நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க தனித்துப் போட்டியிடப்போவதாக அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகளிலுள்ள 1,064 வார்டுகள், 138 நகராட்சிகளிலுள்ள 3,468 வார்டுகள், 490 பேரூராட்சிகளிலுள்ள 8,288 வார்டுகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது என மாநில தேர்தல் ஆணையர் அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ``நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க தனித்துப் போட்டியிடும். தேர்தல் என்பது ஜனநாயகப் போர்க்களம். அதில் போட்டியிட்டு வெற்றிபெற முயல்வோம். தேர்தலில் தோற்றுவிட்டால் விட்டுச் செல்வதற்கு இது ஒன்றும் வியாபாரம் இல்லை. முழுமூச்சுடன் போராடுவோம்" என்று தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதைத் தொடர்ந்து பேசிய அவர், ``கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று தமிழகத்தில் வேகமாகப் பரவிவரும் நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது ஆளுங்கட்சியின் இயலாமை. எனவே, மார்ச் மாதங்களில் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரை செய்யலாம்" என்றார்.

அதையடுத்து, நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க குறித்துக் கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``அ.தி.மு.க குறித்து நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கும் கருத்து சரியானதுதான். ஆனால், அந்த வார்த்தைதான் தவறானது" என்று கூறினார்.