Published:Updated:

வேலூரில் ஏன் போட்டி இல்லை?- டி.டி.வி.தினகரனின் லாஜிக்

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதது குறித்தும் நீட் தேர்வு மசோதா நிராகரிக்கப்படவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தது குறித்தும் டி.டி.வி.தினகரன் பதில் அளித்துள்ளார்.

தினகரன்
தினகரன்

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

நீட் தேர்வு சம்பந்தமாக இரண்டு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதற்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மசோதா நிராகரிக்கப்படவில்லை, நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார். இது ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறதா?

அமைச்சர் சி.வி.சண்முகம்
அமைச்சர் சி.வி.சண்முகம்

நீதிமன்றத்தில் நீட் தேர்வு மசோதா நிராகரிக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசே சொல்லியிருக்கிறது. எதற்கு அவர் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. நிராகரிக்கப்பட்டதுதான் உண்மை.

தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை அதிகமாக இருக்கிறது. அரசு எடுக்கும் முடிவு திருப்திகரமாக இருக்கிறதா?

தண்ணீர்
தண்ணீர்

இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே சரியாக மழை இல்லை. சராசரியைவிட குறைவாக இருந்தது. இந்தாண்டு பெரிய குடிநீர் பஞ்சம் வரும் என்று எல்லாேருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், இந்த அரசு சரியாகக் கையாளவில்லை என்பதுதான் தமிழக மக்களின் கருத்து. தண்ணீர் பஞ்சம் என்று மக்கள் கேட்டாலே அமைச்சர் கோபித்துக்கொள்கிறார். தண்ணீர் பஞ்சம் கிடையாது. தண்ணீர் தட்டுப்பாடு என்று கூறுகிறார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது உண்மை. இந்த அரசு குடிநீர் விஷயத்தில் மிகவும் கவனத்துடன் இருந்து மழை வரும் வரை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்க நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து?

தினகரன்
தினகரன்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்குதான் கெட்டுப்போய் கிடக்கிறதே. இந்த ஆட்சியை ஜெயலலிதாவின் ஆட்சி என்கிறார்கள். ஜெயலலிதாவின் ஆட்சி என்றால் இப்படி நடக்குமா? 9 சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற காரணம் என்ன என்பது உங்களுக்குத் (பத்திரிகையாளர்களை பார்த்து) தெரியும். தமிழகத்தின் தேர்தல் முடிவு எதைக்காட்டுகிறது என்பதும் உங்களுக்குத் தெரியும். எதனால் வெற்றி பெற்றார்கள் என்பதும் தெரியும். 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று அவர்கள் மார்தட்டிக்கொண்டு இருக்காங்களே தவிர, இந்த ஆட்சி மக்கள் விரும்பாத ஆட்சி என்பது வருங்காலத்தில் நிச்சயம் வெளிப்படும்.

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று நீங்கள் அறிவித்தபோது பல்வேறு பத்திரிகைகளில், தேர்தலில் போட்டியிட தினகரன் பயப்படுகிறார் என்று எழுதப்பட்டது. உண்மையிலே உங்களுக்குப் பயமா?

கடைசி நேரத்தில் குக்கர் சின்னம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். கிடைக்கவில்லை. இதனால் பரிசுப்பெட்டி சின்னத்தை ஒரு மணி நேரத்தில் தேர்ந்தெடுத்தோம். இப்போது கட்சியைப் பதிவு பண்ணும் பணியில் இருக்கிறோம்.
டி.டி.வி.தினகரன்

விருத்தாசலத்தில் பத்திரிகையாளர்கள் கேட்டபோதே சொன்னேன். கட்சியைவிட்டு வெளியேறினவர்கள்கூட குறை சொன்னார்கள். அதற்கு முன்பு பத்திரிகைகளில், அ.தி.மு.க-வுக்காக கோர்ட்டில் போராடிக்கிட்டு தற்போது கட்சியைக் கேட்கிறார் என்று எழுதப்பட்டது. நாங்கள் கட்சியின் பெயரை தனியே ஆரம்பித்திருந்தால் அ.தி.மு.க-வையும் இரட்டை இலைச் சின்னத்தையும் பெற சட்டப்போராட்டம் நடத்த உரிமை இல்லாமல் போய் இருக்கும். கடந்த 2018ல் உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு ஆர்டர் போட்டது. வேலைப்பளு காரணமாக தேர்தல் வரைக்கும் இழுத்தது. கடைசி நேரத்தில் குக்கர் சின்னம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். கிடைக்கவில்லை. இதனால் பரிசுப்பெட்டி சின்னத்தை ஒரு மணி நேரத்தில் தேர்ந்தெடுத்தோம். இப்போது கட்சியைப் பதிவு பண்ணும் பணியில் இருக்கிறோம். இந்த நேரத்தில் போய் தேர்தலில் நின்று என்ன சின்னம் கொடுப்பார்கள் என்று தெரியாது. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், கட்சியைப் பதிவு பண்ணுகிற வேலை முடிவதற்குள் மூன்று சின்னங்களில் போட்டியிடுகிற சூழ்நிலை உருவாகலாம். இது குழப்பத்தை ஏற்படுத்தும். பதிவு செய்யும் பணி முடிப்ந்ததும் இதன் பிறகு ஒரு சின்னத்தை பெற்றுப் போட்டியிடலாம். நிர்வாகிகளிடம் பேசிய பிறகுதான் வேலூரில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. கட்சியை பதிவு பண்ணும் பணியில் இருக்கும்போது தேர்தலில் போட்டியிடுவது சரியாக வராது என்பது எங்களுடைய முடிவு. ஒரு சின்னத்தில் எல்லாத் தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.

தொடர்ச்சியாக அ.ம.மு.க நிர்வாகிகள்மீதான பழைய வழக்குகள் தூசி தட்டப்பட்டு அ.தி.மு.க-வுடன் இணைக்கக்கூடிய சூழல் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீங்க. இது அ.ம.மு.க-வுக்கு பின்னடைவா?

தினகரன் பேட்டி
தினகரன் பேட்டி

எங்கள் கட்சியை லேட்டர் பேடு கட்சி என்றார்கள். காய்லான் கடைக்குப் போகிற கட்சி என்றார்கள். தினகரன் தனி மரம் என்றார்கள். ஒருவர் கட்சி உதிருகிறது என்றார். தொண்டர்களான வேர்கள் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கிறது. ஜெயலலிதாவின் தொண்டர்கள், இந்தக் கட்சியை நிலை நிறுத்த வேண்டும். மீண்டும் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை உருவாக்க வேண்டும். ஜெயலலிதாவின் கட்சியை மீட்டெடுக்கும் ஆயுதமாகத்தான் அ.ம.மு.க இருக்கிறது. சட்டப்போராட்டத்தில் அவர்கள் ஜெயித்திருக்கிறார்கள். மக்கள் மன்றத்தில் நாங்கள் தொடர்ந்து போராடி அ.தி.மு.க-வை மீட்போம். சொந்தக்காரணத்துக்காகவும் சுயநலத்துக்காகவும் வேறு கட்சிக்குப் போயிருக்கிறார்கள். ஒரு கட்சியில் சுய விருப்பத்தின் பேரில் பணியாற்றினால்தான் சரியாக இருக்கும். நாங்கள் மறுபடியும் ஜெயிக்க மாட்டோம் என்று அவர்கள் போயிருக்கலாம். வந்தவுடன் எம்.எல்.ஏ, எம்.பி ஆகணும் என்று எங்களுடன் வந்திருக்கலாம். இப்பாேது எங்களுடன் இருப்பவர்கள்தான் வலுவான தூண்கள்.