தினகரன், அக்கட்சியின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் வேங்கடாசலத்தின் மூத்த மகன் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ``பகுத்தறிவு தந்தை, பகலவன் தந்தை பெரியார் சமூக நீதிப்போராளி, சாதியை எதிர்த்துப் போராடியவர். சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளைக் களையப் போராடியவர். பெண்களின் உரிமைக்காகவும் அவர்களின் கல்விக்காகவும் போராடியவர். அவரைப் பற்றி இன்னும் எவ்வளவோ சொல்லலாம். அவ்வளவு பெருமைக்குரியவரை ஆட்சி, அதிகாரத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சமுதாயம் மேம்பட வேண்டும் என்பதற்காகத் தன் இறுதி மூச்சு வரை போராடிய சமூகப் போராளி.

அவர் பன்முகத்தன்மை உடையவர். கடவுள் நம்பிக்கை உடையவர்கள்கூட அவரை யாரும் குறைசொல்ல முடியாத உதாரண புருஷனாக,எல்லோராலும் மதிக்கப்படுகின்ற தலைவராக நம்மிடையே வாழ்ந்து மறைந்த தலைவர். அவரைப் பற்றி பேசும்போது தவறான தகவல்களின் அடிப்படையில் உண்மைக்குப் புறம்பான அடிப்படையில் ரஜினிகாந்த் பேசியிருப்பது உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது. கண்டனத்துக்குரியது.

ரஜினி சொன்னது என்ன... 1971 சேலம் ஊர்வலத்தில் நடந்தது என்ன..? துக்ளக் செய்தி... முழு விவரம்!

தந்தை பெரியார் என்பவர் தனி மனிதர் அல்லர்; அவர் ஒரு பெரிய இயக்கம். தமிழ்நாட்டு மக்களுக்காகத் தமிழர் நலனுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உழைத்த மாபெரும் தலைவரைப் பற்றி ரஜினி பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்ற பெரிய தலைவர்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு யோசித்துப் பல பேரிடம் உண்மை தகவல்களைக் கேட்டறிந்து பேசியிருக்கலாம். சுமார் 40 ஆண்டுக்கால முன்னணி நடிகர், இதுபோன்ற கருத்துகளை அவருடைய நண்பராகவும் ஆலோசகராகவும் இருக்கக்கூடிய தமிழருவி மணியனிடம் கேட்டு இருந்தால்கூட உண்மை நிலை தெரிந்திருக்கும்.

தினகரன் வெங்கடாசலம்
தினகரன் வெங்கடாசலம்

அந்தக் காலகட்டத்தில் சிறுவர்களாக இருந்த நாங்களே, அதைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறோம். பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைக்கு எதிரானவர்கள்கூட பெரியாரை மதிப்பவர்கள் தான். ஆனால், இதுபோன்ற கருத்துகள் கண்டனத்துக்குரியது. எடப்பாடி ஆட்சி ஒரு கம்பெனிபோல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், காவல்துறை அதிகாரிகள் குற்றச் சம்பவங்களைத் தடுக்கக் கவனமாகவும் சிறப்பாகவும் செயல்பட வேண்டும்.

சசிகலா இன்று வருகிறார், நாளை வருகிறார் என்று சில ஊடகங்கள் புரளியைக் கிளப்புகிறார்கள். பெரியாரைப் பற்றி உண்மைக்குப் புறம்பான பொய்யான தகவலைப் பரப்பியது போல இதுவும் பொய்யான செய்தி. ஆனால், சசிகலா வெளியே வர சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். உரிய நேரத்தில் வெளியே வருவார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைக் கண்டு அ.தி.மு.க பயப்படுகிறது. எங்க சித்தியும் நானும் என்றைக்கும் இந்தத் துரோகிகளோடு இணைவதற்கான வாய்ப்பில்லை. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் உண்மையான அம்மா ஆட்சியைக் கொண்டு வருவோம். புரட்சித் தலைவர் உருவாக்கிய கட்சியை மீட்டெடுக்கும் ஜனநாயக ஆயுதம்தான் எங்க இயக்கம். வரும் சட்டமன்றத் தேர்தலில் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு