Published:Updated:

தொடர்ந்து முடக்கப்படும் காங்கிரஸ் கட்சியினரின் ட்விட்டர் கணக்குகள்; என்ன காரணம்?

ட்விட்டர் கணக்கு முடக்கம்
ட்விட்டர் கணக்கு முடக்கம்

ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தில் குறிப்பாக ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பர். அண்மையில் டெல்லியில் உள்ள ஒன்பது வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். ராகுல் காந்தி அந்த சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, நீதி கிடைக்கத் துணையாக இருப்போம் என்று கூறினார். அவர்களைச் சந்தித்த புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Twitter

போக்ஸோ சட்டத்தின்படி, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம், அவர்களின் பெற்றோர்களின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதோ, வெளியிடுவதோ குற்றமாகும். ராகுல் காந்தி புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்தது தொடர்பாக, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ராகுல் காந்தி விதிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கக் கடிதம் எழுதியது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கத்திலிருந்த அந்த புகைப்படம் நீக்கப்பட்டது. மேலும், அவரின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களான அஜய் மக்கான், ஜிதேந்திர சிங், மாணிக்கம் தாகூர், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, சுஷ்மதா தேவ் போன்றவர்களின் ட்விட்டர் கணக்குகளும் பல்வேறு விதிமுறை மீறல் காரணங்கள் கூறி முடக்கப்பட்டது. தற்போது விதிமுறைகளை மீறியதாக, காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தையும் ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

ரோஹன் குப்தா
ரோஹன் குப்தா
Twitter

இந்த சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவுத் தலைவர் ரோஹன் குப்தா, ``மத்திய அரசின் அழுத்தத்தின் பிடியில் ட்விட்டர் நிறுவனம் இப்படிச் செயல்படுகிறது. இது இரட்டை நிலைப்பாடு. விதிமுறை என்றால், பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் ட்விட்டர் கணக்கில் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை அந்த சிறுமியின் பெற்றோர் புகைப்படம் இருந்ததே. நாடுமுழுவதும் ஐந்தாயிரம் காங்கிரஸ் தொண்டர்களின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறியதால் முடக்கிவிட்டோம் என்று அந்நிறுவனம் விளக்கம் அளிக்கிறது. மக்களின் குரலாக நாங்கள் இருப்பதை யாராலும் தடுக்க முடியாது" என்று பேசினார்.

`பெகாசஸ் விவகாரம்' மறுப்பதற்கு இரண்டு வாரங்களா? - மத்திய அரசின் அணுகுமுறைக்குப் பின்னால்?

ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட விசாரணையை நீதிபதிகள் வரும் செப்டம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு