அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

டி.டி.வி.தினகரன் பல்டிகள்!

டி.டி.வி.தினகரன் பல்டிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
டி.டி.வி.தினகரன் பல்டிகள்!

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தைப் பிடித்திருக்கிற சனி (எடப்பாடியின் ஆட்சியைக் குறிப்பிட்டு) எப்போது விலகும் எனக் காத்திருந்தீர்கள்.

`அ.தி.மு.க-வை மீட்பதே லட்சியம்’ என்கிற முழக்கத்தோடு 2018, மார்ச் 15-ம் தேதி, `அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார் டி.டி.வி.தினகரன். தற்போது, ``தி.மு.க-வை வீழ்த்த அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கத் தயாராக இருக்கிறோம்’’ என்கிற இடத்தில் வந்து நிற்கிறார். இந்த ஐந்தாண்டுக்கால இடைவெளியில், அ.தி.மு.க., இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் என மாறி மாறிக் கூட்டணி வைப்பது குறித்து டி.டி.வி.தினகரன் கொடுத்த கலர் கலரான ஸ்டேட்மென்ட்டுகளும், அவர் அடித்த விதவிதமான பல்டிகளும் இங்கே...

டி.டி.வி.தினகரன் பல்டிகள்!

``அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் இயக்கத்தை துரோகிகளிடமிருந்து மீட்டெடுப்பதற்கே நாம், `அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ எனும் இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறோம். துரோகிகள் பன்னீர்செல்வம், மதுசூதனன் கொடுத்த மனுவால் தேர்தல் ஆணையம் அ.தி.மு.க என்கிற பெயரையும் வெற்றிச் சின்னமாகிய இரட்டை இலைச் சின்னத்தையும் முடக்கியது.’’ - மார்ச் 15, 2018 அ.ம.மு.க தொடக்கவிழா

``விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் ‘அமைதிப்படை’ பன்னீர்செல்வம். இந்த இடைத்தேர்தலோடு அந்தக் கூடாரமே காலியாகிவிடும். அவர்களுக்கு இனி அரசியல் வாழ்வே கிடையாது.’’ - செப்டம்பர் 01, 2018 தேர்தல் பிரசாரம்

``முதல்வர் பதவி இனி கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிற விரக்தியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் பேசிவருகிறார், ஓ.பன்னீர்செல்வம்.’’ - செப்டம்பர் 02, 2018 பத்திரிகையாளர்கள் சந்திப்பு

“பன்னீர்செல்வம் மிகவும் நிதானமானவர், எல்லா முடிவுகளையும் யோசித்துத்தான் எடுப்பார்.’’ - மார்ச் 07, 2022 பத்திரிகையாளர்கள் சந்திப்பு

டி.டி.வி.தினகரன் பல்டிகள்!

``கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தைப் பிடித்திருக்கிற சனி (எடப்பாடியின் ஆட்சியைக் குறிப்பிட்டு) எப்போது விலகும் எனக் காத்திருந்தீர்கள். நம்மைப் பிடித்திருந்த அந்த பீடைகள் ஒழிய, மத்திய-மாநில அரசுகள் என்கிற பீடைகள் ஒழிய நல்லதொரு வாய்ப்பாக நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்ற இடைத்தேர்தலும் வந்திருக்கின்றன.’’ - மார்ச் 28, 2019 தேர்தல் பிரசாரம்

``நம்பிக்கை துரோகத்துக்கு மன்னிப்பே கிடையாது. அம்மாவுடைய கட்சியை மீட்டெடுக்கப்போவதுதான் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்.’’ - ஜூலை 30, 2022 மதுரை பொதுக்கூட்டம்.

``தி.மு.க என்கிற தீயசக்தியை எதிர்ப்பதற்காக, 2021 சட்டமன்றத் தேர்தலிலேயே விட்டுக்கொடுத்து கூட்டணிவைக்கத் தயாராக இருந்தேன். அ.ம.மு.க-வைப் பொறுத்தவரை தி.மு.க-வை வீழ்த்த அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைக்கத் தயாராக இருக்கிறோம்.’’ - அக்டோபர் 13, 2022 பத்திரிகையாளர்கள் சந்திப்பு

``பா.ம.க-வுடனும் தே.மு.தி.க-வுடனும் கூட்டணி வைக்கிறதுக்கு, ராமதாஸ் வார்த்தையில சொல்லணும்னா ‘நடு ரோட்டுல இருக்குற எலெக்ட்ரிக் போஸ்ட்ல தூக்கு மாட்டிக்கிட்டுத் தொங்கலாம்’.’’ - மார்ச் 29, 2019 வாலாஜாபேட்டை பிரசாரக் கூட்டம்.

டி.டி.வி.தினகரன் பல்டிகள்!

``தே.மு.தி.க-வுடன் கூட்டணிக்கு அழைப்பு கொடுத்தோம். அதிலென்ன தவறு. தீயசக்தி தி.மு.க கூட்டணியையும், துரோக சக்தி அ.தி.மு.க கூட்டணியையும் தோற்கடிப்பதற்கு எல்லாக் கட்சிகளுடனும் பேசினோம்.’’ - மார்ச் 17, 2021 பத்திரிகையாளர்கள் சந்திப்பு

``தேசியக் கட்சிகளுடன் நாங்கள் கூட்டணிவைக்க வாய்ப்பில்லை.’’ - ஜனவரி 29, 2019 பத்திரிகையாளர்கள் சந்திப்பு, சென்னை

``அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒரு மாநிலக் கட்சி. நாம் தனித்து நின்று ஒரு பயனுமில்லை. பிரதமர் வேட்பாளரை நாம் அறிவிக்க முடியாது. அதனால் இந்தியாவின் பிரதமரை உருவாக்குகிற இரண்டு தேசியக் கட்சிகளில் ஒரு தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது உறுதி.’’ - ஆகஸ்ட் 15, 2022 கட்சி பொதுக்குழு

“அ.தி.மு.க-வை மீட்டெடுத்து சசிகலாவை பொதுச்செயலாளராக ஆக்குவோம்.’’ - ஏப்ரல் 21, 2022

``அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதில் சசிகலாவின் பாதை வேறு; என்னுடைய பாதை வேறு.’’ - ஜூன் 09, 2022

``நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது ‘ஸ்லீப்பர் செல்கள்’ வெளியே வருவார்கள். தேவையில்லாத விஷயத்தை, பொய்யான தகவலைப் பரப்பவேண்டிய அவசியம் எனக்கு இல்லை’’ - அக்டோபர் 09, 2017

டி.டி.வி.தினகரன் பல்டிகள்!

“ஸ்லீப்பர் செல் தேவையான நேரத்தில் வருவார்கள்.” - ஜனவரி 31, 2021

``சிறுபான்மையினருக்கு அச்சம் தரக்கூடிய பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறார்கள். தமிழகத்தில் என்றைக்கும் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்ற நிச்சயம் விட மாட்டோம். தமிழகத்தைப் பிரித்தாள்கிற, சூழ்ச்சி செய்கிற பா.ஜ.க-வுடன் என்றைக்கும் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம்.’’ -ஜூன் 08, 2018

``பகவத் கீதையைப் பாடத்திட்டத்தில் கொண்டு வருவதில் தவறில்லை. அதை மதம் சார்ந்த விஷயமாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அதைப் பிரச்னையாக்க வேண்டாம்.’’ - அக்டோபர் 02, 2019

``சனாதன தர்மம் குறித்து இப்போது பேசவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது... இதைச் சொன்னால் என்னை இந்துத்துவா ஆதரவு என்று சொல்கிறார்கள். பி.ஜே.பி-யை தமிழ்நாட்டில் வளர்ப்பதே திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலினும், அண்ணன் திருமாவளவனும்தான். எதற்கெடுத்தாலும் இந்துக்களைத் தாக்குறது.’’ - அக்டோபர் 12, 2022